தலைமுறை Z இன் எழுச்சி (The rise of Generation Z)
அரசு, கல்வி, வர்த்தக தாபனங்கள் அடுத்த சனப்பெருக்கத்தில் பெருந்தலைமுறை ஆகிய மிலேனியல் (Millennials) 90 மில்லியன் ஆட்களை எவ்வாறு வேலைகளுக்கு உள்ளெடுக்கலாம் என்று ஆராய்ந்தவாறு உள்ளனர். மிலேனியல் தலைமுறை என்பது 1980ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர்களைக் குறிப்பிடுவது. இதே சமயம் இவ்வருடம் 2019 இல், 2001 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் – தலைமுறை ஜென் Z – பெரும் அலையாக அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் தாபன உலகளாவிய கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவில் பார்க்கும் போதும், குறிப்பாக இந்தியாவிலும், தலைமுறை ஜென் Z மக்கள் தொகையில் மிலேனியல்களை விஞ்சியுள்ளனர்.
தற்போது உலகாளாவிய சனத்தொகையில் மிலேனியல் 31.5% சதவீதமாகவும், ஜென் Z 32% சதவீதமாகவும் உயர்ந்துள்ளனர்.
இந்த சனப்பெருக்கம் வழக்கத்தில் சனப்பெருக்கம் அதிகமாக உடைய நாடுகளில் இருந்தே வருகிறது.
இந்தியாவில் 470 மில்லியன் ஜென் Z மற்றும் சீனாவில் 311 மில்லியன் என, வளர்ந்துள்ளன.
ஆப்பிரிக்காவில் ஜென் Z தலைமுறைப் பெருக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு, பொருளாதார ரீதியில் மிலேனியல் தலைமுறையின் ஆதிக்கமே அதிகரித்தவாறு உள்ளது. இதைப் பெரும் பொருளாதார நாடுகளாகிய சீனா, யப்பான், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா எற்கனவே உணர ஆரம்பித்துள்ளனர்
கையில் அதிநுட்பத் தொலைபேசிகள், மற்றும் சுயமான சமூக வலைத்தள உபயோகிப்பு ஆகியவை ஜென் Z தலைமுறையின் இயல்பான வாழ்வு. இவர்கள் இலத்திரனியல் துரிதத் தொடர்பு தொழில் நுட்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் படிப்படியாகச் சூழ்ந்து வரும் இலத்திரனியல் பொருளாதாரத்தின் பிரஜைகள். பணம், பண்டப் பரிமாற்றம், பரிணாம வாழ்வுத் தேவைகள் யாவற்றிற்கும் இலத்திரனியல் பதில் உண்டு என்று சர்வ சாதாரணமாக எண்ணுபவர்கள். இதனால் வரவிருக்கும் எதிர்கால வாய்ப்புக்கள் நிச்சயமாக இந்தத் தலைமுறையை எதிர்கொண்டு வரவேற்கப் பல மாற்றங்களுக்கு உள்ளாகும்.
ஜென் Z பொருளாதார ரீதியில் பார்க்கும் போது மிலேனியல்களிலும் அதிகப் பணம் உள்ளவராகவும், அவர்கள் கொள்வனவுத் தேவைகள் மற்றைய தலைமுறைகளைவிட பெரிய அளவு இலத்திரனியல் சாதனங்களை உட்கொண்டதாகவும் அமையும். எனவே வரும் அரைத்தசாப்தத்திலேயே வர்த்தக விளம்பர தாபனங்கள் உக்கிரமாக இந்தத் தலைமுறையினரை வெவ்வேறு இலத்திரனியல் முறைகளில் அணுகும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.
– தொகுப்பு யோகி