\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2018-ஆம் நிகழ்வுகள்

மெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் நவம்பர் 30ஆம் தேதி, ஹூஸ்டனில் காலமானார். ஜூன் 12, 1924 ஆம் ஆண்டு பிறந்த புஷ், 1967 முதல் பல அரசுப் பதவிகளை வகித்து வந்தவர். 1981 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக செயல்பட்டார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமெரிக்காவின் 41ஆவது அதிபராக 1989 முதல் 1993 வரை பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் தான் சதாம் ஹூசேனுக்கு எதிரான ஈராக் யுத்தம் நடந்தது.  94வயதில் மறைந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ்ஷும் இதே ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் இறந்தார். இவரது மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43 ஆவது அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*******

மெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னும் பேச்சு வார்த்தை நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதியன்று நடைபெற்றது. மார்ச் 2018 வரை இவர்கள் இருவரும் மிகக் கடுமையான சொற்போர் நிகழ்த்தி ஒருவரையொருவர், சமூக ஊடகங்களில் தாக்கி வந்தனர்.  அமேரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்ற சமயத்தில், வடகொரியா நேசக் கரங்களை நீட்டி போட்டிகளில் பங்கேற்றதுடன், துவக்க நாளன்று இரு நாட்டு வீரர்களும் இணைந்து அணிவகுத்து அமைதிக்கு வழிவகுத்தனர். அதன் நீட்சியாகவே ஜூன் 12 உச்சி மாநாடு சாத்தியப்பட்டது.


இதன் காரணமாக வடகொரியா அணு ஆயுத சோதனைத் திட்டங்கள் மட்டுப்பட்டு, அமெரிக்கா தென் கொரியாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கைகள் அரங்கேறி மூன்றாம் உலக யுத்தத்தைத் தவிர்த்தன.  

****************

வேல்ஸ் இளவரசரான சார்லஸ், இளவரசி டயானா ஆகியோரின் இரண்டாம் மகனான இளவரசர் ஹாரி, மே மாதம் 19ஆம் தேதி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவைத் திருமணம் செய்துகொண்டார். விண்ட்சரில். செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

சசக்ஸ் இளவரசர் ஹாரியை திருமணம் செய்தது மூலம், இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசியாகியிருக்கும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றார் மேகன்.

**************

2018ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தென் கொரியாவின் பியோங்சங்கில் ஃபிப்ரவரி 9 முதல் ஃபிப்ரவரி 25 வரை நடைபெற்றது. 92 நாடுகளிலிருந்து ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். பனி ஹாக்கி விளையாட்டில், பெண்களுக்கான பிரிவில், வட-தென் கொரிய வீராங்கனைகள் ஒரே அணியாக இணைந்து விளையாடியதும், துவக்க நாளன்று இரு நாட்டு வீரர்களும் பொதுவான கொடியைச் சுமந்து வந்ததும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.


நார்வே 14 தங்கம் , 14 வெள்ளி, 11 வெண்கலமென மொத்தமாக 39 பதக்கங்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. ஜெர்மனி முறையே 14, 10,  7 என மொத்தம் 31 பதக்கங்களையும், கனடா 11, 8, 10 என மொத்தம் 29 பதக்கங்களையும் வென்று இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.

**********

2018 FIFA world cup – 32 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற்றன. அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் குரேஷியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

************

பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், ஃப்ளாரிடா மாநிலத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர் என 17 பேர் மாண்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய பள்ளியின் முன்னாள் மாணவனான நிகோலஸ் க்ரூஸ் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் க்ருஸின் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவனாக திரிந்துள்ளான் க்ரூஸ். 19 வயது நிரம்பியிருந்த க்ருஸ் 2017 துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்று, முறையாக துப்பாக்கி வாங்கியுள்ளான் என்ற தகவல், நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டினைக் கடுமையாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை எழுப்பியது. அமெரிக்கப் பள்ளி மாணவர்களிடையே பெருங்கோபத்தையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கிய இச்சம்பவத்தைக் கண்டித்து Never Again MSD என்ற இயக்கம் துவங்கப்பட்டு, துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்தித்தது.  ஃப்ளாரிடாவில் அதுவரை 18 வயது நிரம்பியவர்க்கு வழங்கப்பட்டு வந்த துப்பாக்கி உரிமம், 21 வயதாக உயர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரையில் பெரிய சட்ட மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பது வருத்தத்துக்குரியது.


****************

ரிசோனா மாநிலம் சார்பாக 1987 முதல் மேலவை உறுப்பினராக பணியாற்றி வந்த செனட்டர்  ஜான் சிட்னி மெக்கெய்ன் ஆகஸ்ட் 25ஆம் நாள் தனது 81ஆவது வயதில் இயற்கை எய்தினார். அதற்கு முன்னர் 1983 முதல் 1987 வரை கீழவை உறுப்பினராகவும் மெக்கெய்ன் இருந்துள்ளார். 1967 இல் வியட்நாம் போரில், இவரது விமானம் குண்டுகளால் சேதமடைந்துவிட வியட்நாம் படையினரால் போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். பல சித்திரவதைகள் அனுபவித்த பின்னரும் அமெரிக்க நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளியிடாதிருந்தார். ஜானின் தந்தை அமெரிக்க ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்ததை அறிந்து, அவரை விடுதலை செய்ய வியட்நாம் முன்வந்தது. ஆனால், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யாவிடின் தனக்கும் விடுதலை தேவையில்லை என்று மறுத்தார் ஜான் மெக்கெய்ன். 2000 மற்றும் 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களில் போட்டியிட முனைந்து தோல்வியுற்றார் மெக்கெய்ன். 2017 ஆம் ஆண்டு அதிபர் ட்ரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த மலிவான சுகாதார திட்டத்தை (Affordable Health Care) ரத்து செய்ய முனைந்தபோது, சொந்தக்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஏழை எளியோருக்கான திட்டத்தை ரத்து செய்தல் கூடாது என்று துணிச்சலாக எதிர்த்தார் மெக்கெய்ன். இவரது ஓட்டு, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியதாக எதிர்க்கட்சியினர் உட்பட பெரும்பாலானோரின் பாராட்டைப் பெற்றார் ஜான் மெக்கெய்ன். போர்க் கைதியாக இவரடைந்த ‘மேவ்ரிக்’ பட்டம் தகுதியானதுதான் என்ற கருத்து அதன் பின்னர் வலுபெற்றது.

***************

க்டோபர் மாதம் 27ஆம் தேதி, பிட்ஸ்பர்கிலுள்ள யூதர் ஜெபக்கூடத்தில், யூதர்களுக்கெதிரான கோஷங்களை எழுப்பியவாறு உள்ளே நுழைந்த ஒருவன் கூட்டத்தினரை நோக்கிச் சுட்டதில்  11 பேர் மாண்டனர். தாக்குதல் நடத்திய ராபர்ட் போவர்ஸ் வெள்ளையர் இனவாதம் மற்றும் நாஜி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவனென்றும், அந்நிய நாட்டினரின், குறிப்பாக யூதர்களின் குடியேற்றத்தை வெறுத்தவன் என்றும் தெரியவந்தது. வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய கோரமான வன்முறை நிகழ்த்திய ராபர்ட்டை போலீசார் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.


ராபர்ட்டைப் போலவே அந்நியர்களின் வருகையே அமெரிக்கப் பொருளாதாரத்திற்குக் கேடு விளைவிக்கிறது எனும் இனவாத வெறியுடன், அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து வந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் மூலம் குழாய் வெடிகுண்டுகளை அனுப்பி வைத்த சீசர் செயோக் என்பவன் அக்டோபர் 26ஆம் நாள் கைது செய்யப்பட்டான்.  அதிபர் ட்ரம்பின் அதிரடி திட்டங்களால் கவரப்பட்ட இவன், முறையற்ற வகையில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டால் தான் அமேரிக்கா மீண்டும் சிறப்படையும் (Make America Great Again) என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதை எதிர்க்கும் ஜனநாயகவாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கவே வெடிகுண்டுகளை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளான்.

***************

தாய்லாந்தின், தாம் லுவாங் குகைக்குச் சாகசப் பயணம் மேற்கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளர் என 13 பேர் கொண்ட குழுவினர் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். ஜூன் மாதம் 23ஆம் தேதி இவர்கள் குகைக்குள் இறங்கி சில கிமீ தூரம் சென்றபின்பு பெய்த கனத்த மழையால் குகைக்குள் தண்ணீர் நிரம்பத்தொடங்கியது. இதனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகுதான் இவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர் என்பதை வெளியுலகம் அறிந்தது. ஏறத்தாழ 20 தினங்கள் கழித்து, ஜூலை 12 ஆம் நாள், பல நாடுகளின் உதவியுடன் இவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர் தாய்லாந்து ராணுவத்தினர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவர்களுக்கு வெளியிலிருந்து உணவு எடுத்துச் சென்று தந்துவிட்டு திரும்புகையில் தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீரர் சமன் ககன், பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் வடியும்வரை காத்திராமல், வியக்கும் வகையில்  சிறுவர்களையும், பயிற்சியாளரையும் குகையிலிருந்து காப்பாற்றிய தாய்லாந்து, பிற நாட்டு இடர் மீட்பாளர்களின் பணி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

