2018 டாப் 10 பாடல்கள்
2018ஐ பொறுத்தவரை பெரிய ‘மியூசிக்கல் ஹிட்’ என்று சொல்லும் வகை படங்கள் நிறைய வெளிவரவில்லை. இவ்வருடமும் இளம் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணமுள்ளது.
வழக்கம் போல், இளையராஜா என்ன படங்களில் இசையமைத்தார் என்று தெரியாத வகையிலான படங்களுக்கு இசையமைத்தார். ஆனால், செய்திகளில் ராயல்டி தொடர்பாக அதிகம் அடிபட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லிக்கொள்ளும்படி செக்கச் சிவந்த வானம், சர்கார், 2.0 என பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது இருப்பைக் காட்டினார். கடந்த வருடங்களுக்கு ஒப்பிட்டால், இந்த வருடம் யுவன் ஷங்கர் ராஜா நிறைய படங்களுக்கு இசையமைத்தார். இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். சொந்த படம் எடுத்து, தனது கேரியரை பூஸ்ட் செய்துக்கொள்ள முயன்றார்.
ஹாரிஸ் இசையில் ஒரு படமும் இவ்வருடம் வெளிவரவில்லை. எண்ணிக்கை குறைந்தாலும், டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம், சீமராஜா என மூன்று ஹிட்ஸ்ஸை இமான் இவ்வருடம் கொடுத்தார். அனிருத் குறைவாக தொட்டாலும், தொட்டது பொன்னானது. ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு பெற்றார். பேட்ட அடுத்த வருடத்தின் முதல் படமாக வருகிறது. சந்தோஷ் நாராயணன் சொல்லிக்கொள்ளும் வகையிலான படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தாலும், ஹிட் பாடல்கள் குறைவே.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோர் இசையமைத்ததை விட அதிகம் நடித்தனர். சர்வம் தாள மயம் என்று ஜி.வி.பி. நடிக்கும் படத்திற்கு, ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர்கள் நடிக்க செல்ல, நிறைய புதுவரவுகள் வந்தவண்ணம் இருந்தனர். ப்ரேம்ஜி இசையில் வெளிவந்த பார்ட்டி படத்தில் இமான், விஜய் ஆண்டனி, ஜி.வி.பி. ஆகியோர் பாடினர். இவ்வருடத்தின் முக்கிய வரவாக, கோவிந்த் வசந்தாவை சொல்லலாம்.
இனி இந்தாண்டின் டாப் 10 பாடல்களைப் பார்க்கலாம்.
தானா சேர்ந்த கூட்டம் – சொடக்கு மேல
தற்சமயம் கல்லூரி விழாக்களில் அனிருத் பாடல்களுக்கு தான் பெரும் டிமாண்ட்டாம். என்ன பாட்டு வெளியிடுகிறார் என்று கவனித்து, அதற்கு ஆடுவதற்கு மாணவர்கள் விருப்பப்படுகிறார்களாம். இந்த வருடம் அப்படி தமிழ்நாடு பெரும் ஆட்டம் போட்ட பாடல் – சொடக்கு மேல சொடக்கு போடுது. விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளுக்கு வழக்கு போடப்பட்டு கவனம் ஈர்க்கப்பட்டாலும், பாடலை ஹிட்டாக்கியது அந்தோணி தாசனின் குரல் குத்தும், அனிருத்தின் இசை குத்தும் ஆகும்.
கலகலப்பு 2 – ஒரு குச்சி ஒரு குல்ஃபி
ஹிப் ஹாப் தமிழா அவர் பங்குக்கு ஆட்டம் போட வைத்த பாடல் – ஒரு குச்சி ஒரு குல்ஃபி. “உன் கூட போட்டோ எடுத்தேன் டச் ஃபோன்ல, டச்சு பண்ணி இச்சு கொடுப்பேன் ஹனிமூனுல” போன்ற தத்துவ வரிகளை கானா வினோத்தும், சரவெடி சரணும் எழுதியிருந்தனர். கத்ரீன் தெரசாவும், நிக்கி கல்ரானியும் கெட்ட ஆட்டம் போட்டு, கலகலப்பு 3க்கு ரசிகர்களை ஏங்க வைத்தனர்.
கோலமாவு கோகிலா – கல்யாண வயசு
அறம் சார்ந்து இது ஒரு கறை படிந்த பாடல். ஆம், சிப்ஸ் பீலிங்க் மீ பாடலை உருவி, அனிருத் போட்ட கல்யாண வயசு பாடல் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டிகளில் செம ஹிட் அடித்தாலும், இண்டர்நேஷனல் காப்பிரைட் விதிமீறலுக்கு உள்ளாகி, யூ-ட்யூப்பில் 50 மில்லியன் ஹிட்ஸ் தாண்டிய பிறகு எந்த அறிகுறியும் இல்லாமல் தூக்கப்பட்டது. சிவகார்த்திக்கேயன் கவிஞராகி எழுதிய இப்பாடல், சிறுவர்கள் தொடங்கி பெரியோர் வரை கவர்ந்ததால், நமது லிஸ்டில் இடம் பெறுகிறது.
பியார் பிரேமா காதல்
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவர் நினைத்த மாதிரியான படங்கள் வராமல் இருக்க, அவர் விரும்பிய படத்தை அவரே தயாரித்து வெளியிட்டார். இளமை கலர் புல்லான இப்படத்திற்கு அவரது பாடல்கள் மேலும் கலர் சேர்த்தது. ‘பியார் பிரேமா காதல்’ என்று யுவனின் குரல், படத்தின் ஒவ்வொரு பாடலிலும் வந்து பாடலை நிறைவு செய்து, பாடல்களைச் சிறப்பு செய்தது.
சர்கார் – ஒரு விரல் புரட்சியே
சென்ற வருடம் போல் மீண்டும் விஜய் – ரஹ்மான் கூட்டணியில் இவ்வருடம் ஒரு படம். ஆனால், “ஆளப்போறான் தமிழன்” போல் பெரும் ஹிட்டாகப் பாடல்கள் அமையவில்லை. தமிழகத்தில் நிகழும் தொடர் போராட்டங்களை மையப்படுத்தி ‘ஒரு விரல் புரட்சியே’, படத்திற்கு வெளியேயும் சில வாரங்களுக்குப் புரட்சி கிளப்பியது. இப்பாடலை ரஹ்மான் விஜய்யைப் பாடச் சொல்லிக் கேட்க, பாடலில் இருக்கும் ஹை-பிட்ச் காரணமாக விஜய் மறுக்க, ரஹ்மான் பாடி வெளிவந்தது.
செக்கச் சிவந்த வானம் – மழை குருவி
சமீபக் காலங்களில் மணிரத்னம் வருடத்திற்கு ஒரு படம் இயக்க, அதன் காரணமாக ரஹ்மான் இசையில் ஒரு படமும் தமிழில் வந்துவிடுகிறது. பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்த இப்படத்தில், ரஹ்மானின் மந்திர இசையில், குரலில் மழை குருவி அருமையான மெல்லிசைப் பாடலாக அமைந்தது.
குலேபகாவலி – மழை விழுந்திடும்
விவேக் – மெர்வின் இசையில் வெளிவந்த குலேபகாவலி சுமாராக ஓடினாலும், பாடல்கள் கவனம் பெற்றன. பிரபுதேவா நீண்ட நாட்களுக்குப் பிறகு செம ஆட்டம் போட்ட, குலேபா பாடல் ரசிகர்களின் கவனம் பெற்றது. அதே சமயம், ‘மழை விழுந்திடும்’ என்ற இப்பாடல் அருமையான காட்சியமைப்பில், மனதை வருடும் இசையில் காண்போரை ஈர்த்தது.
கனா – வாயாடி பெத்த புள்ள
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நினன் தாமஸ் இசையமைப்பில் கடந்த வாரம் வெளிவந்திருக்கும் கனா படத்தில் இப்பாடல் படம் வெளிவரும் முன்பே யூ-ட்யூப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வைக்கம் விஜயலட்சுமியுடன் சேர்ந்து இப்பாடலைப் பாடியவர்கள் சிவகார்த்திகேயனும், அவரது மகளான ஆராதனாவும்.
டிக் டிக் டிக் – குறும்பா
பாடகர்களில் சமீபக் காலத்தில் அதிக ஹிட் பாடல்கள் கொடுப்பவர், சித் ஸ்ரீராம் அவர்கள். அவர் பாடல் இல்லாமல், பெரிய இசையமைப்பாளர்கள் ஆல்பம் எதுவும் இப்போது வெளிவருவதில்லை. வித்தியாசமான வகையில் பாடும் ஸ்ரீராம், தான் பாடும் எந்த பாடலையும் ஒரு புது ரகமாக மாற்றிவிடுகிறார். இதுவும் அப்படி ஒரு பாடல் தான். பெண் குழந்தைகளுக்கென பல பாடல்கள் இருந்தாலும், ஆண் குழந்தைக்களுக்காக அமைந்த பாடலாக இது வந்து சேர்ந்தது. பாடலை எழுதியவர், மதன் கார்க்கி.
96 – காதலே காதலே
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம், இந்த வருடம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட படம். இசையும் படத்தின் தன்மைக்கேற்ப, மனதை வருடும் வண்ணம் இருந்தது. படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பெரும் கவனம் பெற்றார். 96, 18இன் சிறந்த படமாக எல்லா வகையிலும் அமைந்தது.
வரும் 2019 ஆண்டும் இனிய இசையுடன் உங்கள் வாழ்வை இனிமையாக்க, அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
- சரவணகுமரன்.
Tags: 2018, Top 10, டாப் 10 பாடல்கள்