காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2019)
2019 இன் தொடக்கத்தில் வந்த ஹிட் பாடல்களின் எண்ணிக்கை, பிறகு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கலுக்குப் பிறகு ஸ்டார் நடிகர்களின் படங்கள் குறைந்துவிட்டது ஒரு காரணம் என்றால், ஹிட் ஆன படங்களில் பெரிய ஹிட் ஆன பாடல்கள் என்று எதுவும் இல்லாமல் போனது இன்னொரு காரணம். சென்ற வருட இறுதியில் வெளிவந்த மாரி-2 படத்தில் வந்த ‘ரௌடி பேபி’ பாடலின் வீடியோ யூ-ட்யூபில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாகி, தென்னிந்தியப் பாடல்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக முன்னேறி 400 மில்லியன் ஹிட்ஸைக் கடந்து 500 மில்லியனை நோக்கி நகர்ந்தவாறு முன்னணியில் உள்ளது. இனி கடந்த இரு மாதங்களில் வெளிவந்த பாடல்களில் சிலவற்றின் தொகுப்பைக் காணலாம்.
தேவ் – அணங்கே சிணுங்கலாமா
ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு வருடத்திற்குப் பிறகு இசையமைத்து வெளிவந்த படம் இது. துரதிஷ்டவசமாக இதுவும் ஓடவில்லை. ஹாரிஸிடம் இருக்கும் குறை, ஒரே பாணியில் இருப்பதும், இறக்குமதி சரக்காக இருப்பதும் ஆகும். இதிலும் அதே தொடர்ந்தது. படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் என அனைவரும் இயக்க, திரைக்கதையின் ஓட்டம் அங்கே, இங்கே என எல்லாம் பக்கமும் ஓடியது. அதனால், படம் ஓடாமல் போனது. படத்தின் பாடல்கள், ஹாரிஸ் ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தியது எனலாம்.
இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் – கண்ணம்மா
பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ‘பியார் ப்ரேமா காதலு’க்குப் பிறகு ஹீரோவாக நடித்து வெளிவந்த படம். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்திற்குச் சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். அமுல் பேபியான ஹரிஷ், கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசம் காட்டியிருந்தார். இந்த ‘கண்ணம்மா’ பாடலை அனிருத் பாடிக்கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட சமீபத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும் அனிருத் பாடிவிட்டார் என்று தோன்றுகிறது. இந்த வருடத்திலேயே பாடகராக செஞ்சுரி போட்டு விடுவார் அனிருத். பாடகராக அனிருத்தின் பலம், அந்தப் பாடலுக்கு வேண்டிய உணர்வைத் தனது குரல் மூலம் கொடுக்க முயலுவது தான்.
நட்பே துணை – சிங்கிள் பசங்க
‘மீசையை முறுக்கு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, “ஹிப் ஹாப் தமிழா” ஆதி கதாநாயகனாக நடிக்க, ஹாக்கி விளையாட்டைக் களமாகக் கொண்டு வந்த படம் இது. யூ-ட்யூப் பிரபலங்களைக் கூட்டணிக்குச் சேர்த்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். இசை, ஆதி தான். அவருடைய வழக்கமான பாணியில் அமைக்கப்பட்ட இசை இளைஞர்களை ஆட்டம் போட வைத்தாலும், ஒரே மாதிரி இருப்பதால் கூடிய விரைவில் சலிப்பு தட்டத் தொடங்கிவிடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஆதி அடுத்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
மெஹந்தி சர்க்கஸ் – வெள்ளாட்டு கண்ணழகி
சமீபக்காலங்களில் இளையராஜா பெரிதாகப் படங்களுக்கு இசையமைக்காவிட்டாலும், அவருடைய பழைய பாடல்களை ஒரு கதாபாத்திரமாகவே வைத்து கதை எழுதுகிறார்கள் இப்போதைய இயக்குனர்கள். ராஜு முருகன் எழுதிய கதையை, அவருடைய அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். புதுமுகங்கள் நடித்த இப்படத்தின் களத்தில் பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்க, அதற்கு ஈடு கொடுக்க வேண்டிய சிரமமான பணி இசையமைப்பாளருக்கு. பொதுவாகவே, இசையமைப்பாளர் ஷான் ரொல்டனின் இசையில் ராஜாவின் தாக்கம் சிறிது இருக்கும். அது அவருக்கு இப்படத்தில் உதவியிருக்கிறது.
கொசுறு பாடல் – மார்வல் கீதம்
மார்வல் நிறுவனம் “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படத்தை இந்தியாவில் பெரியளவில் விளம்பரப்படுத்த, இந்த முறை பல்வேறு வேலைகளைச் செய்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பாடலை வெளியிட்டார்கள். ஆனால், பாடல் ரசிகர்களிடையே பெரிதாக எடுபடவில்லை. அதே போல், தமிழில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியை டப்பிங் பேசவிட்டார்கள். அதுவும் ரசிகர்களிடையே சொதப்பிவிட்டது. ஆனாலும் எப்படியோ, படம் இந்தியாவில் செம கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது. இதோ, அந்தப் பாடல். நீங்க கேட்டுட்டு சொல்லுங்க!!
- சரவணகுமரன்.