எல்லைப் பாதுகாப்புச் சுவரும் மக்களின் எதிர்பார்ப்பும்
உலக வரலாற்றில், பல நாடுகள் எதிரி நாடுகளிடமிருந்து காத்துக் கொள்ள எல்லைச் சுவர்களை எழுப்பியிருக்கின்றன . சுமேரிய நாகரீகம் தொடங்கி, ஏதென்ஸ் சுவர், சீனப் பெருஞ்சுவர், பெர்லின் சுவர், இந்திய வங்கதேச எல்லைச் சுவர் எனப் பட்டியல் நீள்கிறது. காலச் சுழற்சியில் இவற்றில் சில சுவர்கள் பலமிழந்து விழுந்து அழிந்தன. நாடுகளிடையே அரசியல் நல்லிணக்கம் ஏற்பட்டதால் சில சுவர்கள் தகர்க்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக புதிய எல்லைச் சுவர் பற்றிய தர்க்கமொன்று முளைத்து, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது.
கிழக்கு மேற்காக அமெரிக்க மெக்ஸிகோ நாடுகளின் எல்லை 1989 மைல் நீளம். இந்த எல்லை வழியே தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் முறையான அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் நுழைவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தீவிரக் கண்காணிப்பையும் மீறி இந்த ஊடுருவல் நடந்து வருகிறது. மனிதர்கள் நுழைவதோடு, போதைப் பொருட்களும் ஆயுதங்களும் இந்த எல்லைக் கோட்டின் வழியே கடத்தப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கும், சமூக நலனுக்கும் இந்த எல்லைப் பிரச்சனை பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புச் சுவர் ஒன்றை அமைப்பதென்பது 2016 தேர்தல் சமயத்தில் தற்போதைய அதிபர் டானல்ட் ட்ரம்ப் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று. மேலும் இந்தச் சுவர் எழுப்ப ஆகும் மொத்தச் செலவையும் மெக்ஸிகோ அரசாங்கத்தை ஏற்கச் செய்வோம் என்பதும் அவரது வாக்குறுதியின் அங்கம். மெக்ஸிகோ அரசாங்கம் இதற்கு அசைந்து கொடுக்காத நிலையில், அமெரிக்க காங்கிரசிடமிருந்து இந்தத் தொகையை எதிர்பார்க்கிறார் அதிபர் ட்ரம்ப். உறுதியான, இறுதி வடிவமைப்பு, திட்டங்கள் ஏதுமின்றி, பத்தாண்டுகளில் இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்த்து, மூன்று தவணைகளில் அவர் கோரும் மொத்தத் தொகை 18 பில்லியன் டாலர்கள்.
மெக்ஸிகோவிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, சாண்டியாகோ பகுதியில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை (US Border Patrol) 1990களில் முள் கம்பி வேலியமைத்தது. சுமார் பதினான்கு மைல்கள் அமைக்கப்பட்ட இந்த வேலியைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் கேட் கீப்பர்’, ‘ஆபரேஷன் சேஃப்’, ‘ஆபரேஷன் ஹோல்ட் த லைன்’ போன்ற நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியாக இல்லாமல், எல்லை மீறல்கள் அதிகளவில் நடக்கும் கலிஃபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு மே மாத வாக்கில், திட்டமிட்டபடி 652 மைல் தூரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுவிட்டது.
இந்த வேலிகள் போதுமான பாதுகாப்பைத் தருவதில்லை என்பது அதிபர் ட்ரம்பின் கருத்து. அதனால் வேலிகளுக்குப் பதிலாக சுவரை எழுப்பவேண்டுமென்பது அவரது திட்டம். சென்ற நவம்பர் மாதத் தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளவை பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில் இத்திட்டத்துக்கான எதிர்ப்பு வலுவடைந்து விட தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட பிரயத்தனப்பட்டு வருகிறார். சுவர் என்பதிலிருந்து ஏதேனுமொரு எல்லைத்தடுப்பு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். உலோகப் பட்டைகளால் வேலியமைத்து அதில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் கிடைக்கும் சூரிய சக்தியின் மூலம் இந்த வேலிக்கான செலவை விரைவில் ஈடுகட்டிவிடலாம் என்கிறார். மேலும் தற்போது இருக்கும் வேலிகளுக்கு இரண்டாம் அடுக்கு வேலியமைத்துப் பலப்படுத்துவதோடு கூடுதலாக 316 மைல்களுக்கு புது வேலி அமைப்பதும் அவரது திட்டத்தில் அடக்கம். மெக்சிகோ மறுத்துவிட்ட நிலையில் இந்தப் பத்தாண்டுத் திட்டத்திற்குக் காங்கிரசிடமிருந்து நிதியை எதிர்பார்க்கிறார் ட்ரம்ப். காங்கிரசின் இரு அவைகளிலும் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவசரகால அடிப்படையில் சுவருக்கான நிதியை ஒதுக்கவும் தான் தயங்கமாட்டேன் என்று சொல்லி வருகிறார் அதிபர்.
கலிபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா பகுதிகளில் வேலிகள் உண்டான பின்பு, இந்தப் பகுதிகளைத் தவிர்த்து வேலிகளற்றப் பாலைவனப் பகுதி வழியே ஊடுருவல் நடைபெறத் துவங்கியது. பாலைவனத்தில் பலநூறு மைல்கள் கடந்து வரவேண்டியிருந்ததால் ஆயிரக்கணக்கானோர் இந்த எல்லைப்பகுதியை நெருங்கு முன்னரே இறந்து விழுந்தனர். இதனால் இப்பகுதிகளில் ஊடுவருவல் விழுக்காடு பெரிதும் குறைந்து விட்டது. இயற்கையில் அடர்ந்த மலைகள், அகழிகளாக நதிகள், பாலைவனங்கள் அமைந்த இடங்களில் வேலிகளோ சுவர்களோ தேவையில்லை என்பது சிலரது எண்ணம்.
இந்தப் புதிய வேலியமைப்பு அமெரிக்கப் பகுதியில் சிலரது தனிப்பட்ட சொந்த நிலங்கள் வழியே செல்வதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தங்களது நிலங்களை இழக்க நேரிடும், அல்லது கதவுகள் அமைத்து வேலிக்கு அந்தப்புறமுள்ள நிலங்களைப் பயன்படுத்த வேண்டும்.
திருட்டுத்தனமாக எல்லைப் பகுதியைத் தாண்டி வருபவர்களை விட, தற்காலிக விசாவில் அமெரிக்காவுக்குள் நுழைந்து இங்கேயே தங்கி விடுபவர்கள் அதிகம். அமெரிக்காவுக்குக் கடத்தப்படும் போதைப்பொருட்கள் பெரும்பாலும் சோதனைச் சாவடிகள் வழியே, அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி ஏமாற்றியே உள்ளே கொண்டு வரப்படுகின்றன என்கிறது சில புள்ளி விவரங்கள்.
இக்கால அறிவியல் யுகத்தில், மெய்நிகர் எனப்படும் ‘வெர்ச்சுவல்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நகரக்கூடிய சுவர்களை அமைப்பது செலவை வெகுவாகக் குறைக்கும் என்பது ஜனநாயகக் கட்சியினரின் வாதம். இதன்படி, நகர் உணர் (Motion sensor) கருவி, தொலைதூரக் கண்காணிப்பு (Telescopic surveillance), இரவு நேர ஒளிப்படம் (night vision) போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் சாத்தியப்படும் என்கிறார்கள் இவர்கள்.
சரியாக இந்த நேரம் பார்த்து அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட, எல்லைப் பாதுகாப்புச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், அரசு செலவீனங்களுக்காக மட்டும் நிதி ஒதுக்குவதை நான் அனுமதிக்கமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அதிபர். பணப் பற்றாக்குறையால் மத்திய அரசின் பல பணிகள் மந்தமடைந்துவிட, சில துறைகள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளன. விவசாயம், போக்குவரத்து, உள்துறைப் பாதுகாப்பு, சுற்றுலா, நீதி, வணிகத்துறை போன்ற 9 துறைப் பணியாளர்கள் டிசம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து ஊதியமின்றி பணி செய்கிறார்கள். சுற்றுலாத் துறையின் பல பூங்காக்கள் மூடப்பட்டுவிட்டன. மத்திய புலனாய்வுத்துறை (FBI), போக்குவரத்துப் பாதுகாப்புத் துறை (TSA) உட்பட, பல சட்ட அமலாக்கத் துறைகளைச் சார்ந்த ஐந்து லட்சம் பேர் ஊதியமற்ற, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒருவர் மீதொருவர் பழி சொல்லும், இரு தரப்பினரின் பிடிவாத அரசியலால், ஒன்றுமறியாத அப்பாவிக் குடும்பங்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். வார / மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் நடுத்தர வர்க்கத்தினர் இவர்கள். மருத்துவம், கல்லூரிக் கட்டணம் போன்ற செலவுகள் கழுத்தை நெறிக்க, செய்வதறியாது ஸ்தம்பித்துள்ளது இவர்களது வாழ்வு.
அதிபர் இந்த இரண்டு பிரச்சினைகளையும் தனித்தனியாகக் கையாளவேண்டும் என்பது எதிர்க்கட்சியினரின் கருத்து. இந்தத் தருணத்தை விட்டுவிட்டால் எல்லைச் சுவர் பற்றிய தனது எண்ணம் கனவாகிவிடும் என்பது அதிபரின் கருத்து. இவர்களிடையே கூடிய விரைவில் சமரசம் ஏற்பட்டு, பணி முடக்கம் முடிவுக்கு வரவேண்டும், ஊதியமின்றி வருந்தும் பணியாளர் குடும்பங்கள் நிம்மதியடைய வேண்டும் என்பது நம்மைப் போன்ற சராசரி மனிதர்களின் கருத்து!
– ரவிக்குமார்.
Tags: எல்லை பாதுகாப்பு சுவர், டானல்ட் ட்ரம்ப், ட்ரம்ப், மெக்சிகோ சுவர்