தமிழ்த் திருவிழா 2019
மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளிக்கூடத்தில் கடந்த ஃபிப்ரவரி 23ஆம் தேதி ‘தமிழ்த் திருவிழா 2019’ நடைபெற்றது. இங்கு பயிலும் குழந்தைகள் வெவ்வேறு தலைப்புகளில் விளக்கப்படங்கள், மாதிரி அமைப்புகள் செய்து, பார்வையாளர்களுக்கு அவை குறித்த விளக்கமும் அளித்தனர். பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், புராணங்கள், அரசர்கள், தமிழக நகரங்கள் போன்றவற்றை அறிந்து, அவை குறித்த தகவல்கள், புகைப்படங்களைச் சேகரித்து அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். மாதிரிப் படங்கள் மற்றும் முப்பரிமாண மாதிரி அமைப்புகள் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரசர்கள், புலவர்கள் மற்றும் நகரங்களின் சிறப்பையும் குழந்தைகள் விளக்கி கூறினர்.
பிறகு, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. கண்ணைக் கட்டு! வாலை ஒட்டு!!, பாண்டி ஆடு! தமிழைப் பாடு!!, பந்தை எடு! குவளையில் போடு!!, நிமிடத்தில் மிதக்கவை, நிமிடத்தில் வளையல் செய், குவளையை மேல் நகர்த்து, பகடை உருட்டி வெற்றி நோக்கி நட, கண்டுபிடி கண்டுபிடி, தமிழ் எழுத்துகளைக் கண்டுபிடி என தமிழ் மொழிச் சார்ந்த விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக ஓவிய வரைவிலும் ஆர்வம் காட்டினர்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில, உங்களுக்காக.
- ராஜேஷ் கோவிந்தராஜ்