ஸ்னோ அள்ளிப் போட வா!!
மினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்களுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, தம்மாத்துண்டு பனி அள்ளிப் போட காண்ட்ராக்ட் இருக்காதா? இருந்தாலும், தன் கையே தனக்குதவி என்றிருப்பவரும், பனிக்காலத்தில் இப்பணி ஒன்றையே கலோரி எரிக்க எண்ணுபவருக்கும், அவர்களுக்கே அவர்களுக்கான வேலையாக இது அமைகிறது.
அந்தக் காலத்தில் இப்போதிருக்கும் போக்குவரத்து வசதியும், பிற உபகரணங்களும் இல்லாத சமயம், பனியை அள்ளிப் போட மாட்டார்களாம். சமப்படுத்துவார்களாம். பிறகு, போக்குவரத்து வசதிகள் பெருகிய பிறகு, சமப்படுத்திய பனி மீது வண்டியோட்ட சிரமமேற்பட, பனியை ஒதுக்கும் தேவை உருவானது. ஆரம்பக்காலத்தில் குதிரை பூட்டிய வண்டிகள் மூலம் பனி ஒதுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர்,19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நீராவி இஞ்ஜின் கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு, அதன் மூலம் சாலையில் பனி ஒதுக்கப்பட்டது. உலகின் முதல் ‘பனி விலக்கி’ (Snow plow) கனடாவில் உருவானது. தேவையிருக்கும் இடத்தில் தானே புதுமை பிறக்கும்?
தொழிற்புரட்சிக் காலத்தில், போக்குவரத்துப் பயணத்திற்கு இடையூறாக இருக்கும் பனியைக் கையாள வேண்டிய அவசியம் மேலும் அதிகமானது. 1925இல் ஆர்தர் சிகார்ட் என்பவர் விவசாயத்தில் பயன்படும் ஒரு கருவியை அடிப்படையாகக் கொண்டு, இப்போது நடைமுறையில் இருக்கும் பனி விலக்கி வாகனத்தை முதன்முதலாக உருவாக்கினார்.
பெரும் வாகனமாக இருந்தவை, பின்பு தனிநபர் உபயோகத்திற்காகச் சிறியதாக வடிவமைக்கப்பட்டது. தனி நபராகத் தள்ளிச்செல்லும் வகையில் இவை இருந்ததால், இவற்றிற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. மினசோட்டாவைச் சார்ந்த டோரோ (Toro) நிறுவனம் உருவாக்கிய பனி நீக்கும் சாதனங்கள், சந்தையில் முன்னிலை வகித்தன. பிறகு, மற்ற நிறுவனங்களும் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல்வேறு வகையில், புதுப் புது வசதிகளுடன் கூடிய புதுமையான ஸ்னோ ப்ளோவர்களைச் சாலைகளில் இறக்கின. குதிரையில் ஆரம்பித்த பனி விலக்கிகள், இன்று எரிபொருளிலும், மின்சக்தியிலும் ஓடும் நிலைக்கு வந்திருக்கின்றன. தானே தனியாக இயங்கும் ரோபோ வகைப் பனி விலக்கிகளும் சந்தைக்கு வரவுள்ளன.
இது போன்ற பனி நீக்கும் சாதனங்கள் இல்லாமல், மனித சக்தியிலேயே பனியை அள்ளிப்போட பனி வாரிகள் (Shovel) உள்ளன. பனி குறைவாகயிருக்கும் போதும், குளிர் குறைவாகயிருக்கும் போதும் இவற்றைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும். இல்லாவிட்டால், இதில் கவனமாக இருக்க வேண்டும்.
பனி அதிகமாக இருக்கும் போது, அவ்வளவு பனியையும் வாரி தள்ளும் போது, இடுப்புப் பிடித்துக்கொள்ளச் சாத்தியம் உள்ளது. இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடும் போது, அது ‘ டிரெட் மில்’லில் தறிகெட்டு ஓடுவதற்குச் சமமானது. கையால் பனியைத் தள்ளும் போது, ரத்த அழுத்தம் கூடுகிறது. அச்சமயம், மிகவும் குளிராக இருந்து அந்தக் குளிர் காற்றைச் சுவாசிக்கும் போது, ரத்தக்குழாய் சுருங்கி இதயத்திற்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைய நேரிட்டு, மாரடைப்பு நேரவும் வாய்ப்புள்ளது. அதனால், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் கையால் பனியை வாரி அள்ளிப்போடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் தவிர்க்க வேண்டும்.
அப்படியே செய்தாலும், தூங்கி எழுந்தவுடனே பனி வாரக்கூடாது. சிறிது நேரம் கழித்து, உடல் வெப்பம் இதமான பிறகு வேலையைத் தொடங்கலாம். சிறு சிறு அளவில் தள்ள வேண்டும். அதிகம் சாப்பிட்டுவிட்டோ, காப்பி குடித்துவிட்டோ, புகைத்து விட்டோ, பனி வாரி தள்ளச் செல்லக்கூடாது. தொடர்ந்து வேலை செய்யாமல், 15 நிமிடத்தில் இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும். தலை, காது, வாய் ஆகியவற்றை பாதுகாக்கும் உடை அவசியம்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டால், பனி வாரும் வேலையும், கடும் உடல் உழைப்பைக் கேட்கும் விவசாய வேலையில் ஈடுபட்ட திருப்தியைக் கொடுக்கும். பனியைப் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்குப் பனியுடன் மல்லுக்கட்டுவது அப்போதைக்குக் கஷ்டமாக இருந்தாலும், பிற்காலத்தில் வேறு இடத்திற்கு மாறிச் சென்றுவிடும் போது, இந்த அனுபவம் மறக்க முடியாததாக அமையும் என்பது நிச்சயம்.
அப்படி இல்லாத பட்சத்தில் “எப்படா அடுத்த ஸ்னோ ஃபால்?” என்று திகிலுடன் வெதர் ரிப்போர்ட்டைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.
“பனி விழும் மலர் வனம்” பாடல் எழுதிய வைரமுத்துவைப் பார்த்தால் சொல்ல வேண்டும். அந்த மலர் வனத்தில் விழுந்த பனியை அள்ளுவது எவ்வளவு கஷ்டம் என்று.
- சரவணகுமரன்.
Tags: Snow blower, Snow blowing, பனி, ஸ்னோ