***

பேஸ்புக் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதனை கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் 2016 அதிபர் தேர்தல் சமயத்தில் அப்போதைய வேட்பாளரான டானல்ட் ட்ரம்புக்கு அளித்து தேர்தலில் வெற்றிபெற உதவியதாகவும் மார்ச் மாதத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. சேனல் 4, நியுயார்க் டைம்ஸ் உட்பட சில பத்திரிகைகளில் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவின் முன்னாள் ஊழியர் ஒருவர் இதனை வெளிப்படுத்திய பின்னர், இந்த ‘தகவல் பகிர்தல் ஊழல்’ பல நாடுகளிலும் அரங்கேறியுள்ளது தெரிய வந்தது. பல வாரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு பேஸ் புக்கின் மார்க் சூகர்பர்க், அமெரிக்க காங்கிரஸ் முன்னர் தங்கள் நிலையை விளக்கி மன்னிப்புக் கோரினார். அது மட்டுமல்லாது, வருங்காலத்தில், வாடிக்கையாளர் அனுமதியின்றி அவர்களது தகவல் வெளியில் பகிரப்படாது என்ற வாக்குறுதியினையும் அவர் அளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் மார்க்கை விசாரனைக்கு உட்படுத்த முயன்று வருகின்றன.

*********

மே மாதம் 5ஆம் நாள், கலிஃபோர்னியாவின் வேண்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் ரோபோ விண்கலம் நவம்பர் 27ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. சுமார் ஏழு மாதங்கள் ஏறத்தாழ 300 மில்லியன் மைல்கள் பயணித்த இந்த விண்கலம் அட்லஸ் 401 எனும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. செவ்வாய்க் கிரகத்தின் அமைப்பு, அதிர்வுகள், வெப்பநிலை போன்றவற்றை ஆராயும் பொருட்டு அனுப்பப்பட்ட இன்சைட், 2020 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

**********

க்டோபர் மாதம் 29 ஆம் தேதி, இந்தோனேசியாவின், ஜகார்தா நகரிலிருந்து மற்றொரு நகரமான பினாங்குக்குக் கிளம்பிய லயன் ஏர் விமானம் செயலிழந்து கடலில் விழுந்ததில் விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்தோனேசிய அரசின் தலைமை ஊழியர்கள், நீதிபதிகள் என 38 பயணிகள் ஒட்டு மொத்தமாகப் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் சர்ச்சையாக உருவானது. கடலில் விழுந்ததால், விமானத்தின் கருப்பு பெட்டி, இறந்தவர்களின் உடல்களை மீட்பதிலும் இன்னமும் சிக்கல் நீடித்துவருகிறது.

**********

ந்தாண்டு  நவம்பர் மாதம் ஆறாம் தேதி, 435 கீழவை பிரதிநிதிகளுக்கும்   100 உறுப்பினர்கள் அடங்கிய மேலவையின் 35 அங்கத்தினருக்கான வெற்றிடங்களை நிரப்பும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவை தவிர 36 மாநிலங்களின் ஆளுநர் தேர்தலும் அதே தினத்தன்று  நடந்தது. இத்தேர்தலின் முடிவில் கீழவையில் ஜனநாயகக் கட்சியினர் 228 பிரதிநிதிகளையும் குடியரசுக் கட்சியினர் 199 பிரதிநிதிகளையும் தனிக்கட்சியினர் 8 பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். மேலவையில் குடியரசுக் கட்சியினர் 51 உறுப்பினர்களையும், ஜனநாயகக் கட்சியினர் 47 உறுப்பினர்களையும், தனிக்கட்சியினர் 2 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

**********

சூப்பர் போல் எனப்படும் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டின் வருடாந்திர இறுதி சுற்று, 2018 மினசோட்டாவின் யு.எஸ். பாங்க் விளையாட்டரங்கில் ஃபிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் மற்றும் நியு இங்கிலான்ட் பேட்ரியட்ஸ் அணியினருக்கிடைய நடைபெற்ற போட்டியில் ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் அணியினர் முதன் முறையாக  வெற்றிபெற்று சரித்திரம் படைத்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் இவ்விளையாட்டைக் காண மினசோட்டாவுக்கு வருகை புரிந்தனர். இதனால் இரட்டை நகரமான மினியாபோலிஸ், செயின்ட் பால் நகரங்களுக்கு ஏறத்தாழ 800 மில்லியன் டாலர்கள் வியாபார வருமானம் கிடைத்திருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. மாநில வரியாக, மினசோட்டாவுக்கு, கூடுதலாக 32 மில்லியன் கிடைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

 

  • ரவிக்குமார் –

 

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad