துணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள்
இன்னும் சில நாட்களில், பார்க்குமிடமெல்லாம் ‘ஹாப்பி நியு இயர்’ கோஷம் ஒலிக்கப்போகிறது. உலக நகரங்களில் ‘கவுண்ட் டவுன்’ கோலாகலமாக கொண்டாடப்படும். முடியப் போகும் 2018 ஆம் ஆண்டைப் பற்றிய ஒரு விசேஷம் தெரியுமா? இந்த ஆண்டு திங்கட்கிழமையன்று தொடங்கி (ஜனவரி 1) திங்களன்றே முடிகிறது. (டிசம்பர் 31). பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விசித்திரத்தை 2029 இல் மீண்டும் காணலாம். மேலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கும் போது ஆண்டுகளில் அதிர்ஷ்டமில்லா தினமாக கருதப்படும் ‘ஃப்ரைடே த தர்ட்டீன்த்’ (Friday the 13th) இரண்டு முறை தோன்றுவதும் இந்த ஆண்டு மற்றும் வருமாண்டின் தனித்தன்மை.
சரி, உலகமெங்கும் பரவலாகக் கடைபிடிக்கப்படும் கிரிகோரியன் காலண்டர் பற்றிய வரலாறு தெரியுமா?
கிமு 46 முதல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் அறிமுகப்படுத்திய ஜூலியன் நாட்காட்டி கணக்கு முறையே பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி ஆண்டுக்கு 365.25 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. துல்லியமாகப் பார்க்கப் போனால் இது ஆண்டுக்குப் 11 நிமிடங்கள் அதிகமாகும். இதனால் சில நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக 3 தினங்கள் உதித்தன. மேலும் ஈஸ்டர் தினத்தைக் கணக்கிட பயன்படும் ‘சம இரவு பகல் நாள்’ (Equinox day) ஒவ்வொரு ஆண்டும் தள்ளிக்கொண்டே போனது. இதனைச் சீர்படுத்திப் புதுப்பிக்க 1572இல் போப் பதிமூன்றாம் கிரகோரி ‘கவுன்சில் ஆஃப் டிரென்ட்’ (Council of Trend) அமைப்பை உருவாக்கினார். இந்தக் குழுவின் பரிந்துரைப்படி உருவானது தான் ‘கிரகோரியன் காலண்டர்’. புனித வெள்ளி, மற்றும் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினங்களைக் கணக்கிடும் குறிப்புகளையும் இவர்கள் உருவாக்கித் தந்தனர். எனினும், கத்தோலிக்கத் திருச்சபை கொணர்ந்த இந்த மாற்றங்கள் 1752 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் உலக நாடுகள் பலவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றும் குறிப்பிட்ட பண்டிகை தினங்களைக் கணக்கிட ஜூலியன் காலண்டர் முறையைச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிய நாட்காட்டி (சோலார் காலண்டர்)
சூரியனின் நிலைப்பாட்டை இதர நட்சத்திரங்களின் அடிப்படையில் கணக்கிட்டு உருவாக்கப்படுபவை ‘சோலார் காலண்டர்’ எனப்படும். கிரகோரியன் காலண்டர் இந்த சூரிய நாட்காட்டி பிரிவினைச் சார்ந்ததாகும்.
சந்திர நாட்காட்டி (லூனார் காலண்டர்)
சந்திரனின் முழு தோற்றத்தை மாதத்தின் முதல் நாளாகவும், அதன் மறைவை மாதத்தின் கடைசி தினமாகவும் கொண்டு கணக்கிடப்படுவது ‘லூனார் காலண்டர்’ எனப்படும். இஸ்லாமியக் காலண்டரான ‘ஹிஜ்ரி காலண்டர்’ சந்திர நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டிபடி ஆண்டுக்கு 354 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது. நேபால், இந்தோனேசியா போன்ற சில நாடுகளும் சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன.
சந்திர சூரிய நாட்காட்டி (லூனிசோலார் காலண்டர்)
சந்திரனின் தோற்றத்தையும், சூரிய நேரத்தையும் அடிப்படையாகக் கொண்ட சந்திர சூரிய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஹிந்து, சீன, ஜப்பானிய, புத்த, ஜைன, ஹீப்ரு, கொரிய நாட்காட்டிகள் தோன்றின. ஹிந்து நாட்காட்டியைத் தொடர்ந்து சக, விக்கிரம, கலி, கொல்லம் ஆண்டு முறைமைகள் உருப்பெற்றன. எனினும் இவை தமிழரின் தனித்தன்மையைக் குறிப்பதாக இல்லாததால் ‘திருவள்ளுவர் ஆண்டு’ தோற்றுவிக்கப்பட்டது. திருவள்ளுவர் கி.மு 31ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதால், கிரிகோரியன் நாட்காட்டியைவிட 31 ஆண்டுகள் கூடுதலாக கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிரிகோரியன் நாட்காட்டியில் 2018 என்றால், திருவள்ளுவர் நாட்காட்டியில் 2049 ஆம் ஆண்டாகக் கணக்கிடப்பட்டுவருகிறது. 1972ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவராண்டு நடைமுறைக்கு வந்தாலும், 1981 ஆம் ஆண்டு, மதுரை உலகத் தமிழ் மாநாட்டுச் சமயத்தில்தான் தமிழக அரசு ஆவணங்களில் திருவள்ளுவராண்டு முறை பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் ஆண்டின் தொடக்கம் தை முதல் தேதியா, சித்திரை முதல் தேதியா என்பதில் இன்றும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது.
– சாந்தா சம்பத் –