சாத்தான்கள்
விலங்கிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் பெற்று உருவான மனிதன், இதற்கு மேலும் வளர முடியாத நிலையெய்தி மீண்டும் பின்னோக்கிச் செல்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன அண்மைக்கால செய்திகளும் நிகழ்வுகளும்.
தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகளும், காணொளிகளும் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளன. பெண்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, சதையின்பம் தேடிய கொடூர ஜந்துக்கள் இருக்கும் சமூகத்திலா நாமிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு எம்மை வருத்துகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த அட்டூழியம் சமீபத்தில் வெளியாகியுள்ளது, அவ்வப்போது நிகழ்ந்த இது போன்ற பிற சம்பவங்களை நாம் சில வாரங்களில் மறந்துவிடுகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டவே. பொள்ளாச்சி சம்பவச் செய்திகள் வெளிவரத் துவங்கிய அடுத்தடுத்த தினங்களில் திருச்சி, கடலூர் என்று சில இடங்களிலிருந்தும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொடர்பான அநீதிகள் வெளியாயின.
இச்செய்திகளைக் கேட்டவுடன் நம்மில் மிகும் கோபமும், வேகமும் காலப்போக்கில் குறைந்துவிடுகிறது. இன்னபிற சுவாரசிய நிகழ்வுகள் பக்கம் நம் கவனம் திரும்பிவிடுகிறது. வயது பேதமின்றி நடைபெறும் பாலியல் கொடுமைகள் நம்மை அறியாமல் நம் சமூகத்தில் ஊடுருவ நாமும் உடந்தையாகிவிடுகிறோம். டெல்லி (நிர்பயா), மும்பை (சக்தி மில்ஸ் சம்பவம்), ரனாகட், மேற்கு வங்கம் (கன்னியாஸ்திரி சம்பவம்), ஜம்மு கஷ்மீர் (ஆசிஃபா) போன்ற சம்பவங்கள் நம்மை தற்காலிகமாகப் பாதித்து அகன்றுவிட்டன. அவற்றிலிருந்து நாம் பாடம் கற்கத் தவறிவிட்டோம். சமூக உளவியல் மாற்றங்களைக் கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டோம்.
சமூக ஊடகம், பணத்திமிர், அரசியல் அலட்சியம், காவல்துறை சீர்கேடுகள் என்று பல காரணங்களை அடுக்கி, சுட்டிக்காட்டினாலும், ‘சுய ஆய்வு’ என்பதை மறந்து விடுகிறோம். ‘ஒருவரது தவறுகள் பிறர்க்குத் தெரியாதவரையில் அவர் உத்தமரே’. தவறுகளை மறைக்க முயலவேண்டாம். அவற்றை அகற்ற முற்படுவோம். தனி மனித ஒழுக்கம் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவர்க்கும் அவசியம்!
இரண்டு தினங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய மற்றொரு செய்தி நியுசிலாந்து, க்ரைஸ்ட்சர்ச் நகர மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு. வாரத் தொழுகைத் தினமான வெள்ளியன்று நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அமைதி வேண்டி இறைவனை வணங்கச் சென்ற இவர்களின் உயிரை ஈவிரக்கமின்றி மாய்த்துள்ளது பிரெண்டன் டர்ரண்ட் என்ற மனித மிருகம். குடியேறிகள் மீது, குறிப்பாக இஸ்லாமியர் மீது குரோதம் கொண்ட இந்த மிருகம் 87 பக்கச் செயல்திட்ட அறிக்கையினைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிட்டு, முகநூலில் தான் நடத்திய கோரத் தாண்டவத்தை நேரடியாக ஒளிபரப்பியது. தங்களது நாடுகளில் கிடைக்காத ஏதோவொன்றை நாடி நிம்மதியாக இருக்க வேண்டி அகதிகளாக நியுசிலாந்துக்கு வந்தவர்கள் இனவெறிக்கு இரையாகிவிட்டனர். பல உலக நாடுகளில் பாதுகாப்பு என்பது ஆடம்பரமாக மாறிவிட்டிருக்கும் நிலையில், இதுவரையில் அமைதியான நாடுகளின் பட்டியலிலிருந்த நியுசிலாந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது இனவெறி எனும் சகிப்புத்தன்மையற்ற, கேடுகெட்ட கோட்பாடு.
பல யுகங்களாக வெள்ளையர் மேலாதிக்கவாதத்தைக் கொண்டாடிவந்த பலரது பெயர்களைத் தனது துப்பாக்கிகளில் எழுதி வைத்து, இது போன்ற மேலாதிக்கவாதக் கருத்துகளைப் பரப்பும் பாடல்களை காரில் ஒலிக்கவிட்டுக் கொண்டே சென்று தாக்குதலை மேற்கொண்ட செயல்கள் பிரெண்டன் எனும் சாத்தானின் கோர மனதைக் காட்டுகிறது. முகநூலில் இந்தச் சாத்தான் வெளியிட்ட நேர்முகப் பதிவைப் பாராட்டி, அந்தக் காணொளிகளைப் பதிவிறக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்த சாத்தான்கள் உலகில் உலவிவருவது அவலத்தின் உச்சம்.
இனம், மதம், மொழி, சாதி பிரிவுகள் மனிதரை நெறிப்படுத்த தோன்றியவை; வெறிப்படுத்த அல்ல. இவற்றில் பேதம் பாராட்டி பேசுவது, ஏன் மனதளவில் நினைப்பது கூட நம்மையும் சாத்தானாக மாற்றிவிடும்.
– ஆசிரியர்.