அரசுத் துறைகளின் பணி முடக்கம்
அமெரிக்க அரசாங்கத் துறைகளில் சில, கடந்த 29 நாட்களாக, பணி முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ எட்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது இரண்டாவது சம்பளத்தைத் தவறவிட்டுள்ளார்கள். இவர்களில் மிக அத்தியாவசியமில்லாத துறைகளில் பணி புரியும் நான்கு லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, கல்வி, சட்ட ஒழுங்கு போன்ற அத்தியாவசியத் துறைகளிலும் பணிகள் மந்தமடைந்துள்ளன.
பொதுவாக, வரப்போகும் ஆண்டுக்கான வரவு செலவுகள் கணக்கிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செப்டம்பர் இறுதியில், இரு அவைகளின் ஒப்புதலுடன் அதிபரால் அங்கீகரிக்கப்படும். சில சமயம் கொள்கை முரண்பாடுகளால் நிதி ஒதுக்கீடு முடிவுகள் தாமதப்படுவதுமுண்டு. இப்படிச் சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீடு நிகழாத காரணத்தால், இதற்கு முன்னர் பலமுறை அரசுப் பணிகள் முடங்கியுள்ளன. பெரும்பாலும் ஓரிரண்டு நாட்கள் நீடிக்கும் பணி முடக்கம் அதிகபட்சமாக 22 நாட்கள் போனதுண்டு. ஆனால் இந்த முறை நிதிப் பற்றாக்குறையினால் நான்கு வாரங்களைக் கடந்தும் முடக்கம் நீடிக்கிறது.
கடந்த டிசம்பர் வரை நீடித்த பேச்சு வார்த்தைகளில், ஃபிப்ரவரி 2019 வரைக்குமான நிதியையாவது ஒதுக்கிடலாம் எனும் முடிவை ஏற்கும் நிலையிலிருந்தார் அதிபர் ட்ரம்ப். ஆனால் டிசம்பர் 20ஆம் தேதி திடிரென, தனது முடிவை மாற்றிக் கொண்டு, ‘மெக்சிகோ சுவருக்கான ஒதுக்கீடு இல்லாமல் இந்த பட்ஜெட்டை நான் அங்கீகரிக்கப் போவதில்லை’ என்று அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு வலது சாரியினர் கொடுத்த அழுத்தந்தான் காரணம் எனப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றிய போது “நாட்டின் பாதுகாப்பு அதி அவசியமானது. பாதிக்கப்பட்டுள்ள அரசுப் பணியாளர்கள், நிதி ஒதுக்கீட்டுக்குப் பின், தங்களது மொத்தச் சம்பளத்தையும் பெற்று விடுவார்கள். ஆனால் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியாது. அதற்கான நிதியில்லாத பட்ஜெட்டை என்னால் ஏற்க முடியாது. எனது இந்த முடிவை நாடெங்குமுள்ள பாதிக்கப்பட்ட பணியாளர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.
தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களை மட்டுமே பாதித்து வந்த அரசாங்கப் பணி முடக்கம், மெதுவாகப் பொது மக்களையும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருவதை உணரத் தொடங்கியுள்ளோம். விவசாயத் துறைப் பணிகள் முடங்கிய காரணத்தால் வருமாண்டு விவசாயத்தில் பெரும் தேக்கம் ஏற்படும் அபாயமுள்ளது. ஏழைகளுக்கு வழங்கப்படும் ‘ஃபுட் ஸ்டாம்ப்’ திட்டம் தடைபடக்கூடும். வெளிநாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர் சம்பளமின்றி அவதிப்படுகின்றனர். FDA எனப்படும் உணவுப் பாதுகாப்புத் துறையின் பல பகுதிகள் முடங்கிவிட்டதால் உணவுப் பொருட்கள் பரிசோதிக்கப்படாமல் தேங்கி அழிந்து வருகின்றன. சில பொருட்கள் பரிசோதனையின்றி நுகர்வுக்கு அனுப்பப்படுகின்றன. TSA எனப்படும் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பின் பணியாளர்கள் பலர் ஊதியம் கிடைக்காத காரணத்தால் விடுப்பெடுத்து எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். இதனால் விமானத்தள சேவைகள் பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பு குறித்த அச்சம் மிகுந்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை நிர்வகிக்கும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை முடக்கத்தினால், விசா அனுமதிக்காக காத்திருப்போர் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே சமயம், வீசா காலம் முடிந்த நிலையில் பலர் தங்கிவிட, முறையற்ற குடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தனது பிடிவாத குணத்தால், அரசுப் பணியாளர்களைப் பிணைகளாக்கி நாட்டையே அச்சுறுத்தி வருகிறார் அதிபர் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். பாதுகாப்புச் சுவருக்கான ஐந்து பில்லியன் டாலர்கள் இல்லாத பட்ஜெட்டை எத்தனை ஆண்டுகளானாலும் அனுமதிக்கமாட்டேன் என்கிறார் அதிபர்.
நாட்டின் செயல்பாடும், பாதுகாப்பும் அரசியல் கட்சிகளின் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. இந்த நகர்வற்ற நிலை விரைவில் மாறவில்லையென்றால், ஏற்கனவே தகித்துக்கொண்டிருக்கும் பொருளாதார மந்த நிலைக்கு எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துவிடும்.
– ஆசிரியர்
Tags: Shutdown, தலையங்கம், பணி முடக்கம்