\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஸ்மார்ட் ஹோம்!! ஈஸி ஹோம்!!

அறிவியலின் வளர்ச்சி எல்லா இடங்களிலும் பரவ, வீடு பராமரிப்பில் மட்டும் அது தலையிடாமல் இருக்குமா? ஒரு மனிதனின் அத்தியாவசியத் தேவையில் ஒன்றான தங்குமிடத்தில், மனிதன் தனது வசதிக்காக உருவாக்கிய விஞ்ஞான உபகரணங்கள் பல உள்ளன. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் துவங்கிய இப்பயணம், பல பரிமாணங்கள் கடந்து, இன்று மனித தலையீடு இல்லாமல் தானாகச் செயல்படும் நிலையில் வந்து நிற்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில் வீட்டு பயன்பாட்டுக்காக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ட்ரையர், வேக்யூம் க்ளீனர் போன்ற மின் உபகரணங்கள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. அதை ஸ்மார்ட் ஹோமிற்கான அடித்தளம் என்று கூறலாம். அதுவரை வீடு கூட்ட, பெருக்க, துணி துவைக்க, காய வைக்க என்று மனித உழைப்புத் தேவைப்பட்டது. அந்த வேலைகளை மனிதன் மின்சார உபகரணங்களிடம் கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் பிற வேலைகளில் ஈடுபட்டான்.

அறுபதுகளில் இருந்தே ஸ்மார்ட் உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெரிதாக விற்பனை செய்யப்படவில்லை. இதற்கு முன் வந்த சாதனங்களுக்கும், இப்போது நாம் சொல்லும் ஸ்மார்ட் சாதனங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இதுவரை இருந்த மின் சாதனங்கள் மனிதன் இயக்கும் போது இயங்கும், அணைத்துவிட்டால் உறக்கத்திற்குச் செல்லும். ‘துடிச்சாதனம்’ என்று தமிழ்ப்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனமானது, எப்போதும் இயக்கத்தில் இருக்கும். எப்போது செயல்பட வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று அதற்குத் தெரியும். அதாவது, அதற்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கணினியில் பதிக்கப்பட்டிருக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப, அதுவே செயல்படும். சூழலுக்கேற்ப கற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும். பிற சாதனங்களுடன் தொடர்புக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.

கணினியும், இணையமும் பரவத் தொடங்கிய பின், அதன் பயன்பாட்டு விலை குறையத் தொடங்கிய பின், இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. வீட்டில் கம்பியற்ற இணையம் வந்து, பின் நமது வீட்டு உபகரணச் சாதனங்கள் அதில் இணைக்கப்படும் நிலை வந்து, இதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஃபோன், டிவி, தெர்மோஸ்டட், ஃப்ரிட்ஜ், கதவு பெல், பாதுகாப்பு சென்சார், கேமரா என இவை அனைத்தும் இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டு, எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும் நிலை வந்துவிட்டது.

தனியாக உட்கார்ந்து ஃபோனில் யூ-ட்யூப் மூலம் ஏதாவது வீடியோ பார்த்துக்கொண்டிருந்தால், அதை வீட்டில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் காண வேண்டும் என்று நினைத்தால், உடனே அதை நமது டிவியில் ஒளிப்பரப்ப முடியும். டிவிக்கு என்று ஆன்டன்னாவோ, வயர் இணைப்போ இல்லாமல், கம்பியில்லா இணைய இணைப்பு மட்டும் போதுமானதாக இருக்கிறது. நாம் காணும் காணொளிகளைப் பொறுத்து நமக்கான காணொளிகளை இன்றுள்ள மென்பொருளே நமது ரசனைக்கேற்ப சரியாகப் பரிந்துரைத்து ஒளிப்பரப்புகிறது.

வீட்டின் தட்பவெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தெர்மோஸ்டட் எனப்படும் வெப்பநிலை காப்பான் சாதனமானது இன்று தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. நம்மால் வீட்டிற்கு வெளியே இருந்தும், வீட்டின் தட்பவெப்பம் என்னவென்று அறிந்துக்கொண்டு, அதை மாற்றி அமைக்க முடியும். அல்லது, வீட்டிற்குள் நுழைவது பொறுத்தோ, தூங்கி எழும் நேரம் பொறுத்தோ, வெளியில் இருக்கும் தட்பவெப்பத்தைப் பொறுத்தோ தானாக வீட்டிற்குத் தேவைப்படும் வெப்பத்தை, குளிரை அளிக்கும் தெர்மோஸ்டட் சாதனங்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. வசதி என்பதைத் தாண்டி, வீட்டின் மின்சாரச் செலவினைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. வீட்டின் விளக்குகள், விசிறிகள் போன்றவை நாம் இல்லாத நேரங்களில் தானாக அணைந்துவிடும் வசதிகளும் இப்போது உள்ளன.

வீட்டின் பாதுகாப்புச் சாதனங்கள் பற்றித் தனியே ஒரு கட்டுரை எழுதலாம். அந்தளவுக்கு அதில் சாதனங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தற்சமயம் விலையும் மிக மலிவாகிவிட்டது. நமக்குத் தெரியாமல் யாராவது வீட்டின் கதவைத் திறந்தாலோ, நாம் வீட்டில் இல்லாத சமயம் தீப்பிடித்தாலோ, தண்ணீர் லீக் ஆனாலோ, நமது ஃபோனுக்கு அறிவிப்பு அனுப்பும் சிறு சிறு சாதனங்கள் நிறைய வந்துவிட்டன. சுற்றி நடக்கும் நடமாட்டம் பொறுத்து, நமக்கு மெசெஜ் அனுப்பும் கேமராக்கள் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. ஊரில் இல்லாத சமயங்களில், வீட்டில் பொறுத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம் நமது வீட்டை எந்தக் கண்டத்திலிருந்தும் பார்த்துக்கொள்ள முடியும். அந்தச் சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ, அல்லது நண்பர்களிடமோ வீட்டைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி தொந்தரவு செய்யத் தேவையில்லை. வீடு காக்கும் தோழர்களாக இச்சாதனங்கள், வீட்டைப் பாதுகாத்து, தேவைப்பட்டால் காவல்துறைக்கோ, தீயணைப்புத்துறைக்கோ கூடத் தகவல் அனுப்பும் உதவியையும் புரியத் தயாராக உள்ளன.

கடைக்குச் சென்றுவிட்டு என்ன காய்கறி வாங்க வேண்டும் என்று தெரியாவிட்டால் ஸ்மார்ட் ஃப்ரிட்ஜ் வைத்திருப்பவரென்றால் பிரச்சினையில்லை. ஃப்ரிட்ஜ் உள்ளே இருக்கும் கேமரா மூலம் வீட்டில் என்ன காய்கறி இல்லை, எது வாங்க வேண்டும் என்று கடையில் இருந்தே முடிவெடுக்க முடியும். தேவையில்லாமல் எதையாவது வாங்குவதோ, தேவையிருந்தும் எதையாவது வாங்காமல் போவதோ நடைபெறாது. அவ்வளவு ஏன், வீட்டில் இருந்துகொண்டே, ஃப்ரிட்ஜ் பேனலில் என்ன வேண்டும் என்று ஆர்டர் செய்யும் வசதிகளும் வந்துவிட்டன.

வீட்டைச் சுத்தப்படுத்தும் தானியங்கி வேக்யூம் க்ளினர் ரோபோக்கள் வந்துவிட்டன. தேவைப்படும் நேரத்தில் தானாக இயங்கும் ஆற்றல் பெற்ற வேக்யூம் க்ளீனர் ரோபோக்கள் இவை. சுத்தப்படுத்திய பிறகு, தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று, தன்னைத் தானே சார்ஜ் செய்துக்கொள்ளும். இன்னும் வீட்டின் அறை அறையாகச் சென்று துணிகளை எடுத்து துவைக்கும் ரோபோக்கள் விற்பனைக்கு வரவில்லை. மற்றபடி, நமது பேச்சைக் கேட்டு, அதற்கேற்றாற் போல் துவைக்கும் வாஷிங்மெஷின்கள் வந்துவிட்டன. அமேசான் அலெக்ஸா, கூகிள் அசிஸ்டெண்ட் இணைக்கப்பெற்ற சாதனங்கள் இன்று எக்கச்சக்கமாகச் சந்தையில் வந்துவிட்டன. ‘சொல்லுங்க எஜமான்’ என்று நம் சொல் கேட்டு நடந்துக்கொள்ளும் உபகரணங்களாக இவை தற்சமயம் உள்ளன. என்று ‘கேட்டுக்கடா எஜமான்’ எனத் தன் பேச்சைக் கேட்க சொல்லுமோ, தெரியாது!!.

2019இல் மேலும் பல ஸ்மார்ட் சாதனங்கள் வர இருக்கின்றன. சுவி என்றொரு சமைக்கும் சாதனம் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. தூங்கி எழுந்து நாம் பார்க்கும் கண்ணாடியே ஸ்மார்ட்டாகி வருகிறது. கோலர் நிறுவனம் சில ஸ்மார்ட் டாய்லட் சமாச்சாரங்களைக் களமிறக்குகிறது. இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things – IoT) எனப்படும் இணையத்தில் இணையப்பெற்ற சாதனங்களின் எண்ணிக்கை இன்று 27 பில்லியனாக உள்ளது. இவை பத்து வருடங்களில் இவை ஐந்து மடங்காக அதிகரித்து 125 பில்லியனாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி எல்லாம் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் நாம் சேமிக்கும் நேரமும், சக்தியும் நமது முன்னேற்றத்திற்குப் பயனானால் மட்டுமே இவை ஸ்மார்ட் சாதனங்கள் என்ற பெயருக்குப் பொறுத்தமானதாக அமையும். அதை விடுத்து, நமது நேரத்தை விரயமாக்கினால், அவை ஸ்மார்ட்டாக இருப்பினும், நாம் ஸ்டூப்பிட்டாகத் தான் இருக்க நேரிடும்.

  • சரவணகுமரன்.

 

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad