துணுக்குத் தொகுப்பு – வெள்ளை யானை பூமி
பொதுவாக ‘வெள்ளையானை’ என்ற சொல்லுக்கு, இன்றைய வழக்கில், நம்மிடம் இருக்கும் அதிக பயனில்லாத, அதன் மதிப்பை விட, அதனைப் பாதுகாக்க அதிகப் பிரயத்தனப்படவேண்டிய ஒரு பொருளைக் குறிக்க சொல்லப்படுகிறது. சில நாடுகளில் பண்டிகைக்கால ஒன்றுகூடல்களில் வேடிக்கையாக நடைபெறும் பரிசு பொருள் பரிமாற்றங்களை ‘வெள்ளையானை பரிசு’ (White Elephant Gift exchange) என்கிறார்கள். பெறுபவருக்குப் பயனளிக்காது என்று தெரிந்தாலும், வந்திருப்போர் அனைவரும் கேலிபேசி மகிழ்வுறும் வகையில் இந்தப் பரிசு பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. பரிசாகப் பெற்றதினால் தூக்கிப்போட மனம் வராமல், இந்த ‘வெள்ளையானை பொருள்’ எதோவொரு மூலையில் முடங்கிப்போகும். இதற்கு ஏன் அபூர்வ விலங்கான ‘வெள்ளையானை’ பெயர் வந்தது தெரியுமா?
சயாம் நாட்டு (இன்றைய தாய்லாந்து) அரசர் ஒருவர் தனது அதிகாரிகள் யாராவது தவறு செய்துவிட்டால் அவர்களுக்கு வெள்ளை யானை ஒன்றை பரிசளித்து விடுவாராம். அதனை வளர்க்க போதுமான வசதிகள் இல்லையென்றாலும் மன்னர் தந்த பரிசு என்பதால் அதனை நிராகரித்து விடவும் முடியாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். மற்றவர்களுக்கு சயாம் மன்னர் அளித்து வந்த நூதன தண்டனை வெள்ளை யானை பரிசு.
பர்மா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் காணப்படும் இவ்வகை யானைகள் புனித விலங்குகளாகக் கருதப்படுகின்றன. வெள்ளையானை வைத்திருக்கும் மன்னர்கள் பராக்கிரமம் நிறைந்தவர்களாகவும், நீதி, நேர்மையுடன் நாட்டை வளம்பெற நடத்தும் ஆசி பெற்றவர்களாகவும் கருதப்பட்டனர். உண்மையில் இந்த யானைகள் வெண்சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தைக் கொண்டவை. ஆனாலும் அவற்றின் புனிதத்தையும், தூய்மையையும் குறிக்கும் வண்ணம் அவற்றை வெள்ளையானை என்று குறிப்பிடலாயினர்.
ஹிந்து மதத்தின்படி, தேவர்குலத் தலைவனான இந்திரனுக்கு வாகனமாக அமைந்தது வெள்ளையானையே. ஐராவதம் எனப் பெயர் பெற்ற இந்த யானை பறக்கும் திறன் கொண்டிருந்தது என்பது ஐதீகம்.
தாய்லாந்தில் இவை பிங்க் யானை (pink elephant) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு வெள்ளை யானைகள் அரசவம்சத்தின் குறியீடாக அறியப்படுகிறது. காட்டிலிருந்து வெளியேறும் வெள்ளை யானைகளை யாராவது கண்டால் அதனை மன்னரிடம் ஒப்படைத்துவிடுவர். மன்னர்கள் வைத்திருக்கும் வெள்ளையானைகளைக் கொண்டு அவர்களது பலமும், புகழும் வெளிப்பட்டன. தங்களது அபிமான யானைகளுக்கு அரசப்பட்டங்களை அளிக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இது போன்ற காரணங்களால் தாய்லாந்து ‘வெள்ளையானை பூமி’ என்று அழைக்கப்படுகிறது.
தாய்லாந்து, அன்றைய சயாம், நாட்டுடன் பண்டையத் தமிழர்கள் வணிகம் செய்துள்ளனர். தாய்லாந்தின் மொழி, பண்பாட்டு கலாச்சாரங்களில் தமிழர் அடையாளங்களைக் காண முடிகிறது. அங்கு நடந்த தொல்லியல் ஆய்வில் கிடைத்த பானை ஓடுகளில் தமிழ் எழுத்துக்கள் தென்பட்டன. மல்யுத்தம், சிலம்பாட்டம் போன்ற வீரக் கலைகளும், பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து போன்ற நாடகக் கலைகளும் தாய்லாந்து பாரம்பரியத்தில் கலந்துள்ளன. உருவ வழிபாடுகளிலும் பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது.
அக்காலங்களில் தங்கவளம் பெற்று, அதிகளவில் தங்க வணிகம் செய்து வந்ததால் தமிழர்கள் சயாம் (தாய்லாந்து) நாட்டை ‘சொர்ண பூமி’ என்றும் குறிப்பிட்டனர். அதுவரை பசும்பொன் என்று சொல்லப்பட்டு வந்த உலோகம் சயாம் நாட்டு வணிகத் தொடர்பு ஏற்பட்ட பின்னர், அந்நாட்டு சொல்லான ‘தங்கம்’ தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகி இன்றளவும் அப்படியே அறியப்படுகிறது.
– சாந்தா சம்பத்