\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கக் குடியுரிமை பிறப்புரிமையா?

மண்ணின் மைந்தர் அடிப்படையில்  குடியுரிமை சரிதானா என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது.

பிற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வட அமெரிக்காவில் புகலிடம் கொண்டவர்களால் இந்தக் கருத்து பல திருத்தங்களுடன், புதிய கோணங்களில்  விவாதிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடியுரிமைக் கணக்கெடுப்புப்படி, இந்த நாட்டில் வாழும் 40 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 13 சதவீதம் மக்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள்.

அதே சமயம்  குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படும் அமெரிக்க நாட்டில், சுமார் 20 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக  வாழ்ந்து வருகிறார்கள் என்றும் இந்தக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.

மண்ணின் மைந்தர் (பிறப்புரிமை) எனும் கருத்து அமெரிக்காவின் 39 ஆவது காங்கிரஸில் தொடங்கி இன்றும் முடிவடையாது விவாதிக்கப்படுகிறது.

1866 இல் இந்நாட்டில் புகலிடம் பெறுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எனினும், அன்று முதலே முறையாக புகலிடம் பெறாத சிலர் இந்த மண்ணில் பிறந்த தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை பெற்று வந்திருக்கிறார்கள். இன்றும் அதே நிலை தொடர்கிறது. இது சட்டத்திற்கு விரோதமானது என்ற கருத்து தேர்தல் காலங்களில் அலசப்பட்டு பின்னர் அடங்கிவிடுகிறது.  2017 இல் 150,000 மக்கள் அமெரிக்க நாட்டில் பிறந்ததால் குடியுரிமை பெற்ற தங்களது பிள்ளைகளைக் காரணங்காட்டி தாங்களும் அமெரிக்கப் பிரஜைகளாக மாறியுள்ளனர். (அமெரிக்கச் சட்டதிட்டங்களின் படி ‘தன்னைச் சார்ந்திருக்கும் குடும்ப அங்கத்தினர்’ என்ற பிரிவின் கீழ் பெற்றோர்களும் நிரந்தர குடியுரிமை பெற முடியும்).

சட்ட ரீதியாக புகலிடம் பெறாத மக்கள், முதலில் குழந்தைகளை இந்நாட்டில் பெற்றெடுத்து, அவர்களை மண்ணின் மைந்தர் கோட்பாட்டின்படி அமெரிக்க குடிமக்களாக்கி விடுகின்றனர். அக்குழந்தைகள் 21 வயதை தொட்ட பின்னர், அவர்கள் மூலமாக  (சார்ந்திருக்கும் நெருங்கிய சொந்தம்) தாங்களும் நிரந்தர குடியுரிமை பெற்று விடுகின்றனர். இவ்வகையான குழந்தைகளை நங்கூரக் குழந்தைகள் (Anchoring babies) என்கிறார்கள்.

அமெரிக்கக் குடியுரிமை ஆய்வு அமைப்பின்படி வருடாந்தம் 300,000 மேற்பட்ட அமெரிக்கக் குழந்தைகள் சட்ட ரீதியில் குடிபுகாதவர்களுக்குப் பிறக்கின்றனராம். மண்ணின் மைந்தர் – எனப்படும் குடியுரிமை பெறுதல் சூசகமான வர்த்தகத்திற்கும் வழி வகுத்துள்ளது.  அமெரிக்க மண்ணில் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே தற்காலிக உல்லாச விசாவில் (birth-tourism) அமெரிக்கா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பொருளாதார வசதி மிக்க வெளிநாட்டவர் சிலர் இவ்வகையில் உல்லாச பயணங்களுக்காகத் தற்காலிக விசா பெற்று உள்ளே நுழைந்து குழந்தை பெறும் வரை இங்கேயே தங்கிவிடுகின்றனர். கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த ஒரு புலன் விசாரணையில் இது போன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேற்சொன்ன புலன் விசாரனையின் போது சீனக் கம்பெனிகள் சில இவ்வாறு வருவோர்க்கு தங்கியிருக்க வீடு, மருத்துவவசதிகள் ஆகியவற்றை அமைத்து தருவதை வியாபாரமாகவே செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டது.

வால்-ஸ்ட்ரீட் இதழில், 2015ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஃப்ளோரிடா மயாமி பகுதியில் ரஷ்யா மற்றும் பிரேசில் நாடுகளிலிருந்து, தற்காலிக விசாவில் அமெரிக்கா  வந்தோர்க்கு குழந்தை பெறுவதற்க்கான சகல மருத்துவ வசதிகளையும், குடியிருக்க வீடுகளையும் அமைத்து தந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பிள்ளை பெற்றெடுத்த ரஷ்யப் பிரஜை ஒருவர் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியொன்றில் பல ரஷ்யப் பெண்கள் இவ்வாறு அமெரிக்காவுக்கு வந்து பிள்ளை பெற்றுக் கொண்டு ரஷ்யா திரும்புகின்றனர்; அக்குழந்தைகள் 21 வயதடைந்த பின்பு, அவர்களின் பிறப்புக் குடியுரிமையை காரணங்காட்டி  மொத்தக் குடும்பமும் அமெரிக்காவுக்கு குடிபெயர திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். இப்பெண்கள் தங்களது உல்லாசத் தற்காலிக விசா விண்ணப்பங்களில் ‘பிள்ளை பெற எதிர்பார்க்கிறோம்’ (expecting a child) என்று குறிப்பிடுகின்றனர். அமெரிக்க தூதரகத்தினர் இதன் காரணமாக மட்டுமே ஒருவரது விஸா விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது. இதை அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தின் பலவீனம் என்கிறார்கள் சில காங்கிரசார்.

அமெரிக்கச் சாசனத்தின் 14வது திருத்தம் ‘மண்ணின் மைந்தர்’ (Jus Soli) கோட்பாடு ஆழமாக செதுக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற உச்ச நீதிமன்றம் மூலம் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். சி.என்.என். தொலைகாட்சி நடத்திய கருத்தாய்வு ஒன்று 49 சதவித அமெரிக்க மக்கள் இந்தத் திருத்தம் தேவை என்கின்றனர்.

பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட வெவ்வேறு கட்சியினரும், பெற்றோரில் ஒருவராவது அமெரிக்கப் பிரஜையாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் பிள்ளைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காது  என்ற சட்டத் திருத்தங்களை கொண்டு வர முனைந்தனர்.எனினும் இப்பேர்பட்ட மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கூட கிடைக்காமையால் இன்றும் இந்த நிலை தொடர்கிறது.

தொகுப்பு – யோகி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Sathiamoorthy Ramadoss says:

    அருமையான கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad