\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காவியக் காதல் – பகுதி 1

திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் சித்தார்த். அவனால் விவரிக்க முடியாத கனவு அது. ஏ.சி. யின்  முழுவதுமான குளிர்ச்சியிலும், அவன் முகம் முழுவதும் வியர்த்திருந்தது. அது கனவுதான் என்று உறுதிப் படுத்திக் கொள்வதற்கே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. அந்தக் கும்மிருட்டில், தனது வலதுபுறம் இருந்த சிறிய அலார்ம் க்ளாக் மூன்று மணி, பதினேழு நிமிடம் எனக் காட்டி, சிறிதளவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. கண்களை இடுக்கி, இருட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு இடதுபுறம் திரும்பிப் பார்க்க, மனைவி அமுதா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மெலிதான குறட்டை அமைதியான சூழலில் சற்று இசையைக் கசிய விட்டுக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து, இருட்டிலேயே நடந்து பாத்ரூம் சென்றான். அங்கு சென்று அமர்ந்ததும், கனவில் வந்த காட்சிகளனைத்தையும் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கத் தொடங்கினான்.

பொதுவாகக் கனவில் வருவது அனைத்தும் நினைவில் இருப்பதில்லை. மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் மனதின் தன்மையை நன்கு புரிந்த ஞானிகளின் கூற்றுப்படி, மனிதனின் எழுபது சதவிகிதத்திற்கு மேலான தூக்கம் கனவுகளால் நிறைந்ததாம். அவற்றில் ஒரு சில மட்டும் மறுநாள் நினைவில் இருப்பதாகவும், அவை மட்டுமே நமக்கு வந்த கனவுகளாக நம்புகிறோம் என்றும் விளக்குகிறார்கள். அதெல்லாம் சரி, சித்தார்த்தின் கனவுதான் என்ன? அதை மீண்டும் நினைக்கையில் அப்படியே தத்ரூபமான நிகழ்வுகளாகத் தோன்றி, அவனைப் பயத்தில் ஆழ்த்துமளவுக்கு நடந்ததுதான் என்ன? மிகவும் கலங்கிப் போயிருந்தான். கண்களை மூடி, கழிப்பறையில் அமர்ந்தவனுக்கு, அந்தக் கனவுக் காட்சியெல்லாம் கண்முன்னே நடனமாடத் தொடங்கியது.

—————————————————————————————————————————————————–

ந்த ராஜசபையின் மத்தியில், பூணல் மட்டும் அணிந்து மேலங்கி ஏதுமணியாமல், கச்சை வேட்டி கட்டி, கைகளிரண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, காவலாளிகள் இருவர் பிடித்திழுத்தபடி நின்று கொண்டிருந்தவன் சித்தார்த்… இல்லையில்லை, அந்த அரண்மனையின் தலைமைச் சோதிடர் திரிகால நிமித்தகரின் மகன் சித்தேஸ்வரன். சோதிடம் பார்க்கும் குடியில் பிறந்து, தீட்சண்யமான பார்வையும், உலகே பாராட்டும் வண்ணம் அறிவுத்திறனும் கொண்ட சித்தேஸ்வரன், அனைவரின் வியப்புக்குரியவனாக வில், வாட்போர்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். கட்டுடலுடன், தெளிவான அறிவும், தெய்வ நம்பிக்கையும், அறன் விலகா நோக்கும் கொண்ட அவனைக் கண்ட மாத்திரத்தில் அன்பு கொள்வர் அனைவரும். அவன் எதற்காக ஒரு குற்றவாளியைப் போல் கட்டிக் கொண்டு வரப்பட்டிருக்கிறான்?

தன் மகன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, சபை நடுவே நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்படப் போவதைப் பார்த்த தந்தைக்குப் பாதி உயிர் போய்விட்டது. தனையன் செய்த பிழைதான் என்னவென்று அறியாத அவர், மன்னரின் நடுவு நிலையை நன்கறிந்திருந்ததால் தவறேதும் இழைக்கவில்லையெனில் பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை நிறைந்தவராகவும் இருந்தார். அனைவரும் மன்னரின் வருகைக்காகக் காத்திருக்க, முதலில் உள்ளே நுழைந்தவள் இளவரசி தேன்மொழியாள். மீனையொத்த அவளின் கண்கள், வில்லையொத்த புருவங்களுக்கு அடியே நின்று கூரான அம்புக் கணைகளைப் பாய்ச்சிக் கொண்டே இருக்க, பளிங்குச் சிலையென நடந்து வருகிறாள். அந்தப் பளிங்குச் சிலை இரண்டு புறமும் சமமாய் வளர்ந்து நிற்கும் கவர்ச்சிக் கனிகளை மறைத்து, கச்சணிந்திருந்தாள். இடுப்பிலிருந்து தொடங்கி, மதன வளைவுகளை மறைத்த உடைகளும் அவற்றைச் சுற்றி அணிந்திருந்த ஆபரணங்களும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தன என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ? இளவரசியின் நடையழகைக் கண்டு மயங்காத காளைகளே அங்கில்லையெனச் சொல்லிவிடலாம். ஆனாலும், ஏறெடுத்துப் பார்த்தால் தூரெடுக்கப்படும் விழிகள் என்றறிந்த காரணத்தால், யாரெவரும் காரணமின்றி சிரம் நிமிரவில்லை. அவளது கயல்விழிகள் வீசிய அந்தக் கணைகள் அத்தனைக்கும் இலக்காக இருந்தது, சங்கிலியால் கட்டுண்டு நிற்கும் சித்தேஸ்வரன்.

இளவரசி உள்ளே வருகிறாள் என்பதை உணர்ந்த சித்தேஸ்வரன், சிரம் உயர்த்தி அவளின் அழகினை முழுவதும் பருகுவதற்குத் தயாராகிறான். சென்ற கார்த்திகை மாத தீபத்திருவிழாவில், திரு உலாவிற்காகப் பல்லக்கில் வந்த அவளை முதன்முதலாகப் பார்த்த அவன், அவளைச் சந்தித்ததே ஒரு காவியமான நிகழ்வு. மன்னற்கு விரோதமான அண்டைக் குறுநில மன்னர்களின் கூட்டம் திருவிழாவில் கலகம் செய்வதற்காக உட்புகுந்து பல சேதங்களையும் விளைவித்தனர். சாதாரணக் குடிமக்களைத் துன்புறுத்தி, பலரின் உடமைகளை சூறையாடியதோடு நில்லாமல், பெண்கள் சிலரையும் குதிரைகளில் கடத்திச் சென்றனர். மன்னரின் பரிவாரங்களில்லாமல் இளவரசி மட்டும் ஒருசில காவலர்களோடு அங்கு வந்திருக்கிறாளென்று அறிந்து அவளிருந்த பல்லக்கைச் சுற்றி வளைத்தனர். அந்தப் பல்லக்கைச் சுமந்து வந்தவர்களையும் அதனைச் சுற்றி வந்த காவலர்களையும் அடித்துப் போட்டுவிட்டு, இளவரசியைக் கவர்ந்து செல்லத் தயாராயினர். கொஞ்சுமொழி பேசுமந்த வஞ்சி, வெறும் அழகுப் பதுமை மட்டுமன்று, கொடுவாள் வீசத்தெரிந்த மறக்குலத்து மாதவளென்று அவர்கள் உணரச் சில மணித்துளிகள் பிடித்தன. தளிர்க்கரமென்றெண்ணித் தழுவிட நினைக்கும் தருக்கர்களின் தலைகளைப் பந்தாடச் செய்யும் தந்நிகரில்லா வீரமங்கை அவளென்று விரைவில் விளங்கிற்று. காற்றைக் கிழித்துச் செலுத்தும் அவள் வாள்வீச்சு, காமுகர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்தது. பயமென்றாலென்னவென்று உணராப் பதுமை, பார் கலங்க பெருவாள் வீச, பலர் சேர்ந்து அவள் பார்த்திரா நாழிகையில் அவளின் கச்சணியைப் பிடித்திழுக்க, மானம் காக்க வேண்டி அனிச்சையாய் வீசுவாள் மறக்க, அந்த ஒரு கணத்தில் அவள் சிறை பிடிக்கப்பட்டாள்.

கொலைத்தொழில் புரியும் பாதகர்கள், கொங்கையை மறைத்துக் கைகளைக் குவித்து நிற்கும் கன்னியவளைச் சுற்றி நின்று கொக்கரிக்க, வேறு வழியேதுமின்றி மருண்ட விழிகளுடன் மத்தியில் நின்றிருந்தாள் மாதவள். மானத்தைக் காக்கத் தன்னை மரித்துக் கொள்வதுவிட்டு வேறுவழியிலையென அவள் சிந்தித்திருக்க, எங்கிருந்தோ வந்தான் அந்த இளஞ்சிங்கம். சுற்றிப்பரவியிருந்த ஆல மரத்தின் விழுதுபற்றி, அனைவருக்கும் மத்தியில் குதித்திட்டான். குதித்த மறுநொடியில், குளிர்ந்த பார்வையால் அவளைத்தழுவி, தான் அணிந்திருந்த மேலங்கியை அவள் மானம் காக்கக் கொடுத்து, சுழற்றிட்டான் தனது வீரவாள். சுழன்ற வாளது காற்றினை விஞ்சியது; ஒளியின் வேகத்தைப் பின்னுக்குத் தள்ளியது; ஒலிவந்து செவிகளை அடையுமுன்னே வாளின் கூரிய நுனி வந்து அவர்களின் கழுத்தை அரிந்தெடுத்தது. பார்ப்பவர்கள் இமைகள் துடித்து அடங்குமுன், ஆவி அடங்கிப் பிணமாயினர். நூற்றுக் கணக்கில் சுற்றி நின்ற அற்பர்கள், விளக்கைச் சுற்றி வரும் விட்டிலென வீழ்ந்து சாய்ந்தனர். அவனுக்கு வேண்டியிருந்தது அரை விநாடிகளே. அனைவரையும் பந்தாடிவிட்டு அணங்கவளின் முன் மண்டியிட்டு வணக்கமிட்டான். தன் கண்முன்னே நடந்ததென்ன என்பதை விளங்கிக் கொள்ளச் சில விநாடி பிடித்தது இளவரசிக்கு. விளங்கிய மறுநொடியில் வியப்பால் கைகளிரண்டும் கன்னம் பற்ற, களைந்து பறந்த மேலங்கியையும் அறியாது, காதலால் கசிந்திருகி மேலழகு முழுவதும் காட்சிக்குரியவையாக்கியிருந்தாள். மேலங்கி பறந்ததை  அறிந்த மானம் போற்றும் மறத்தமிழனான அவனோ அவளின் முன் மண்டியிட்ட நிலை மாற்றிடாது, அவளது காலடிகளை மட்டும் பார்த்து அமர்ந்திருந்தான். அப்போது அவளது கால்களில் சொலித்த மரகதப் பரள் அவன் கண்களை விட்டுச் சற்றும் அகலவில்லை.

ன்று அரச சபையிலே கட்டுண்டு நிற்கும் தருணத்திலும், நிமிர்ந்து அவள் முகம் பார்த்த அவன், பின் சற்றுக் குனிந்து அந்த மரகதப் பரள் அவளின் தாமரைப் பாதங்களுக்கு மேலாக அந்தக் கணுக்கால்களைப் பற்றிக் கொண்டிருக்கின்றனவா என்று பார்க்கத் தவறவில்லை. ஆம், அவை செய்த ஏழ்பிறவிப் புண்ணியங்களால் அவளின் தங்கக் கால்களைத் தழுவும் பாக்கியம் இன்னும் அவைகளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

ந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இளவரசி சித்தேஸ்வரனின் மீது காதல் கொண்டாள் என்பதை வெளிப்படையாகக் கூறிட வேண்டுமோ? அவளே தோழியரின் உதவியுடன் அவனைச் சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்தாள். அரண்மனைச் சோதிடரின் மகனென்றும், வில், வாள் வித்தைகளில் கரை கண்டவனென்றும், சோதிட சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவனென்றும், நினைத்த மாத்திரத்தில் ஆசு கவி எழுத வல்லவனென்றும் தெரிந்து கொண்டாள். அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவன்மீதிருந்த காதல் அதிகரித்ததிலும் வியப்பேதுமில்லை. ஒருநாள் அவனது குடிலுக்கு அவனறியாத தருணம் சென்று சேர, ஓவியக் கலையிலும் வித்தகனாகிய அவன், தன்னை முழு ஓவியமாகத் தீட்டி வைத்திருந்ததையும் பார்த்தாள். தான் மேலுடையேதுமின்றி, கன்னத்தில் கை வைத்து அவனது வீரத்தை வியந்திருந்த அந்தக் கணத்தைத் தத்ரூபமாகத் தீட்டியிருந்தான். பார்த்த கணம் முழுவதுமாய் வெட்கித் தலைகுனிய, சித்தேஸ்வரன் இல்லத்திற்குள் பிரவேசித்தான்.

“பெண்ணொருத்தியின் ஒய்யாரக் கொங்கையை ஓவியமாய்த் தீட்டுவது உயர்ந்தோற்கு அழகோ?” கன்னியின் கோபம் பொதிந்த, காதல் ததும்பிய கேள்விக் கணை.

“ஆம், தவறுதான். பெண்ணவளை வரைந்திருந்தால் மன்னிக்க முடியாத குற்றம். விண்ணோர் பார்த்திருக்க, காந்தர்வமாய் விவாகம் புரிந்த தன்னவளை வரைவதில் தவறேது?” இலக்கணமாய் அவளை மணம் முடித்ததாக அவன் கூறிய விளக்கம் அவளைக் கிறங்கடித்தது. இவன் வாள் வீசத் தெரிந்தவன் மட்டுமல்ல, பேசத் தெரிந்தவனும் கூட.. தன்னுள்ளே சொல்லிக் கொண்டே, காதலைக் கட்டுப்படுத்த இயலாது அவன் தோள்மீது சாய்ந்தாள்.

“ஆனாலும், நான் இந்த நாநிலத்தை ஆளும் அரசனின் மகள், நீரோ அவரிடம் கையேந்திச் சேவகம் செய்யும் சாதாரணச் சோதிடரின் மகன். நம் காதல் நிறைவேறுமா?” என்றிழுத்தாள்.

“நாநிலத்தை ஆளும் நல்லரசனும், நாற்சந்தி நின்று நாணின்றிப் பொருள் ஏற்போனும் நான்முகனின் நற்படைப்புகளே. இவர்களுக்குள் பேதமேது? என்று மோனை பலவுடன் மோகம் பயர்ந்தான்.

கேட்டவுடன் சொக்கிய சோதியவள், “சோதிடம் பேசுபவர் சொக்க வைக்கும் தமிழும் கற்றவர் போலும். எங்கே, இந்தக் கன்னி சற்றுக் காதலில் சொக்குமாறு கவியொன்று புனைக!” எனக் கேட்டாள்.

“கொங்கு வள நாட்டதனின்

கோதையான குணவதியிவள்

சங்கு நிகர்க் கழுத்தினிலே

சதிராடும் வெண்மணி மாலையோடு

மங்காப் பொன்னிறமும்

மாறாப் புன்னகையும் தரித்தே

கொங்கை திறந்து காட்டியே காதலெனும்

கங்கையை என்மேல் பாய்ச்சியவள்”

சட்டெனத் தனக்குதித்த சாதாரணருக்கும் புரியும் வகை, காமமும் காதலும் கொண்ட கவியதனைச் சொல்லிட்டான். கேட்ட மாத்திரத்தில், நாணத்தால் முகம் சிவக்க, பொய்யாய்க் கோபம் கொண்டு, “சோதிடருக்குச் சோதனை தருவதில் கொள்ளைப் பிரியம் போலும்” என்று சிணுங்கினாள்.

’சோதனை’ என்ற வார்த்தை உரைக்கையில், அந்தச் சோதனை அங்கே வந்து சேர்ந்தது. ஆம், திடுதிப்பென மன்னனின் காவலர்கள் குடில் பிரித்து, உள் நுழைந்தனர். எவருக்கும் தெரியாமல் வெளியே சென்ற இளவரசியைக் காணவில்லையென நாலாபக்கமும் தேடச் சென்ற காவலர்களின் கண்ணிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரண்மனைப் பல்லக்குத் தெரிய, அந்தக் குடிலுக்குள் புகுந்தனர். உள்ளே நுழைந்ததும், காமக் களிப்பில், காதலனின் மடிமீது சாய்ந்திருந்த இளவரசி கண்ணில்பட, சற்றே சங்கோஜத்துடனும், பெருமளவு கோபத்துடனும் காவலர்களின் தலைவன் அவர்களைப் பார்த்தான். மனது வைத்திருந்தால் ஒரே நொடியில் அவர்களைனைவரையும் பந்தாடியிருப்பான் சித்தேஸ்வரன், எனினும், மன்னனின்பால் கொண்ட மதிப்பினாலும், மங்கையின்பால் கொண்ட மயக்கத்தாலும் அந்தக் காதலர்களின் கட்டளைகளுக்கு ஒப்ப அவர்களுடன் அரசவை சென்று அங்கு கட்டுண்டு நின்று, தனது கோதையின் நடையை ரசித்துக் கொண்டிருக்கிறான் இப்போது.

ன்னர் மற்றும் அவனது பரிவாரங்கள் முழுவதும் அரசவையில் கூடிவிட விசாரணை துவங்குகிறது. மன்னரின் முகத்தில் அடக்க முடியாத கோபம். நடந்ததனைத்தையும் அறிந்த அவன், தீர்ப்புச் சொல்வதற்கு ஆயத்தமாக வந்திருந்தான். ஆனாலும், நடுநிலை தவறாதவனென்பதால் முழு விசாரணைக்குப் பிறகே தனது தீர்ப்பைக் கூற வேண்டுமென்று காத்திருக்கிறான். மந்திரிப் பிரதானிகளில் ஒருவர் எழுந்து நின்று வழக்கைத் துவங்கி வைக்க, இவர்களைக் கையும் களவுமாகப் பிடித்த காவலர்களின் தலைவன் தான் பார்த்தவற்றை விளக்குகிறான். இவர்களை இழுத்துக் கொண்டு வருகையில், உடன் எடுத்து வந்த சித்தேஸ்வரன் தீட்டிய தேன்மொழியாளின் ஓவியமே மிகப் பெரிய சாட்சியாக வைக்கப்படுகிறது. தனது இளவரசியின் மானம் காக்க அந்த ஓவியத்தைத் துணியால் மூடி, அதன் உள்ளிருப்பை மட்டும் மேலோட்டமாக விளக்குகிறான். அதனைக் கேட்ட மன்னனும் அரசியும் வெட்கத்தால் தலை குனிகின்றனர். இளவரசியின் முகமும் இரத்தச் சிவப்பாக மாறியது. ஆனாலும், சமாளித்துக் கொண்டு, “தந்தையே, இந்த வழக்கு குறித்து எந்தன் கருத்துக்களையும் செவி மடுப்பீராக” என்கிறாள்.

“கயவர்கள் மத்தியில், மயக்குறும் மானெனப் பிடிபட்ட எந்தன் துயர் துடைத்த காவலனிவர். இவரைக் காதலனாக வரிப்பது குற்றமா? கற்பினை இழந்து கடுந்துயர் அடைந்து காலமெல்லாம் அவதியுற்றிருப்பேன் இவரில்லையாயின். அந்தக் கருத்துறு செயலுக்குக் காணிக்கையாய் இந்தக் கன்னியையே தருவதன்றோ கொற்றவனின் பெருமைக்கழகாகும்!” என்று முடிக்கிறாள். “தேன்மொழியாள், தெரிந்துதான் பேசுகிறாயா? மானமிழக்காமல் மங்கையரைக் காப்பது மண்ணின் மைந்தர்கள் அனைவரின் மாண்பே.. அதற்காக மருமகனாகிவிட நினைப்பது மன்னிப்புற்குறியதோ? மறவர் குல மங்கையரை மணக்க மறவருக்கே தகுதியுண்டு; சோழிகள் வீசிடும் சோதிடரும் ஒரு நிறையோ? மறக்குல மங்கையை நினைந்ததற்காகவே மண்ணோடு மண்ணாக வேண்டியவன் இவன்” என்று கர்ஜிக்கிறான் மன்னவன்.

“ஆயிரங்களான நீதி அவையறிந்த நீவிர் ஆக்கிடும் தீர்ப்பிதுவோ? அருமணத்திற்கு அவசியம் அனுதினங்காக்கும் ஆண்மை, அகங்காக்கும் உண்மை, அருள்கொள்ளும் அன்பு, அவையனைத்தும் ஒருங்கே அமைந்தவர் இவர். அவரன்றி இன்னொருவரை அணங்கிவள் கருதாள்” பெண் புலியும் மறுதலித்துக் கர்ஜிக்கிறது.

இவர்களின் வாத விவாதங்கள் பல கணங்கள் தொடர, வரப்போகும் தீர்ப்பை உடனறிந்த சோதிடன் வணங்காது நிற்கின்றான். தான் அவளைக் காதலித்தது குற்றமில்லை என்று அவன் கருதுவது உள்ளங்கை நெல்லிக்கனியென உறுதியாய் விளங்குகிறது. எதற்காகவும் அவளை விட்டுக் கொடுப்பதில்லை என்று உறுமுகிறான்.

“இளைஞனே, கடைசியாக உனக்கொரு சொல்” மன்னவன் தொடருகிறான். ”உந்தன் தந்தை திரிகால நிமித்தகர் ராஜ விசுவாசி. தேசம் அவப்பெயர் பெறுமாறு எந்தக் காரியத்தையும் செய்கிலார். அவரின் நற்குணங்களையும், சேவையையும் கருதி, உனக்கு மரண தண்டனை வழங்காது தவிர்க்க எண்ணுகிறேன். ஆனால், நீயும், உன் குடும்பமும் இந்த நாட்டை விட்டே அகல வேண்டும். உனது சந்ததியினரின் வாசமே இந்த மண்ணிற்கு எட்டக் கூடாது. நீ இக்கணமே தேசப்பிரஷ்டம் செய்யப்படுவாய்” என்று தீர்ப்பளித்து முடிக்கிறான்.

“மன்னா, பிறப்பதற்கொரு மண் பிழைப்பதற்கொரு மண் என்ற அவலத்தை என்னால் ஏற்க முடியாது. தவிர, இந்தத் தண்டனையை நான் ஏற்பேனாகில் இளவரசியை நான் காதலித்தது குற்றமென்று ஒப்புக் கொண்டதாகிவிடும். உங்கள் குலக் கொழுந்து எந்தன் நெஞ்சுநிறைச் செல்வியானது எந்தன் பேறு, அதனைக் குற்றமென்று ஒருபோதும் ஏற்க மாட்டேன். இதற்குக் கொடுங்கூற்றுக்கிரையாவதே எமக்குப் பெருமை” என்று நெஞ்சு நிமிர்த்தி, கொற்றவனை எதிர்நோக்கிக் கூறுகிறான்.

ஒரு நொடியும் தாமதிக்காமல், “அப்படியானால் சரி, ராஜதுரோகம் செய்த சித்தேஸ்வரனைச் சிரச்சேதம் செய்து கொல்லத் தீர்ப்பளிக்கிறேன்.” என்று முடித்தான் மன்னவன். அதனைக் கேட்ட உடனேயே, தந்தை திரிகால நிமித்தகனார் மூர்ச்சையாகி விழ, தேன்மொழியாள் பித்துப் பிடித்தவளைப் போலக் கதற, காவலாளி கூரிய உடைவாளை இடையினின்று எடுத்துக் குறிபார்த்து வீச …………… “

——————————————————————————————————————————————————–

பாத்ரூமில் உட்கார்ந்திருந்த சித்தார்த் திடுக்கிட்டு எழுகிறான். ஒரு முறை கழுத்தைத் தடவி, தலை உடல் மேல் தான் இருக்கிறது என்று உறுதி செய்து கொள்கிறான். மீண்டும் உடல்முழுதும் வியர்த்துக் கொட்டியிருப்பதை உணர்கிறான். வாயைத் திறந்து மூச்சு விட்டுக் கொண்டே, இது என்ன கனவுதானா.. என்ன எளவுடா இது… அந்த சித்தேஸ்வரன் மூஞ்சி அப்படியே நம்மளைக் கண்ணாடியில் பாத்த மாதிரி இருந்துச்சே… தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவன், பாத் ரூம் கதவு தட்டும் சத்தத்தில் நிகழ் காலத்திற்கு வருகிறான்.

“ஏன்னா… யூ ரிமெம்பர் த ஒன் ஐ ஆர்டர்ட் ஆன் அமேசான்… அது வந்துடுத்து… இங்க வந்து பாருங்கோளேன்” அமுதாவின் குரல் கேட்டு, கதவு திறந்து கொண்டு வெளியே வருகிறான். நியூ இயர் பார்ட்டிக்குப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டுமென்று ஆர்டர் செய்திருந்ததை ஒரு கையிலும், எம்ப்டி அமேசான் பாக்ஸை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு நின்றாள் அமுதா. அவளது கையிலிருந்த அந்த ஆர்னமெண்ட்டைப் பார்க்கிறான் சித்தார்த். யெஸ்.. இட்ஸ் என் ஆன்க்ளெட் வித் எமரால்ட் ஸ்டோன் …. மீண்டுமொரு முறை அதனைக் கூர்ந்து கவனிக்க, அது தேன்மொழியாளின் காலில் போடப்பட்டிருந்த மரகதப் பரள்.

தடாலென மூர்ச்சையாகிக் கீழே விழுந்த கணவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் அமுதா…….

(தொடரும்)

வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad