இந்திய நாட்டின் கறுப்புத் தினம்
நாடு முழுதும் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில், ஜம்மு காஷ்மீரில், புல்வாமா மாவட்டப்பகுதியில் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு ராணுவ ஜவான்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர்.
நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதும், போர் கால ஆக்கிரமிப்புகளை தடுத்து முறியடிப்பதும் இப்படையினரின் முதன்மை குறிக்கோள். போர் முறைகளையும், அறங்களையும் முழுக்க அறிந்து பயிற்சி பெற்ற வீரர்கள் இவர்கள். இவர்களின் வீரத்துக்கு முன், நேர் நின்று போர் செய்யத் துணிவில்லாத ஈனன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருப்பது இந்திய நாட்டையே கொந்தளிக்கச் செய்துள்ளது.
எல்லைக் கோட்டுக்கானப் பிரச்சனையாகக் கருதப்பட்டு வந்த காஷ்மீர் பகுதி ஜிஹாதிகளின் ஊடுருவல்களால், சமீபக் காலங்களில் பயங்கரவாதிகளின் கோரத் தாண்டவங்களை எதிர்கொண்டு வருகிறது. சென்ற டிசம்பர் மாதம் ஷோபியான் மாவட்டத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி 3 ஆயுதப் படைக் காவலர்களை வீழ்த்திய ‘ஜெய்ஷ்-ஏ-முகமது’ என்ற தீவிரவாத இயக்கந்தான், ஃபிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது. 2001ல் காஷ்மீர் சட்டசபையருகே தாக்குதல் நடத்தில் 38 பேரை கொன்றதற்கும், 2016ல் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் 13 இந்திய வீரர்களைக் கொன்றதற்கும் இந்த இயக்கமே பொறுப்பேற்றது.
பாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு இயங்கும் இந்த இயக்கம் அந்நாட்டின் உளவுத்துறையான ‘ஐ.எஸ்.ஐ’யின் ஆதரவு பெற்றது என்ற உறுதி செய்யப்படாத கருத்தும் நிலவுகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் அவ்வப்போது இவ்வியக்கங்களைத் தடை செய்வதும் பின்னர் தளர்த்துவதும் மேற்சொன்ன சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே இருந்துவருகிறது.
தீவிரவாதச் சம்பவங்கள் நடந்தவுடன், இவ்வியக்கங்களை ஒடுக்குவதில் இந்தியா காட்டும் முனைப்பும் வேகமும் மெதுவே குறைந்துவிடுகின்றன. இந்த அமைப்புகளின் மீதான கண்காணிப்பு தொய்வடைந்துவிடுகிறது. சமீபத்திய தாக்குதல் குறித்த சில சமிக்ஞைகளை உளவுத்துறை கவனிக்கத் தவறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீரர்களை ஒரே சமயத்தில் பயணிக்கச் செய்ததற்குக் காலநிலை குழப்பங்கள் காரணமென்றாலும் இந்தத் தகவல்கள் தீவிரவாத அமைப்பினருக்கு கசிந்தது புதிராகவேயுள்ளது.
தீவிரவாதம் நியாயப்படுத்தப்படக் கூடாது. இந்த அமைப்புகள் சரியான முறையில் தண்டிக்கப்படவேண்டியவை; தகர்க்கப்படவேண்டியவை. அதற்கு நாடுகளிடையேயான போர் தான் தீர்வா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. பாகிஸ்தானை ‘வர்த்தகம் செய்ய தகுதியுள்ள’ நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கியுள்ளது ஆசிய வர்த்தகவுலகில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்தியாவின் மக்கட்தொகையை நம்பி முதலீடு செய்துள்ள நாடுகள் இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளன. சீனா வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் தங்கள் குடிகளைப் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. இரு நாடுகளின் வளர்ச்சியை, குறிப்பாக பொது மக்களை, போர் முடிவு பாதிக்கச் செய்யும். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான போர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததை உலகம் எளிதில் மறந்துவிடாது . சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா, வட கொரிய நாடுகளுக்கிடையே உருவாகவிருந்த ‘மூன்றாம் உலகப் போர்’ தொடங்கிட ‘புல்வாமா’ நிகழ்வு காரணமாகிவிடக்கூடாது.
இன்னும் சில மாதங்களில் இந்திய நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் ஆதாயங்களுக்காக ‘புல்வாமா’ நிகழ்வைப் பயன்படுத்துவதும், அரசியல் சாயம் பூசுவதும் தவிர்க்கப்படவேண்டும். பாதுகாப்பு பயிற்சி சமயங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ‘புல்வாமா’ தாக்குதலில் சிதறிப் போன உடல்கள் என்றும், என்றோ எங்கோ எடுக்கப்பட்ட காணொளிகளை புல்வாமா தாக்குதலின் CC TV காட்சிகள் என்றும், இந்தத் தாக்குதலைக் கேட்ட பின்னரும் அரசியல் தலைவரொருவர் சிரித்து மகிழ்ந்தார் என்று சமூகத் தளங்களில் பதிவிடுவதும் தீவிரவாதச் செய்கைகளை விட கீழ்த்தரமானது. இவ்வகையான தனிமனித கருத்துகள் மத இன வேற்றுமைகளைக் கடந்து நாட்டுக்காகப் பணியாற்றும் வீரர்களிடையே பிளவை ஏற்படுத்திவிடும் அபாயம் நிறைந்தவை.
உணர்வு மேலோங்க கூக்குரலிட்டு அரசாங்கத்தையும், ராணுவத்தையும் துவேஷிக்காமல். கட்சி சார்பு, மத வேறுபாடுகள் கடந்து ஒருமித்து எடுக்கவேண்டிய செயல்பாட்டு முடிவுகள் இவை. இம்முடிவுகள் ‘புல்வாமா’ போல் இன்னொரு தாக்குதல் நடப்பதைத் தவிர்ப்பதாக இருக்கவேண்டும். இவ்வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் போல இன்னுமொரு குடும்பம் கூட தவிக்கக்கூடாது.
– ஆசிரியர் குழு