சங்கமம் 2019
தைப்பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கொண்டாட்ட நிகழ்வான சங்கமம், இந்தாண்டு செயிண்ட் பால் ஹார்டிங் பள்ளியில் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மினசோட்டாவைச் சேர்ந்த பல்வேறு குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் கண்கவர் கிராமிய இசை மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை பதினொரு மணியளவில் நிகழ்ச்சிக்காக மக்கள் குழுமத் தொடங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மங்கல இசையுடன் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள், இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடைபெற்றன. மதிய உணவும் , இரவு உணவும் நிகழ்வின் இடையில் பரிமாறப்பட்டன.
சிறுவர் சிறுமியரின் திரையிசை நடனங்கள், பரத நாட்டியம், தமிழிசை, மழலையரின் மலரும் மொட்டும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வேள்பாரி நாடகம், சிலம்பம், பறை, தவில், நாதஸ்வரம், இசை கச்சேரி என மெய்யாகவே கலைகளின் சங்கமமாக நிகழ்ச்சிகள் அமைந்தன. இந்த நிகழ்ச்சிக்கு மினசோட்டா செனட்டரான ஜான் ஹாஃப்மென் வந்திருந்து, தமிழகக் கிராமியக் கலைஞர்களைக் கௌரவித்தார். செனட்டரும், அவருடன் வந்திருந்த பிற விருந்தினர்களும் கலை நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கண்டு ரசித்தனர். பறையிசையில் கவரப்பட்ட செனட்டர் அதை வாங்கி வாசித்து மகிழ்ந்த காட்சி கலகலப்பை அளித்தது.
மாலையில் தமிழ்நாட்டு கிராமியக் கலைஞர்கள் வழங்கிய காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பின்னல் கோலாட்டம், பறையாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கரகோஷத்தை அள்ளியது. இந்த நிகழ்ச்சியில் அவர்களுடன், மிகவும் குறைந்த காலப் பயிற்சியுடன் உள்ளூர் கலைஞர்கள் இணைந்து ஆடியது ஆச்சரியத்தைத் அளித்தது என்றால், தொழில்முறை கலைஞர்களின் நடனத்தில் இருந்த வேகமும் நுணுக்கமும் நேர்த்தியும் வியப்பளித்தன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழகக் கலைஞர்களின் விபரங்கள்,
நாதஸ்வரம் – திரு. செல்வராஜ்
தவில் – திரு. ராஜமாணிக்கம் காவடியாட்டம், மயிலாட்டம் & காளையாட்டம் – திரு. சிவாஜி ராவ் பொய்க்கால் குதிரையாட்டம் – திருமதி. பானுமதி & திரு. செல்வதுரை ஒயிலாட்டம் & பின்னல் கோலாட்டம் – திரு. ராஜ்குமார் பறையாட்டம் – திரு. ராஜா அலங்கார சிலம்பாட்டம் & போர் சிலம்பாட்டம் – திரு. கார்த்திக் கரகாட்டம் – செல்வி. சூர்யா மரிய செல்வி ஒருங்கிணைப்பு – திரு. சோமசுந்தரம் |
- சரவணகுமரன்.
படத்தொகுப்பு: ராஜேஷ்