\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

புராணம், இதிகாசம், சீர்த்திருத்தம் எனப் பல பரிமாணங்களைக் கடந்து வந்த தமிழ்த்திரையுலகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் அரசியல் தாக்கத்தைப் பெற்றது. குறிப்பாக மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின. அறுபதுகளில் C.V. ஸ்ரீதர், A. பீம்சிங், B.R. பந்துலு, T.R. ராமண்ணா, A.C. திருலோகச்சந்தர், K.S. கோபாலகிருஷ்ணன், K. பாலச்சந்தர் போன்றோர் காதல் மற்றும் குடும்பப் பின்னல்களின் பின்னணியில் படங்களை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டம் வரை, தனது வாள் சண்டை திறமை வெளிப்படும் சரித்திரப் பாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த எம்.ஜி.ஆர்திருடாதேபடம் தந்த வெற்றியினால் சமூகப் படங்களில் கவனத்தைத் திருப்பினார்.

குறிப்பாக சாண்டோ சின்னப்பா தேவர் படங்கள் தயாரிக்கத் துவங்கிய புதிதில்தாயைக் காத்த தனையன்’, ‘தாய் சொல்லைத் தட்டாதேபோன்ற படங்களில் துப்பறியும் கதாபாத்திரங்களில் சோபித்து வெற்றி பெற்றார். இந்தப் படங்களின் மகத்தான வெற்றிக்குப் பின்னரே தனது பாத்திரங்களை, தாய் மேல் பக்தி கொண்டவனாக, நேர்மையும், வீரமும் கொண்டவனாக, ஏழைப் பங்காளனாக உருவகித்துக் கொள்ளத் துவங்கினார். மது அருந்தும், புகை பிடிக்கும் பாத்திரங்கள் கிடையாது ; சூதாட்டம் நடைபெறும் இடங்களில் இருக்கக் கூடாது; தொழிலாளிக்குத் துன்பமென்றால் நொடிப்பொழுதில் அங்கே தோன்றுவது; வயதானவர்களுக்கு உதவி, பிள்ளைகளிடம் பாசம்; பெண்களுக்குப் பாதுகாவலன்; சமூக அக்கறை, பொதுவுடைமை என ஒரு பட்டியல் தயாரித்து இவை அத்தனையும் தனது பாத்திரங்களில் பரிமளிக்க வேண்டும் எனும் சூத்திரத்தை இயக்குநர்களுக்குத் தந்துவிட்டார்.

இதே கால கட்டத்தில் அரசியலில் கால் பதிக்கத் துவங்கியிருந்த அவருக்கு இந்தக் கதாபாத்திரங்களும், படங்களின் வெற்றியும் அவரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வழி வகுத்தது. மேலே பட்டியலிட்ட அம்சங்களைக் கூடக்குறையச் சேர்த்து, நகைச்சுவைப் பாத்திரங்கள் கலந்து ஜனரஞ்சகமாக மாற்றுவது இயக்குனரின் திறமை. இவை எல்லாவற்றையும் கடந்து, மக்களைத் திரையரங்குகளுக்கு இழுத்து வருவது படத்தின் பாடல்கள் மட்டுமே என்ற சூட்சுமத்தை மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆர். தமது படங்களின் பாடல்கள் தனித்தன்மையோடு, எளிமையான வரிகளில் நற்குணங்களை எடுத்துக் காட்டும் வகையில்  அமைய வேண்டுமெனத் தானே தனிச் சிரத்தை எடுத்து, பாடல்களை அங்கீகரிக்கத் துவங்கினார். K.V. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி என இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் இவர் கேட்காமல் பாடல்கள் அங்கீகரிக்கப்பட்டதில்லை.

திருச்சி வானொலி நிலையத்திற்கு ஒரு பேட்டிக்காகச் சென்றிருந்த T.M. சௌந்திர ராஜனிடம், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ரங்கராஜன் எனும் இளைஞர் தான் எழுதிய கவிதைகள் சிலவற்றைக் காட்ட அதனால் கவரப்பட்ட டி.எம்.எஸ். அவரைச் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்தச் சமயத்தில் சென்னை வரத் தயங்கிய ரங்கராஜன் ஒரு தபால் கார்டில்கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்எனும் பாடலை எழுதி டி.எம்.எஸ் ஸுக்கு அனுப்பி வைக்க, அவரின் பக்திப் பாடல்கள் வரிசையில் அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனால் உந்தப்பட்டு சென்னைக்குத் திரைப்படப் பாடல்கள் எழுத வந்த ரங்கராஜன் நடிகர் வி. கோபாலகிருஷ்ணனின் உதவியோடு, வாலி என்ற பெயர் மாற்றத்துடன், பல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்புத் தேடிச் சென்றார். பல இடங்களில் அவர் எழுதிய கவிதைகள் நிராகரிக்கப்பட்டன. அவ்வாறு கம்யூனிஸ்ட் கருத்துகள் கொண்ட பாத்திரம் ஒன்றுக்கு வாலி எழுதியகொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்என்ற பாடலும், புகழ் பெற்ற இசையமைப்பாளர் M.B. ஸ்ரீனிவாசால் நிராகரிக்கப்பட்டது. (இதே பாடல் சில ஆண்டுகளுக்குப் பின்னர் வாலியை புகழின் உச்சாணிக்கு கொண்டு சென்றதுதான் இயற்கையின் விளையாட்டு).

பல போராட்டங்களுக்குப் பிறகுஅழகர் மலைக்கள்ளன்என்ற படத்தில் தெலுங்கு இசையமைப்பாளர் கோபாலம் அவர்களது இசையில்நிலவும் தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மாஎனும் பாடலை எழுதினார். எனினும் ஐந்தாண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர், 1963 ஆம் ஆண்டு  விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்இதயத்தில் நீதிரைப்படத்தில்பூ வரையும் பூங்கொடியே’, ‘ஒடிவது போல் இடையிருக்கும்’, ‘உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்’, ;யார் சிரித்தால் என்னஎனும் பாடல்களைத் தந்து திரையுலகினரை அசர வைத்தார் வாலி. அதே ஆண்டு வெளிவந்தகற்பகம்திரைப்படத்தில்மன்னவனே அழலாமா’, ‘அத்தை மடி மெத்தையடி’, ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’, ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்என அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதி தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார்.

1964 ஆம் ஆண்டு சில அரசியல் நிகழ்வுகளால் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் மாற்றுக் கருத்துக்கள் தோன்றி சில உராய்வுகள் ஏற்பட்டு வந்தன. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் கவனத்தைப் பெற்ற வாலி, பின்னர் தமிழ்த் திரையிசை புறக்கணிக்க முடியாத, மறக்க முடியாத மிகச் சிறந்தப் பாடல்களைத் தந்தார். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி (டி..கே.ஆர்) வாலி கூட்டணியமைந்த முதல் படம்தெய்வத்தாய்’. வழக்கம் போல் இப்படத்திலும் நேர்மையான துப்பறியும் ரகசிய போலிஸ் பாத்திரம் ஏற்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

 

இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வாலிமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்எனும் புதிரான பாடலைத் தந்து தமிழகத்தைக் கலங்கடித்தார். கடமை என்று அவர் குறிப்பிட்டிருந்தாலும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று எம்ஜிஆர் சொன்னதுதி.மு..’, ‘கொள்கை’, ‘அண்ணா’, ‘அன்னை’, ‘தமிழ்என்று அவரவர் வாதிட்டனர். (இக்கேள்வியை சோ ராமஸ்வாமியிடம் ஒரு நிருபர் கேட்க – ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்என்றால் அதுமூக்குஎன்று தனக்கேயுரிய கிண்டலுடன் சொல்லியிருக்கிறார்).

பதவி வரும் போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா’, ‘வாழை மலர் போல் பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா’, ‘நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா’  என்று எம்.ஜி.ஆர் வகுத்திருந்த சூத்திரத்தின் உயிர் நாடியைப் பிடித்துப் பொட்டிலறைந்தது போன்ற வரிகள் தந்து, அவரது நம்பிக்கையைப் பெற்றார் வாலி. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு காதல் பாடல், நாம் பார்த்து வரும் வினாக்களால் ஆன பாடல் வரிசையில் இடம் பெறுகிறது.

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..

வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ..

அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்..

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..

அதைத் தொட்டுவிடத் துடிப்பதிலே என்ன சுகமோ..

கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா..

அங்கே காவல் நின்ற மன்னவனைக் கைப் பிடிக்க வா..

அத்திபழக் கன்னத்திலே கிள்ளிவிடவா..

இந்த ஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லிவிடவோ..

அல்லி விழித் துள்ளிவிழக் கோபம் என்னவோ

இங்கே அஞ்சி அஞ்சிக் கொஞ்சுவதில் லாபம் என்னவோ..

மிக எளிமையாகத்தோன்றும் வரிகளைக் கூர்ந்து நோக்கினால் தான் இவ்வரிகளில் உள்ள உவமைகள் தெரியும். கிளி போன்ற மொழிஅதுவும் சாதாரணக் கிளி அல்ல, வண்ணம் மிகுந்த கிளி. அடுத்த வரியில் இன்னுமொரு படி மேலே போய் நாயகியை மயிலாக உருவகப்படுத்துகிறார்அதுவும் கண் போன்ற புள்ளிகள் கொண்ட அழகு மயில்., அவளது சிரிப்பில் தான் என்ன மயக்கமேற்படுகிறது? அத்திப் பழம் போன்ற கன்னம். இதை வாலிஅத்திப்பழக் கன்னத்திலே முத்தமிடவா?’ என்று எழுதியிருந்தாராம். பின்னர் படக்குழுவினர் இது தணிக்கையில் பிரச்சனை ஆகுமென பயமுறுத்தகிள்ளிவிடவாஎன்று மாற்றப்பட்ட காலம் அது! கன்னத்தைக் கிள்ளிவிடவா என்று கேட்டதற்கே  அல்லி மலர் போன்ற கண்கள் துள்ளி வெளியே விழுந்துவிடும் அளவுக்குக் கோபப்படுவதா என்று பொறுமுகிறார் நாயகன்

கிளி மொழி என நாயகன் சொல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை மணிமேகலை பிறந்த வஞ்சி மாநகரத்தில் பெண்கள் பேசும் சாதாரண மொழி தான் என்கிறாள் நாயகி. பொட்டு வைத்த வட்ட முகத்தை தொட்டுவிடத் துடிக்கும் அவனது  துடிப்பை அவள் கேலி செய்கிறாள். அதைப் பொருட்படுத்தாத அவன் நான் உன் பரந்த மனதில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறேன், நீ கைப்பிடித்து ஏற்றுக் கொள்வாயா என்று கேட்கிறான். உன் கன்னத்தைக் கிள்ளிவிட வேண்டும் போலிருக்கிறது என்பவனிடம் ஊரைக் கூப்பிட்டுச் சொல்லிவிடுவேன் என அச்சுறுத்துகிறாள். கேள்வி தானே கேட்டேன் அதற்கு ஏன் இப்படி முறைத்துக் கோபப்படுகிறாய் என்று கேட்பவனிடம் இந்தக் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் நான் மயங்கிவிட மாட்டேன்; நேரத்தை வீணடிப்பதில் எந்த லாபமுமில்லை என்கிறாள் அவள். இது தான் பாடலின் பொதுக் கருத்து; அதை எவ்வளவு நளின நயத்துடன் சொல்கிறார் வாலி.

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவனென்றாலும் விடமாட்டேன்’ (நான் ஆணையிட்டால்), ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர்  சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ (கண் போன போக்கிலே), கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ? தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் நின்றவர் யாரோ?’ என எம்.ஜி.ஆர் படங்களுக்கென மிகக் கச்சிதமான வரிகளைச் செதுக்கியவர் வாலி .மிக ஆழமான சிந்தனையும், அழகான சொற்களையும் ஒருங்கிணையப் பெற்றவர். பிற்காலத் திரையுலகம் இம்மாபெரும் கவிஞருக்கு சரியான வாய்ப்பினையும், அங்கிகாரத்தையும் தராது வீணடித்து விட்டது.

வண்ணக்கிளி பாடலுக்கு வருவோம். பாரம்பரியக் கர்நாடக இசைக்கட்டை விட்டுத் துளியும் விலகாமல், திரைப்பாடல்கள் வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் தலையெடுத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்களுக்கெனத் தனி முத்திரையை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தனர். பாவங்களுக்கு முன்னுரிமை தந்து, ராகங்களின் அடிப்படையில் பாடல் மெட்டுகளை வளைத்துக் கொண்டனர். ஹிந்துஸ்தானி, கஜல், கிழக்கத்திய, மேற்கத்திய இசை எனப் பல விஸ்தீரணங்களைத் தொட்டு வந்தனர். சிதார், சாரங்கி, சரோட், ஷெனாய், சந்தூர் போன்ற வடஇந்திய இசை, கிட்டார். மேன்டலின், செல்லோ, பியானோ, அக்கார்டியன் போன்ற மேற்கத்திய இசை, சாக்ஸ், ஒபோ போன்ற பிராஸ் இசை என பலவற்றைத் தமிழ்த் திரையிசைக்கு அறிமுகப்படுத்திப் பயன்படுத்தினர்.

அப்படி இந்தப் படத்தில் எலக்ட்ரிக் கிட்டாரின் பல பரிமாணங்களை முயற்சித்துள்ளனர் எனலாம். ஃபிலிப்ஸ், கேப்ரியல், டாமி ஸ்மித், ரெஜி, ரூடி பிண்டோ, சதானந்த், விஜி, முத்து  எனப் பல கிட்டார் வித்தகர்கள் இவர்களது குழுவில் இருந்துள்ளனர்.  வண்ணக்கிளி பாடலுக்கு எலக்ட்ரிக் கிட்டார் வாசித்தவர் ஃபிலிப்ஸ். துவக்க இசையில் (prelude) சீரான பியானோ, டிரம்ஸ் இசை துவங்கவண்ணக்கிளிஎன்று பாடகர் துவங்கியவுடன் செமிடோன் பாணியில் கிட்டாரின் பின்சேர்ப்பு (counter)  அலங்காரம். மிகப் புதுமையானது. இந்தப் பாடலுக்கு உயிரூட்டியது இந்த கிட்டாரின் ஸ்வர அடுக்குகள் (CHORDS) என்றால் அது மிகையில்லை.

புள்ளி மயில்அனுபல்லவிக்கு முன்னர் வரும்  இடையிசையைப் பியானோ நிறைக்க மெலிதாக நுழையும் வயலின் இதமாக வருடிக் கொடுத்து மறையும்.  சரணத்துக்கு முன்னர் வரும் இரண்டாம் இடையிசையைப் புல்லாங்குழல் பிரதானமாகத் துவக்கி வைக்க, வயலின் கவுண்டர் இரண்டு முறை வரும்; சன்னமாக நுழையும் மேண்டலினுக்கு, எலக்டிரிக் கிட்டார் கௌண்டர் இசை! மூன்றாவது இடையிசையில் மற்றொரு பரிமாணம். வழக்கம் போலவே பியானோவின் பின்னணியில் புல்லாங்குழல் துவங்க, வயலின் கௌண்டர்; சில நொடிகளில்ஆஹா ஹாஎன்று பி.சுசிலாவின் ரீங்காரம்; அதனோடு இணைவது ராஜுவின் விசில் ஒலி; இம்முறை இவற்றுடன் சேர்வது ஃபிலிப்ஸின் டாம்பிங் (damping) அடுக்குகள்.   அக்கால வழக்கத்துக்கு மாறான பாடல் முடிந்த பிறகு வரும் இசையில் (postlude) பியானோ துணையோடு கிட்டார் நம்மை ஆனந்தம் பொங்க வழியனுப்பி வைக்கும்.

அசாதாரணமான சேர்க்கை ; அசாத்தியமான கற்பனை; மிகத் துல்லியமான செயல்திறன் ; நுட்பமான இசை அடுக்குகள்நமக்குக் கிடைப்பதோ சுகானுபவம்! ஒரு தவறான நரம்பில் விரல் பட்டாலும் முழுப்பாடலையும் மறுபடியும் எடுத்தாக வேண்டும்; இன்றைய டிஜிட்டல் முறைப் பதிவு கிடையாது. அனலாக் முறையிலான பதிவுதான். ஒலியில் மாற்றங்கள் செய்ய முடியாது. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பல இசைக் கலைஞர்கள் அசாத்தியத் திறமைசாலிகள். அவர்களது திறமைகளை அடையாளங்கண்டு,  தக்க சூழ்நிலையில் பயன்படுத்திக் கொண்டது எம்.எஸ்.வி, டி.கே.ஆரின் பெருமை. எம்.எஸ்.வி.யிடம் நெடுங்காலம் இசை ஒருங்கிணைப்பாளராக, பியானோக் கலைஞராகப் பணியாற்றிய ஜோசப் கிருஷ்ணா இந்தப் பாடலுக்கு நடன உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

T.M. சௌந்திரராஜன், P. சுசிலா இருவருமே கதாபாத்திரங்களாகவே மாறி, பாடலுக்கு உயிர் தந்திருப்பார்கள். தனது வசீகரிக்கும் கண்களால், சிறு சிறு நடன அசைவுகளில் கூட நளினப்படுத்தியிருப்பார் சரோஜாதேவி. ஆண்மைக்கு உரித்தான கட்டுமஸ்தான உடல் வெளித்தெரிய இறுக்கமான உடையில் தனக்கேயுரிய பாங்கில் (style) எம்.ஜி.ஆர்.

ஐம்பத்து நான்கு வருடங்கள் முடிந்த பின்னர் இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம் இப்பாடலுக்குப் பின்னால், திரை மறைவில் உழைத்த அத்துணை கலைஞர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமை தான்!

–       ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad