மை பூச ….
அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி
கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி……
கொஞ்சிப் பேசித் தலையாட்டி
வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி……
கையக் காலைப் புடிச்சுத்தான்
பொய்யப் புளுகைச் சொல்வாண்டி
செய்ய முடியாச் செயலெல்லாம்
மெய்யா நடக்கும்னு விடுவாண்டி ……
மானங் கெட்ட பொழப்பாலே
போன வருசம் அடிச்ச கொள்ளை
தானப் பிரபுவாத் தான் மாறி
வானம் வழியாக் கொடுப்பாண்டி ….
தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க
பண்ணி வைச்ச புழுவதுடி…..
கண்ணி வச்சு மான் புடிக்க
பின்னிப் பிணைஞ்ச வலையதுடி ….
ஓடு போட்டக் குடிசையையும்
ஆடு மாடு கோழியையும்
வாடும் அந்தப் பயிரையும் – ஏன்
நாடு முழுசும் சுருட்டுவாண்டி ….
விரலு நுனியில் மைவைச்சு
குரலு அடைக்க வந்தவனை
மிரளச் செய்ய ஒரே வழிதான்
உரக்கச் சொல்றேன் கேட்டுக்கடி……
காசைக் கொடுத்தாத் தூக்கியடி
ஆசை காட்டினா துரத்தியடி
பாசை சாதி மதமுன்னு
வேசம் போடுறவன விரட்டியடி …..
இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும்
சருக்காம வாழும் நல்லவனை
பொருக்கிப் பாத்துத் தேர்ந்தெடுத்து
தருக்கா ஓட்டையும் போட்டுருடி ….
உனக்குக் கொடுத்த ஒரு ஓட்டை
தனக்குனு எந்தத் தறுதலையும்
பிணக்காப் போட்டு வைக்காம
கணக்காப் போயி போட்டுருடி ….
வெ. மதுசூதனன்