அழகிய ஐரோப்பா – 13
(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316)
போகும் வழியில்
ஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள்.
காலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது.
சுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று நின்றோம்.
வரவேற்க நின்றிருந்த ஆண் எங்களைக் கண்டதும் புனைகையுடன் அழகிய தமிழில் “வணக்கம்” சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.
அவருக்கு “வணக்கம்” சொன்னபின் “ அண்ணா சாப்பாடு ரெடியா? நாங்கள் டிஸ்னி லேண்ட் போகவேணும்” என்றேன்.
“ஓம் நீங்கள் சாப்பிடுங்கோ இன்னும் 5 நிமிசத்தில் எல்லாம் வந்திடும்” என்றபடி உள்ளே சென்றார்.
நானும் ரெஸ்டாரெண்ட்லில் பணிபுரிந்திருக்கிறேன். இருப்பினும் கோலம் ரெஸ்டாரெண்ட் பஃபே என்னை மிகவும் கவர்ந்தது. ஏகப்பட்ட வெரைட்டிகள்.
நீண்ட நெடிய பஃபே, லைவ் குக்கிங் ஸ்டேஷன்ஸ், ஆம்லெட் ஸ்டேஷன் என படு பிஸியாக இருந்தது இந்த ரெஸ்டாரெண்ட்.
ஒரு கார்னரில் பெண் ‘ஷெஃப்’ (Chef) ஒருவர் சுடச் சுட புரோட்டா தயாரித்து கொண்டிருந்தார். மறுபுறம் வாடிக்கையாளரின் எதிரேயே ‘நாண்’ தயாரித்து கொடுக்கின்றனர். அதற்கு சைட்டிஷ்ஷாக பருப்பு வகைகள் அணிவகுத்திருந்தன.
ஆம்லெட் ஸ்டேஷனில் நாம் விரும்பும் விதத்தில் முட்டையைப் பொரித்து கொடுக்கின்றனர். ‘மிக்ஸ் ஆம்லேட்’, ‘ஃப்ரைட் எக்’, ‘சன்னி சைட் அப்’ என ஏகப்பட்ட ரகங்களில் நம் முன் செய்து தந்து அசத்துகின்றனர்.
இன்னொரு புறத்தில் சிக்கன், மட்டன் சூப் என சூடாகச் செய்து தருகின்றனர்.
வகை வகையான கனிவர்க்கங்கள், ஸலாட் வகைகள், ஜூஸ், காஃபி, டீ என அந்த இடமே களை கட்டியிருந்தது.
எல்லா உணவுகளும் தரமாகவும், சுவையாகவும் இருந்தன. சிக்கன் வெரைட்டீஸ், ஸ்பிரிங் ரோல்ஸ், சாசேஜ், சமோசா, உளுந்து வடை என அங்கு உணவுத் திருவிழா நடப்பது போல் இருந்தது.
எதையும் கேட்டு பெற வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கவில்லை. கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் தானாக வந்து சேர்ந்தன.
லன்ச் திருப்திகரமாக இருந்ததினால், அங்குள்ள மேனேஜரை அழைத்து பாராட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி டிஸ்னி நோக்கி விரைந்தோம்.
டிஸ்னி வால்ட் என்ற இந்த அற்புத பூங்காவை அமைத்தவர் வால்ட் டிஸ்னி. 1955 இல் கலிபோர்னியாவில் 160 ஏக்கர் நிலத்தில் ஒரு பூங்காவை அமைத்து அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் புளோரிடாவில் சுமார் 28000 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான பூங்காவை அமைத்துக் கொண்டிருந்த போது 1966 இல் இறந்து போனார். அதன் பின் 1971ஆம் ஆண்டு அந்த பிரமாண்ட பூங்கா திறக்கப்பட்டு அவரின் நினைவாக டிஸ்னி வேர்ல்ட் என பெயரிடப்பட்டது.
பாரிஸ் நகரில் இருந்து சுமார் 30 நிமிட பயண தூரத்தில் உள்ள அழகிய டிஸ்னி லேண்ட் என்னும் இந்த பூங்காவைக் காணும் ஆவலில் குட்டிஸ் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் அந்த அழகிய பூங்காவின் நுழை வாயிலில் சென்று நின்றது எங்கள் வேன்.
-தியா-