காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (பிப்ரவரி 2019)
2019 வருடம் தொடங்கி வெளியாகிய படங்களில் நல்ல சதவிகிதத்தில் ஹிட் பாடல்கள் இதுவரை வரத் தொடங்கியுள்ளது. படங்களின் வரத்தில் ஒரு முறைமையைக் காண முடிகிறது. பெரிய படங்கள் என்றால் ஒன்றோ, இரண்டோ மட்டும் வெளியாகிறது. அதற்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மத்திம, சிறு படங்கள் அடுத்தச் சில வாரங்களில் கூட்டங் கூட்டமாக வெளியாகின்றன. படத்தின் அறிமுகத்திற்காக மட்டும் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. அதற்குச் செலவு செய்யத் தயாராக இல்லாத நிறுவனங்கள் யூ-ட்யூப் வழியே, ட்வீட்டர் வழியே பிரபலங்கள் மூலம் பாடல்களை வெளியிடுகிறார்கள்.
இனி இப்பகுதியில் முன்னணியில் இருக்கும் பாடல்களைக் காணலாம்.
பேட்ட – உல்லாலா/மரண மாஸ்
பேட்ட படத்தின் பாடல்கள் சென்ற வருடத்தின் இறுதியில் வெளியாகி, படம் பொங்கலுக்கு வெளியாகியது. அனிருத்தின் பாடல்கள் தாறுமாறாக ஹிட்டாகின. ரஜினி படத்திற்கு முதன்முதலாக அனிருத், சந்தோஷ் நாராயணனின் இசையல்லாத முதல் கார்த்திக் சுப்புராஜ் படம் ஆகிய எதிர்பார்ப்புகளை அனிருத் நன்றாகவே பூர்த்திச் செய்தார். படத்தின் பாடல்கள் மட்டுமில்லாமல், பின்னணி இசையிலும் கலக்கியிருந்தார் அனிருத். மரண மாஸ் பாடல் உடனடியாக இளைஞர்களைச் சென்றடைந்தது. உல்லாலா பாடல் க்ளாஸாக ரஜினியின் தத்துவப்பாடல் பாணியில், மெக்சிகன்/இலங்கை சாயல் இசையுடன் புதுசா, ஒரு தினுசா மின்னியது.
விஸ்வாசம் – கண்ணான கண்ணே/வேட்டி கட்டு
அஜித்-சிவா கூட்டணி அனிருத்திடம் இருந்து இமானுக்கு விஸ்வாசம் படத்தில் இடம் மாறியது. படத்திற்குத் தேவைப்பட்ட கிராமத்து அடியை இமானும் தரமாக அளித்தார். தந்தையின் தாய்மையைத் தாமரையின் அழகாக வரிகளில், சித் ஸ்ரீராமின் நெகிழ்வான குரல், ‘கண்ணான கண்ணே’ பாடலில் சுகமாகப் பாடியது, வருடங்களைக் கடந்து நிற்கும். இப்பாடலுக்கான பாடல் வரிகள் தமிழில் யூ-ட்யூபில் வழங்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு. அஜித் ரசிகர்களுக்குத் தேவைப்பட்ட இன்ஸ்டண்ட் குத்தை ‘வேட்டி கட்டு’ பாடல் கொடுத்தது. வேட்டி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் விளம்பரத்தையும் இப்பாடல் கொடுக்கும்.
சார்லி சாப்ளின் – சின்ன மச்சான்
விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினர் ஒரு பெரும் ஹிட்டுடன் திரையுலகிற்கு இப்பாடலுடன் நுழைந்தனர். செல்ல தங்கய்யா எழுதிய இந்த நாட்டுப்புறப் பாடல், ஏற்கனவே அவர்கள் பாடியது தான். சினிமாவிற்குத் தேவையான பட்டி டிங்கரிங்குடன் அம்ரிஷ் அவர்களின் இசையில் பிரபுதேவா – நிக்கி கல்ரானியின் குத்தாட்டத்துடன் வெளியாகி மீண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் முகவரியாகவும் இப்பாடல் அமைந்தது.
சர்வம் தாள மயம் – சர்வம் தாள மயம்
தொண்ணூறுகளின் ரஹ்மான் ஹிட் சாங்ஸ் வரிசையில் மின்சாரக் கனவுக்கும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்கும் கண்டிப்பாக இடமுண்டு. இப்படங்களில் ரஹ்மானின் பாடல்களை, ராஜீவ் மேனனின் படமாக்கம் மேலும் சிறப்புற செய்திருந்தது. மீண்டும் இக்கூட்டணி பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘சர்வம் தாய மய’த்தில் இணைந்திருக்கிறது. இசை சார்ந்த படங்கள் தற்சமயம் வெளியாவதில்லை என்ற நமது ஏக்கத்தை இப்படம் பூர்த்திச் செய்துள்ளது. இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாரே இந்த இசை சார்ந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளது, அவர் நடிக்க வந்ததின் பயனாக அமைந்தது.
பேரன்பு – அன்பே அன்பின்
சமூகத்திற்கு அர்த்தமுள்ள படங்களை அளித்துவரும் இயக்குனர்களில் ஒருவரான ராம், மம்மூட்டி, சாதனா, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் இயக்கியிருக்கும் படம், பேரன்பு. உலகப் படவிழாக்கள் பலவற்றில் கலந்துவிட்டு, தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விமர்சகர்களால் பாராட்டப்படும் இப்படத்திற்கு ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘அன்பே அன்பின் அத்தனையும் நீயே’ என்ற இந்த மனதை வருடும் பாடலை யுவனுடன் சேர்ந்து பாடகர் கார்த்திக் பாடியுள்ளார்.
இவை தவிர, சென்ற ஆண்டு வெளியான ரவுடி பேபி பாடல், யூ-ட்யூப்பில் தற்போதைய நிலையில் 160 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. சென்ற வாரம் வெளிவந்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வந்திருக்கும் ‘வாங்க மச்சான்’ ரீ-மிக்ஸ் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தேவ் பாடல்கள் வெளியாகிவுள்ளது. படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது.
- சரவணகுமரன்.
Tags: top tamil songs, தமிழ் பாடல்கள்