\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தீவிரவாதத்துக்கு தீர்வு?

Filed in தலையங்கம் by on May 14, 2019 0 Comments

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், ஓரளவுக்கு அமைதி நிலவிய இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாள், ஈஸ்டர் தினத்தன்றும் அதன் பின்னரும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், உலகமே மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதை உணர்த்துகிறது.

இயேசு உயிர்த்தெழுந்த தினத்தில் நாடெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும்  தவழ்ந்து, மக்கள் சுபிட்சமாக வாழ்ந்திட வேண்டுமெனப் பிரார்த்திக்க தேவாலயம் சென்ற பலர் உயிரிழந்துவிட்டனர். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்களின் உதிரச் சிதறல், அந்த ஆண்டவரின் சிலையில் தெறித்து இப்படிப்பட்ட தீவிரவாதிகளையும் நாம் படைத்திருக்கிறோமே என அவரையே வருந்தச் செய்துவிட்டது. இலங்கையின் இயற்கை எழிலைக் காண விழைந்து வந்து விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் பலர் இயற்கையுடன் சேர்ந்துவிட்டனர்.

மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள், ஒரு  என பொதுமக்கள் கூடுமிடங்களில் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் சில இடங்களில் வாகனங்களில் பொருத்தப்பட்ட குண்டுகளும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் அல்லது சிறிய இடைவெளிகளில் வேடிக்கப்பட்டுள்ளன. தேவாலய வாரயிறுதிப் பள்ளிப் பிள்ளைகள் உட்பட, 250க்கும் அதிகமானோர் பேர், கொத்து கொத்தாக இந்தத் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.  மனித வேடிகுண்டுகளாகச் செயல்பட்ட ஒன்பது பேர் தவிர்த்து ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பல செயலிழக்கப்பட்டன என்றாலும் ஓரிரு இடங்களில் மேலும் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூடுகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமலிருக்க சிறு குழந்தைகளும், குடும்பத்தினரும் சூழ்ந்திருக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்து கொடூரமாக இறந்து போனார்கள் தீவிரவாதிகளின் சொந்தங்கள் ஒரே நாளில் தீவிரவாதத் தாக்குதலுக்கு மிக அதிகமானோர் பலியான சம்பவமாக இது கருதப்படுகிறது.

இத்தத் தாக்குதல்களை நடத்தியது யார்? இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன? எளிதில் விடை காண முடியாத கேள்விகள். இலங்கையின் தீவிரவாத அமைப்பான NTJ (National Tawheed Jamaath) நேஷனல் தவாஹீத் ஜமாத்) இதனை நிகழ்த்தியிருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. சில தினங்களுக்குப் பின்னர் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ISIS இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுள்ளது. கிறித்துவ தேவாலயங்களில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் நடத்திய இந்தத் தாக்குதல், தங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தை இலங்கை இஸ்லாமியர்களின்  மனதில் ஆழமாக விதைத்துள்ளது. சிங்களவர் தமிழர் பகை, பௌத்தர் பிற மதத்தவர் பகை என்றிருந்த இலங்கையில் இஸ்லாமியர், கிறித்துவர்களுக்கானப் பகை என்று புதிதாக ஒன்று முளைத்துவிடக்கூடாது.

மார்ச் மாதம், நியுசிலாந்தில் மசூதியொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலடியாக நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து பரவலாகப் பேசப்பட்டாலும் சில வார குறுகிய காலகட்டத்தில் இவ்வளவுத் துல்லியமான தாக்குதல்களைத் திட்டமிட முடியாது எனும் எதிர்கருத்தும் வைக்கப்படுகிறது. தீவிரவாதத் தாக்குதல் நடக்கக்கூடும் என்று முன்கூட்டியே இந்தியா தெரிவித்திருந்த நிலையிலும், சில ஆண்டுகள் முன்னர் வரை யுத்தச் சூழல் நிலவிய நாட்டின் அரசாங்கமும் பாதுகாப்புத் துறையும் அந்த முன்னெச்சரிக்கையில் கவனமற்று இருந்தது ஏன் என்ற கண்டனங்களும் வலுத்துவருகிறது. இலங்கையின் அதிபருக்கும், பிரதம மந்திரிக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளால் இந்த உளவுத் தகவல் சரியான நேரத்தில் சரியான தலைமைக்குக் கொண்டுசெல்லப்படவில்லை, தமிழர் பகுதிகள் என்பதால் அதிகக் கவனம் பெறவில்லை போன்ற கருத்துகளையும் அரசியல் கட்சிகள் பலுக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் பலமிழந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் ஈராக் சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு அமைப்பு, தெற்காசிய நாடுகளில் காலூன்ற முயல்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் தனது ராணுவத் தளங்களை அமைத்துக் கொள்ள சில வல்லரசுகளும் முயன்று வருகின்றன. இங்கிருக்கும் எண்ணெய் வளங்களை மையப்படுத்தி சில நாடுகள் இலங்கையை நோக்கிப் படையெடுக்கின்றன. இன்னும் சில மாதங்களில் வரப்போகும் தேர்தலை முன்னொட்டி அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த மதத்தினரிடையே கலவரமேற்படுத்த முற்படுகிறது என்ற ஒரு கோணமும் காரணியாகச் சொல்லப்படுகிறது.

நாலாபுறமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை எழில் வழிந்தோடும் இலங்கையில் தான் அடுத்தடுத்து எவ்வளவு பிரச்சனைகள். எவ்வளவு மரணங்கள்! புவியமைப்பு, பொருளாதாரம் சார்ந்த  சர்வதேச அரசியல், உள்நாட்டு அரசியல், மதம் சார்ந்த தீவிரவாதம், இனத் தீவிரவாதம் எனப் பன்முகத் தாக்குதலுக்கு உள்ளாகி இலங்கை தத்தளித்து வருகிறது. புவி சார் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் உலக நாடுகளில் கூட இத்தகைய அமைதியின்மை இருந்ததில்லை. பிறந்து, வளர்ந்த நாட்டிலேயே நிம்மதியிழந்து, பயத்துடன், அச்சத்துடன் ஆதரவின்றி வாழ்ந்து வருகின்றனர் பெரும்பாலான இலங்கை மக்கள். சொந்த பந்தங்களைத் துறந்து, இழந்து அடைக்கலம் கொடுக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அங்கு புலம்பெயர்ந்து அல்லலுற்று என்றாவது ஒருநாள் சொந்த நாட்டுக்குத் திரும்பி இழந்த உறவுகளை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர் சிலர். இவர்களுக்கு மேலுமொரு சம்மட்டியடியாய் இறங்கியுள்ளது இந்தத் துயரச் சம்பவம். சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி, ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலிலிருந்த இலங்கையின் நிலையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.

தங்களது அரசியல், அரசாங்க ஆதாயங்களுக்காக, பிரிவினைவாத சக்திகளை ஊக்குவித்த ஒவ்வொரு அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் இது போன்ற தீவிரவாதத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும். பொது ஊடகத்தில் சாதி, மதம், இனம், மொழி சார்ந்த துவேஷங்களை எழுப்பி, பகிர்ந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த 250க்கும் அதிகமானோரின் இறப்பில் பங்குண்டு. அறிந்தோ அறியாமலோ வருங்கால இளந்தலைமுறையினர் மீது விஷக் கருத்துகளைத் திணித்து அவர்களை மூளைச் சலவை செய்துவருகிறோம். தீவிரவாதமும், எதிர் தீவிரவாதமும் வளர்வதற்கு இவ்வகைச் சிந்தனைகள் காரணமாகிவிடுகின்றன. இச்சிந்தனைகள் பக்குவமில்லா இளமனங்களை எளிதில் தூண்டிவிடுகின்றன. இது மாறவேண்டும். மாற்றத்தின் முதல் அடி நம்மிடமிருந்து துவங்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad