\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பேட்ட

எண்பது, தொண்ணூறுகளில் ரஜினி படங்களுக்கு அச்சிறுவனை அழைத்துச் செல்வார் அந்த ரஜினி ரசிகர். அப்படி ஒரு படம் பார்க்கச் சென்றிருந்த சமயம், தியேட்டருக்குள் ஓடும் போது, அச்சிறுவன் கீழே விழுகிறான். “அடி பட்டதா” எனத் தந்தை கேட்க, இல்லையென்கிறான். “அப்ப, எந்திரி… ஓடலாம். படம் போட்டுட்டான்” என்று அழைத்துக் கொண்டு ஓடுகிறார் அந்தத் தந்தை. இது போன்ற அனுபவத்தை அன்றைய சிறுவர்கள் பலர் அடைந்திருப்பார்கள். அச்சிறுவர்கள் ரஜினி ரசிகர்களாக வளர்ந்து, இன்றும் ரஜினி ரசிகர்களாக இருக்கலாம். முதல் நாள் முதல் காட்சிக்குக் குடும்பத்துடன் சென்று கொண்டிருக்கலாம். ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட சிறுவன் ரஜினி ரசிகனாக வளர்ந்து, சினிமாவில் இயக்குனராக ஆகி, இன்று ரஜினி படம் எடுத்து, அதில் தன் தந்தையை அவருடன் நிற்க வைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறான். படம் – பேட்ட. இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ்.

ரஜினி சமீபகாலமாகத் தாறுமாறாகப் படங்களில் நடித்தாலும், ஏதோ ஒரு வித்தியாசத்தைப் படத்தில் வைத்து நம்மை உள்ளே இழுத்து விடுகிறார். கருத்தியல் சார்ந்த ரஞ்சித் படம், டெக்னாலஜி கொண்ட ஷங்கர் படம் என வேறெந்த நடிகரும் காட்டாத வெரைட்டியைப் படத்திற்குப் படம் காட்டி வருகிறார். அதே சமயம், பழைய ரஜினி படங்களில் இருந்த ஒரு அம்சம் இப்படங்களில் மிஸ்ஸாகிக் கொண்டே வந்தது. ரஜினியின் குறும்புத்தனம், ஸ்டைல், ரொமான்ஸ், அதிரடி என அனைத்தும் சேர்ந்ததாக ஒரு படம் வந்து நாளாகி விட்டது. ரஜினிக்கு வயதாகி வருவதும் அதற்கு ஒரு காரணம். இப்படிப்பட்ட சமயத்தில் அந்தப் பழைய ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் பேட்டயில் மீட்டெடுத்து ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.

கல்லூரி ஹாஸ்டல் வார்டனாகச் சிபாரிசில் வந்து சேரும் காளி, அங்கு நடக்கும் அடாவடிகளைத் தனது அதிரடி பாணியில் சரி செய்கிறார். ஒரு இளம் காதல் ஜோடியை ரவுடி மாணவர்களிடம் இருந்து காக்கிறார். அதன் பின்னணியைக் கூற, கதை மதுரைக்குச் செல்கிறது. காளியின் பேட்ட வேலன் பின்னணியும், வில்லனை அவர் விரட்ட வேண்டிய காரணத்தையும் அந்த ப்ளாஷ்பேக் கூறுகிறது. இரண்டாம் பாதியில் கதை உத்தரப் பிரதேசத்திற்கு நகருகிறது. அங்கு வில்லனை சில சூழ்ச்சிகள் மூலம் வீழ்த்துவது மிச்ச பாதிப் பேட்ட.

கடைசிச் சில காட்சிகளைத் தவிர, முழுக்க முழுக்க ரஜினி படமாகப் பேட்டயை எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரசிகர்கள் ரஜினியை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதை நிகழ்த்தியிருக்கிறார். இதற்காக அவர் ஒளிப்பதிவாளர் திரு, ஒப்பனையாளர் பானு, உடை வடிவமைப்பாளர் நிஹரிகா ஆகியோருடன் அமைத்த கூட்டணி நல்ல பலனை அளித்திருக்கிறது. முதல் பாதியில் ரஜினியை வைத்து துள்ளலான காட்சிகளை அமைத்திருக்கிறார். நாம் ஏற்கனவே பார்த்து, நம் மனதில் தங்கிப்போன “உள்ளே போ”, “பாம்பு பாம்பு” போன்ற வசனங்களை, மீண்டும் ரஜினியைப் பேச வைத்து ரசித்திருக்கிறார். ரஜினியுடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட சிம்ரன், த்ரிஷா போன்றோரின் ஆசைகளை நிறைவேற்றி வைத்துவிட்டார்.

ரஜினி தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு போன்ற இயக்குனர்களிடம் இளம் தோற்றத்தில் கமர்ஷியல் படங்களாக நடித்துக்கொண்டிருந்த போது, பலர் அவர் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் அமிதாப் போல் நடிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தனர். அவரும் அப்படித் தடம் மாறி நடிக்கத் தொடங்கினார். அப்படங்கள் சுமாராகவே ஓடின. இப்போது மீண்டும் பழைய பாணிக்குத் திரும்பிவிட்டார். இதற்கு இப்போது நல்ல வரவேற்பைக் காண முடிகிறது. 69 வயதில் இப்படிப்பட்ட நடிப்பைக் கொடுப்பது பெரிய விஷயந்தான். காமெடி, ஆக்ஷன், நடனம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறார் ரஜினி. என்னதான் நல்ல மேக்கப் போட்டாலும், கை, கழுத்து போன்ற பகுதிகள் ரஜினியின் வயதைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. தனது குரலினாலும், நடிப்பினாலும் அதை ஈடு கட்டி விடுகிறார்.

படத்தில் ரஜினிக்கு அடுத்து,  சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது விஜய் சேதுபதி. இதற்கு விஜய் சேதுபதி தேவையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனக்குக் குறும்படங்களில் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து, பெரிய திரையில் நல்ல வாய்ப்புகளை வழங்கிய கார்த்திக் சுப்புராஜிற்காக நடித்திருப்பார். விஜய் சேதுபதியையும், ரஜினியையும் ஒரு சேர திரையில் பார்க்க அருமையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விஜய் சேதுபதியை ரஜினியிடம் சேர்ந்து விளையாட விட்டிருக்கலாம். கடைசி ட்விஸ்ட் இல்லாமலிருந்தால், விஜய் சேதுபதி ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

ரஜினியின் மதுரைத்தோழனாக சசிகுமார். கொஞ்ச நேரமே வரும் முக்கிய பாத்திரம். தனது வழக்கமான நட்பைப் போற்றும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நவாசுதீன் சித்திக் வீக்கான உடம்பில் ரஜினியின் வில்லனாக வந்திருப்பது படத்திற்கு வீக்னெஸ்ஸைக் கொடுக்கிறது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவருடைய நடிப்பிற்கான தீனி கிடைத்திருக்கிறது. பாபி சிம்ஹாவும், ஆடுகளம் நரேனும் முதல் பாதியில் ரஜினியிடம் கொஞ்சம் நேரம் வம்பிழுத்துவிட்டு, பிறகு அவருடைய கூட்டத்திலேயே வந்து சேருகிறார்கள். முனீஷ் காந்த்தும் முதல் பாதியில் சிறிது நேரம் வந்து, ரஜினியின் காமெடிக்கு கை கொடுக்கிறார்.

படத்தில் திருவின் ஒளிப்பதிவு க்ளாஸைக் கொடுக்கிறது என்றால் அனிருத்தின் இசை மாஸைக் கொடுக்கிறது எனலாம். திருவின் ஒளிப்பதிவில் அந்தச் சிவப்பு கலர் டோன், படத்திற்கு ஒருவித மர்ம உணர்வைக் கொடுக்கிறது. அனிருத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்தைத் தாங்கி பிடிக்கின்றன. முதலில் தொடங்கும் சண்டை, அதற்கான பின்னணி, ப்ளாஷ்பேக், க்ளைமாக்ஸை நோக்கிய காட்சிகள் என விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் சிறப்பு. இரண்டாம் பாதியில் கார்த்திக் சுப்புராஜும், விவேக் ஹர்ஷனும் கதையையும், காட்சியையும் இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். ரொம்ப நேரம் ஓடுவது போன்ற உணர்வைக் குறைத்திருக்கலாம்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகராக மட்டும் இயக்கிய படமென்பதால், இயக்குனரின் முந்தைய படங்களில் இருந்த புத்திசாலித்தனம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தவிர வேறெங்கும் இல்லை. காதலர் தின வன்முறை, கலப்புத் திருமண எதிர்ப்பு, ஆணவக் கொலை, மாட்டுக் கறிப் பிரச்சினை போன்ற சம காலச் சமூக நிகழ்வுகளை, ஆங்காங்கே காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருந்தாலும், அதன் அரசியலை இதில் ஆழப் பேசவில்லை. பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் பேட்ட, ரசிகர்களின் பண்டிகை தினக் கொண்டாட்ட மன நிலைக்கான படம். லாஜிக் காணாமல், ரஜினியின் மேஜிக்கைக் காண விரும்புவர்களுக்குப் பேட்ட கண்டிப்பாகப் பிடிக்கும்.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad