ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் – 2019
ஆண்டுதோறும் செயிண்ட் பால் ரிவர் சென்டரில் (St. Paul River Center) இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மினசோட்டா (International Institue of Minnesota) அமைப்பால் நடத்தப்படும் ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் (Festival of Nations) நிகழ்ச்சி, இந்தாண்டு மே இரண்டாம் தேதி, வியாழக்கிழமையன்று தொடங்கி ஐந்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று முடிந்தது. 86 ஆண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவில் பல்வேறு இனக்குழுக்கள் சங்கமிக்கும் நிகழ்வுகளில் பழமையான ஒன்றாகும். கிட்டத்தட்ட நூறு இனக்குழுக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
உணவு, உடை, கலை, வாழ்வியல், பண்பாடு என, ஒரு இனக்குழுவின் அடையாளங்கள் அனைத்தும் இங்கு வெளிப்பட வாய்ப்பு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக, மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால் இவ்விழாவில் தமிழுக்கென்று ஒரு சாவடி அமைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாச்சார அம்சங்கள், இளந்தலைமுறையினர் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாவில் இருக்கும் தமிழர்களின் பங்களிப்பு, இந்நிகழ்வில் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
இந்தாண்டு ‘விழா’ என்பது நிகழ்வின் கருப்பொருள் என்பதால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பொங்கல், கரும்பு, காளை போன்றவை ஒரு வீட்டின் முன் இருப்பது போல் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழர் இசைக்கருவிகளான பறை, நாதஸ்வரம், தவில் போன்றவையும் இங்குப் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவை குறித்த விளக்கங்கள் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டன.
இங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிற நாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் தமிழர் கலைகளான பொய்க்கால் குதிரை, காவடி, தவில், நாதஸ்வரம், பறை, பொங்கல் திருவிழா நடனம் போன்றவை அரங்கேற்றப்பட்டன. பல்லாயிரமாண்டுகள் பழமையான தமிழர்க் கலை வடிவங்கள் இங்கிருக்கும் இளம் தலைமுறையினரால், பிற நாட்டினருக்கு அறிமுகப்படுத்தபடுவதைக் காணும்போது மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமைந்தது.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
- சரவணகுமரன்