\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பக்தர்களும் பதர்களும்

பகுத்தறிவுச் சுடரென்று பகட்டு வார்த்தைபேசி
பணங்காசு ஈட்டுதற்குப் பழிபாவம் நினைத்தறியாப்
பரிவில்லா ஒருகூட்டம் பகர்ந்த சொல்லதனால்
பயிரான கவிதையிது! பலர்முன்னே அவருரைத்த

பண்பில்லாச் சொல்தானென்ன? பதினெட்டாம் படியினைப்
பலவிரதமிருந்து கடப்பவர் பலகாதம் நடந்துசெல்வது
படியரிசி கடத்திடவாம், பல்லிளித்து உதிர்த்திட்டார்
பழியான இச்சொல்லை! பயனில்லாச் சொல்லாராய்வோம்!!

விரதம் பலவிருந்து விஸ்வசுகம் அதுமறந்து
வில்லாளன் தரிசனத்திற்கு விரைந்தே சென்றிடுபவரை
விளைநெல்லைக் கடத்தும் வித்தையிது என்றே
விரோதமாய்ப் பேசுகின்றார் வித்தகராய்க் கருதிக்கொண்டு!!

வாகனங்கள் வழியாக விளைநெல்லைக் கொண்டுசெலல்
வாகாகத் தடுத்ததனால் வழிப்போக்கர் எடுத்துச்சென்றனராம்
வாய்திறந்தால் பொய்யெனவும் வழிநெடுகப் புரட்டெனவும்
வாழ்ந்துவிட்ட இவர்களாலே வந்திடுமோ நன்மையேதும்?

காடுகளும் மேடுகளும் நிறைந்திட்ட பாதையதில்
கால்நடையாய்ச் செல்கையிலே கால்வயிற்றுப் பசிதீர்க்க
காதம்பல முன்னமேயே கட்டிவந்த சோறதுவும்
காவலரை ஏய்த்துக் கடத்திட உதவிடுமோ?

கழனிகளில் விளைந்திட்ட கதிர்களைக் கடத்திட
கணக்காய்ச் சிறுதலையில் கட்டுவித்தவை உதவிடுமோ?
கனகமா இல்லையந்தக் கடத்தற்காரகள் நடத்திடும்
கஞ்சாபோன்ற வஸ்துவோ? கடுகளவே கொண்டுசெல்ல?

பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரிந்திரா ரகசியமோ?
பசிவந்ததும் கொண்டுசென்ற பண்டமனைத்தும் காலியாகிடுமே?
பரந்துவிரிந்த உலகமிதில் பரந்தாமன் உண்டென்று
பலகாலம் நம்புவோர் பல்லாயிரம் கோடி!!

பகுத்தறிவென்றுப் புரட்டுப்பேசி பகற்கொள்ளை காணும்
பதர்களின் கூட்டம் பரந்துநோக்கினும் மிகச்சிறிதே!
பகலவனின் கிரணங்களைப் பத்துவிரலால் மறைப்பதென்பது
பகட்டுவித்தை என்பதைப் பயமில்லாமற் சொல்லிடுவோம்!!

கார்த்திகை மாதத்தில் விரதத்தைத் தொடங்கி
காலையும் மாலையும் கருத்துடன் வணங்கி
காலணியும் அணிந்திடாது கடுந்தவம் புரிந்து
காட்டினில் உரைந்திடும் சாஸ்தாவைக் கண்டிடுவர்!

கழுத்தினில் மாலையும் கணக்காய்ச் சந்தனமும்
கருப்பினில் உடைகளும் கருத்தாய் பஜனைகளும்
கணமுழுதும் அந்நினைப்பும் கண்திறந்தால் அவனுருவும்
கனவிலும் ஹரிஹரனைக் கரம்கூப்பித் தொழுதிடுவர்!

ஆயிரங்களாய்ப் பக்தர்கள் ஆன்மிக உணர்வுடன்
ஆண்டிற்கு ஒருமுறை ஐயனைத் தொழுதிடுதல்
ஆண்டாண்டு காலமாய் அமைதியாய் நடந்திட
ஆங்குமோர் சிலருக்கு அடிவயிறு எரிந்ததென்னே?

ஆண்டவன் இல்லையென்பது ஆங்கவரின் உரிமையாகும்
ஆண்டவன் இல்லையென்று ஆராயாமல் சொல்பவரையும்
ஆண்டவனே காக்கின்றான் ஆணித்தரமாய் நம்புபவரின்
ஆழ்மனம் புண்படுத்தும் ஆணவஉரிமை யாருக்குமிங்கிலை!!!

வெ. மதுசூதனன்

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad