துணுக்குத் தொகுப்பு – பறவைகள் பலவிதம்
பறவைகள் பலவிதம்
பொதுவாகத் தோல்விகளில் மனந்துவளாது, புத்துயிர் பெற்று மீண்டு வரும் மனோபாவத்தை ஃபீனிக்ஸ் பறவையோடு ஒப்பிடுவது வழக்கம். எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டு எழும் இந்த அக்கினிப் பறவைக்கு இறப்பே கிடையாது எனும் கருத்தும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைத்திடத் திட்டங்களும் உருவாயின.
சென்ற ஆண்டின் இறுதியில், ‘தோல்விகளைப் புறந்தள்ளி புத்தாண்டில் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுவோம்’ என்ற தகவலுடன் ஏதோவொரு கழுகின் படத்தை இணைத்து சமூகத் தளங்களில் பரப்பியிருந்தார்கள். உண்மையிலேயே ஃபீனிக்ஸ் என்றொரு பறவையினம் உண்டா?
உலக நாகரீகம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே ஃபீனிக்ஸ் பறவை பற்றிய கருத்துகள் தோன்றியுள்ளன. கிரேக்க, ரோமானிய, பாரசீக, சீனப் புராணங்களில் சொல்லப்பட்ட ராட்சதக் கற்பனைப் பறவை என்று நம்பப்படுகிறது. குறிப்பாக கிரேக்கப் பகுதியில் காணப்பட்ட ‘ஃபினிசியன்’ (Phonecians) நாகரீகத்தின் ஒரு அங்கமாக இது இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இக்கதைகளின்படி ஃபீனிக்ஸ் சிகப்பு மற்றும் தங்க நிற இறக்கைகளுடன், குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழக்கூடியவை. கழுகுகளை விடப் பல மடங்கு பெரிய உருவங்கொண்ட இப்பறவை, மிக உயரத்தில் பறக்கும் வல்லமை பெற்றது; ஒரே சமயத்தில் மூன்று யானைகளைச் சுமந்து பறக்கும் வலிமையுடையன. இதன் கண்ணீர் காயங்களை ஆற்றுவதுடன், நோயைக் குணப்படுத்தும் வியத்தகு சக்தி கொண்டது. பகல் நேரத்தில் இப்பறவை பறந்தபோது புதிதாய் ஒரு சூரியன் தோன்றியதாக மக்கள் மலைத்தார்களாம். உலகில் ஒரு சமயத்தில் ஒரேயொரு ஃபீனிக்ஸ் பறவை தான் இருக்கும். தான் இறக்கவேண்டிய காலத்தை அறிந்தால் அது தானே ஒரு கூடு கட்டி, நெருப்பு வைத்து அதில் அமர்ந்து இறந்து விடுமாம். இந்தச் சாம்பலிலிருந்து முட்டையொன்று தோன்றி, புதிய ஃபீனிக்ஸ் பறவை பிறக்குமாம். இந்தப் புதிய ஃபீனிக்ஸ் பறவை, எஞ்சியுள்ள சாம்பலை கிரேக்க நகரமான ஹெலியோ பொலிஸுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள சூரியக் கோயிலில் சேகரித்து வைக்குமாம்.
ஹெலகாபலஸ் எனும் ரோம மன்னன் ஒருவன் ஃபீனிக்ஸ் பறவையின் வியத்தகு சக்தியினை அறிந்து, அந்தப் பறவையை அடித்துச் சாப்பிட்டால் தன்னையும் இறப்பு நெருங்காது என்றெண்ணி தனது வீரர்களை அனுப்பி அதனை வேட்டையாடி வருமாறு பணித்தான். வீரர்களும் ஏதோவொரு பறவையை வேட்டையாடி வந்து ஃபீனிக்ஸ் பறவை என்று தந்துவிட்டனர். அதனைச் சாப்பிட்ட ஹெலகாபலஸ் சில ஆண்டுகள் கழித்து இறந்து விட்டான் என்றும் ஒரு கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு கதையில், ஃபீனிக்ஸ் பறவை சூரியனைத் தொட்டுவிட வேண்டுமென்ற இலட்சியத்துடன் பறக்கத் துவங்கியது. சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் தாளாது, தீப்பிடித்து எறிந்து சாம்பலானது. இருந்தாலும் தனது வைராக்கியத்தை விடாமல் அந்தப் பறவை மீண்டும் உயிர்த்தெழுந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அசைக்கவே முடியாத ரோமானியப் பேரரசின் அடையாளமாக ஃபீனிக்ஸ் பறவை சொல்லப்பட்டதுண்டு. சீனக் கதைகளில் இப்பறவை நெருப்பு மயிலாகப் புனையப்பட்டுள்ளது. மூங்கில் பூக்களை உண்ணும், நற்பண்புகள் கொண்ட அதிர்ஷ்டப் பறவையாகக் கருதப்பட்டது.
உலகிலேயே அதிக சூரிய வெப்பம் பெறும், பாலைவன நிலத்து தட்ப வெட்ப நிலை கொண்ட அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் நகரமொன்று ஃபீனிக்ஸ் என்ற பெயர் பெற்றது.
கலிஃபோர்னிய நகரமான சான் ஃபிரான்சிஸ்கோவின் அதிகார பூர்வக் கொடியில் ஃபீனிக்ஸ் பறவை சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1850களில் தோன்றிய பெருந்தீ விபத்துகளுக்குப் பிறகு இந்நகரம் மீண்டு உயிர்ப்பித்து எழுந்ததைக் குறிக்கும் வண்ணம், சாகாவரம் பெற்ற ஃபீனிக்ஸ் பறவை குறிக்கப்பெற்றது.
– சாந்தா சம்பத்