\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாட்ஸ்அப் தசாப்தம்

வாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை நல்ல நிலைக்கு இருவரும் கொண்டு வந்தனர். அறிமுகமான முதல் வருடத்திலேயே இரண்டரை லட்சம் பயனாளிகள் சேர்ந்ததும், அதை மேம்படுத்த மேலும் நிதி சேர்க்க பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை தொடங்கினார்கள். சிலகாலம் கட்டணமாகப் பயனர்களிடம் இருந்து ஒரு டாலர் வசூலிக்கத் தொடங்கினர். பின்னர், பல்வேறு காரணங்களுக்காக அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, முழுவதும் இலவசச் சேவையை வழங்கினர். வருமானத்திற்கு முதலீட்டாளர்கள், தொழில் சேவை எனப் பிற வழிகளைக் கையாண்டனர்.

ஆரம்பித்த ஐந்து வருடத்தில் 400 மில்லியன் பயனர்கள் என்றதும், வாட்ஸ்அப் நிறுவனத்திற்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது. எந்தவொரு விஷயத்தையும் உடனே 400 மில்லியன் பேருக்குக் கொண்டு செல்லலாம் என்றால் அதற்குக் கிராக்கி இருக்கத்தானே செய்யும்? 2014 பிப்ரவரியில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் மதிப்பு ஒன்றரை பில்லியன் டாலர்கள் என்று இருக்கும் போது, ஃபேஸ்புக் நிறுவனம் அதைப் பத்தொன்பது மில்லியன் டாலர்கள் என்று பெரும் பணம் கொடுத்து வாங்கியது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ப்ரையனும் ஜேனும் ஃபேஸ்புக்கில் வேலை கேட்டு நிராகரிக்கப்பட்டிருந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் வாங்கியவுடன் தொடக்கத்தில் சில பயனர்கள் வாட்ஸ்அப்பை விட்டு விலகினார்கள். இருந்தாலும், வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்ட புதிய வசதிகளின் காரணமாக மொத்த பயனர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வந்த குறுஞ்செய்திகளின் பயன்பாடு குறைந்து, வாட்ஸ்அப்பின் மெசேஜ்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியா போன்ற நாடுகளில் பண்டிகை தினங்களின் போது, குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கான கட்டணத்தைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரிக்கும். அம்மாதிரியான வருமானத்திற்கு வாட்ஸ்அப்பின் வருகை பெரும் அடியைக் கொடுத்தது. “மெசெஜ் அனுப்பிடு” என்பதற்கு இணையாக “வாட்ஸ்அப் அனுப்பிடு” என்று சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது

கடந்த பத்தாண்டுகளில் வாட்ஸ்அப் பலவிதங்களில் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், சர்ச்சைகளிலும் சிக்காமல் இல்லை. தொடக்கத்தில் ஃபேஸ்புக்கின் தகவல்களும், வாட்ஸ்அப்பின் தகவல்களும் கலக்காது என்று உறுதிக்கொடுக்கப்பட்டிருந்தாலும், பயனர்கள் வாட்ஸ்அப்பில் பரிமாறிக்கொள்ளும் செய்திகளுக்கு ஏற்ப, அவர்களது ஃபேஸ்புக் கணக்கில் விளம்பரங்கள் வரத்தொடங்கியது. 2017இல் முதலில் ப்ரையனும், பின்பு 2018இல் ஜேனும் வாட்ஸ்அப்பை விட்டு விலகினர். பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாததை அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார். தனது ஃபேஸ்புக் கணக்கையே மூடிவிடுவதாக ப்ரையன் அறிவித்தது பெரும் பரபரப்பை அச்சமயம் இணையத்தில் ஏற்படுத்தியது.

வாட்ஸ்அப் பயன்பாட்டிலும் சிக்கல்கள் எழத்தொடங்கியது. வதந்திகள் பரப்புவது சுலபமானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தைகளைக் கடத்த ஒரு குழு வந்துள்ளது என்ற வாட்ஸ்அப் வதந்தியை நம்பி, சந்தேகத்திற்கு இடமான மூன்று அப்பாவிகள் கடந்தாண்டு பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் 30க்கும் மேற்பட்டோர் இவ்வாறு வாட்ஸ்அப் தகவல்களை நம்பி தவறாகக் கொல்லப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது வருத்தத்திற்குரியது.

இயற்கை பேரிடர்களின் போது, தகவல் பரிமாற்றத்திற்கும், உதவி கோருவதற்கும் வாட்ஸ்அப் நல்ல விதத்தில் உதவினாலும், அச்சமயத்தில் போலி செய்திகளும், தேவையற்ற செய்திகளும் கடுப்பை ஏற்படுத்தும்விதமாக வலம் வந்துக்கொண்டே இருக்கிறது. தங்கள் அபிமானத்திற்குரிய நடிகர் கோடிக்கணக்கில் நடந்த துயரத்திற்குப் பணம் கொடுத்தார் என்ற செய்திகளெல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்பது போல் ஒவ்வொரு துயரச் சம்பவத்தின் போதும் இது போன்ற பொய்ச்செய்திகள் பரப்பப்படும்.

தேர்தல்களின் போது வாட்ஸ்அப் மூலம் நடைபெறும் முறைகேடுகள் உலகெங்கிலும் பரவிவருகிறது. கடந்தாண்டு நடந்த பிரேசில் நாட்டு தேர்தலின் முடிவில் வாட்ஸ்அப்பிற்கு இருந்த பங்கு பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தாண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலிலும் வாட்ஸ்அப்பின் பங்கு இருக்குமென்றும் அதற்காகக் கட்சிகள் சார்பில் பல நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்றும் செய்திகள் வலம் வருகின்றன. ஜனநாயகத்தின் இயல்பையே குலைக்க வல்ல இடத்தை வாட்ஸ்அப் பெற்றுவருவது இதன் மூலம் தெரிகிறது.

சிலருக்குக் காலையில் Good Morning மெசேஜோ, ஸ்டேடஸோ அனுப்பாவிட்டால் பொழுது விடியாது. அதேப்போல், Good Night மெசேஜ் இல்லையென்றால் தூக்கம் வராது. கேடிவி போலச் சிலரது ஸ்டேடஸில் சினிமா பாடல்களும், காட்சிகளும் ஒளிப்பரப்பாகிக்கொண்டே இருக்கும். தாங்கள் சமைப்பதையும், சாப்பிடுவதையும் தொடர்ச்சியாக ஒளிப்பரப்பிக்கொண்டு இருப்பதைச் சிறு குற்றமாகக் கருதி மன்னித்துவிடலாம். ஆனால், சரியான ஆதாரமே இல்லாமல் பரப்பப்படும் மருத்துவக்குறிப்புகளும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செய்திகளும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவல்ல குற்றங்கள் எனக் கருதவேண்டியுள்ளது. நமக்குச் சம்பந்தமே இல்லாத க்ரூப்பில் நம்மை இணைத்துவிட்டு, நாம் வெளியே வந்தாலும் திரும்பத் திரும்ப நம்மைக் கோர்த்துவிடும் வன்முறையைத் தடுக்க, புதிதாக ஏதாவது சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில், வாட்ஸ்அப் கடந்த பத்து வருடத்தில் கடந்து வந்த பாதையில் அது ஏற்படுத்திய மாற்றங்களும், பாதிப்புகளும் ஏராளம். அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் அதைக் கையாண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்கொள்ளப் பயனர்களுக்குச் சரியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருபக்கம் வாட்ஸ்அப் நிறுவனமே ‘ஃபார்வர்டட்’ போன்ற குறிப்புகளைக் கொண்டுவந்து குழப்பத்தைக் குறைக்க முயன்றாலும், பயனர் கடமை என்று ஒன்றுள்ளது. வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் எல்லாம் உண்மையல்ல என்ற புரிதல் அவசியப்படுகிறது. தமிழன் என்றால் ஷேர் செய்யவும், இந்தியன் என்றால் உடனே பகிரவும் போன்ற உசுப்பேத்தும் வரிகளுடன் வரும் செய்திகளை உணர்ச்சிவசப்படாமல் புறந்தள்ளி, எது தேவையோ, எது உண்மையோ அதை மட்டும் சிந்தித்துப் பகிர்ந்தால் பாதிப் பிரச்சினைகளைப் பயனர்களே தீர்த்துவிடலாம்.

  • சரவணகுமரன்.

Tags: ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. சிறந்த தகவல் தொகுப்பு கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad