விண்ணைத் தாண்டும் அமேசான்
இன்றைய தேதிக்கு உலகின் டாப் 5 டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அதன் வருமானத்தில் காட்டி வரும் முன்னேற்றம் அபரிமிதமானது. 1994இல் ஜெஃப் பெஜொஸால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தொடக்கத்தில் கணினி வழியே புத்தகம் விற்பதில் தனது வியாபாரத்தைத் தொடங்கியது. இன்று அது தடம் பதித்து நிற்கும் துறைகள் ஒன்று இரண்டல்ல, ஏராளம். வெறுமனே, தனது கிளைகளை மட்டும் பல இடங்களுக்குப் படரவிடுவதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நிகழ்த்திக்கொண்டு வருகிறது.
புத்தகம் என்றால் பேப்பரில்தான் இருக்க வேண்டுமா? ஒரு ஸ்லேட் மாதிரி நினைக்கும் புத்தகத்தை நினைத்த நேரத்தில் படிக்கக் கையடக்கமாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? ‘கிண்டில்’ உருவானது. புத்தக வாசிப்பில் ஒரு புதுப் பரிமாணம் உண்டாகியது. புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் தொழிலை, கடைகளில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களுக்குமானதாக விரிவாக்கியது. உலகளாவிய வணிக சாம்ராஜ்யமாகத் திகழும் வால்மார்ட்டுக்கு சவால் விடும் நிறுவனமாக உருவெடுத்தது.
கிண்டில் போல, ஃபயர் டேப்லட், ஸ்டிக், டிவி, எக்கோ எனப் பல பிரபல எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கியது. ஒரு பக்கம் ஹோல் ஃபுட்ஸ் (Whole Foods) கடைகளைக் கையகப்படுத்திக்கொண்டு, இன்னொரு பக்கம் ஆளில்லாமல் முழுக்கத் தானியங்கும் கோ (Go) கடைகள் திறந்துகொண்டிருக்கிறது. கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் என்று டெக்னாலஜி பிதாமகர்கள் பலர் வெர்சுவல் அசிஸ்டண்ட் உருவாக்கினாலும், அமேசானின் அலெக்ஸா தான் சந்தையில் முன்னணியில் நிற்கிறது. இப்படி அமேசானின் தயாரிப்புகள், துணை நிறுவனங்கள், முதலீடுகள் குறித்துச் சொல்லிக்கொண்டே போகலாம். நாம் இக்கட்டுரையில் சொல்ல வந்த விஷயம், ஏ டபிள் யூ (AWS) – அமேசான் வெப் சர்வீஸஸ் (Amazon Web Services). அமேசானின் லாபத்தில் பாதிக்கு மேல் அள்ளித் தந்துக்கொண்டு இருப்பது, இப்போது இந்தப் பிரிவு தான்.
அதென்ன அமேசான் வெப் சர்வீஸஸ்? மேகக் கணிமை என்று தமிழில் கூறப்படும் க்ளவுட் கம்ப்யூடிங்க் (Cloud Computing) பிரிவு தான் அது. மேகக் கணிமை என்றால் என்ன என்று முதலில் பார்த்துவிடலாம்.
கணினி சார்ந்து தான் இன்று பெரும்பாலான வணிகம் நடக்கிறது. பொதுவாக, நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சர்வர், டேட்டாபேஸ், நெட்வொர்க் சாதனங்கள் போன்றவற்றைப் பெரும் முதலீட்டில் வாங்கி, அதற்கெனக் கட்டிட வசதி, குளிர் சாதன வசதி செய்து, அதைப் பராமரிப்பதற்கு என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் ஏற்பாடு செய்வது எனப் பல வகைகளில் செலவு செய்ய வேண்டிவரும். தங்களது பட்ஜெட்டில் பெரும் பங்கை இதற்கே செலவழிப்பார்கள்.
சீசனல் பிசினஸ் செய்பவர்கள் கதியை யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, ஒரு பட்டாசு தயாரிப்பு நிறுவனம் அதன் பட்டாசுகளை மக்களிடம் கொண்டு சென்று விற்பதற்கு ஒரு இணையத்தளம் வைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வருடம் முழுக்கப் பட்டாசு வகைகளை விற்று வந்தாலும், தீபாவளி போன்ற பண்டிகையின் போது தான் நிறைய விற்பனைகளைச் செய்யும். பெரும்பாலான சமயங்களில் ஒன்றிரண்டு பேர்கள் தான் அதன் இணையத்தளத்திற்கு வருவார்கள். அதுவே தீபாவளியின் போது ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருவார்கள். லட்சக்கணக்கில் மக்கள் இணையத்தளத்திற்கு வரும் போது, எப்போதுமிருக்கும் ஒரு சர்வர் மட்டும் இருந்தால் லோடு தாங்காது. மேலும் சில சர்வர்கள் தேவைப்படும். உதாரணத்திற்கு, அப்போது ஐந்து சர்வர்கள் தேவைப்படுகிறது என்றால், அது அந்தச் சமயம் மட்டுமே தேவைப்படும். பிற சமயங்களில் அவை வீண்.
இன்னொரு உதாரணம் பார்க்கலாம். ஒரு நிறுவனம் ஊபர் போல ஒரு புதிய வாடகை கார் சேவை தொடங்குகிறது. மொபைல் வழி சேவை தான் அதற்குப் பிரதானம். புதிதாகத் தொடங்கும் போது, அதற்கு வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்று தெரியப் போவதில்லை. குறைவான கணினி வசதி இருந்து, அதிக வருகைகள் இருந்தால், அதன் சேவை மெதுவாக இருக்கும். வாடிக்கையாளர்கள் திருப்தி அடிவாங்கும். அதுவே, நிறையக் கணினி வசதியை ஏற்பாடு செய்து விட்டு, வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருந்தால், குறைவான பயன்பாட்டிற்கு அதிகச் செலவைச் செய்வது போலாகிவிடும். இது போன்ற நிலையில் என்ன தான் செய்வது?
இங்குத் தான் மேகக் கணிமை கைக்கொடுக்கிறது. ஒரு இணையத்தளமோ, அல்லது எந்தக் கணினி சார்ந்த சேவை அளிப்பதற்குத் தேவையான முழுக் கணிமை வசதியும் இணையத்தில் இருக்கும். இணையத்தை மேகம் போல் உருவகம் செய்துக்கொள்ளவும் அது தான் மேகக் கணிமை. (கணினித்துறையில் படங்கள் வரையும்போது, இணையத்தைக்குறிக்க மேகம் போன்ற வடிவத்தை வரைவார்கள்)
நமக்குத் தேவையான கணிமைச் சேவையினை இணைய மேகத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். அதாவது இணையத்தில் அந்தச் சேவையை வழங்கும் அமேசான் போன்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம். சொந்த செட்டப் தேவையில்லை. எவ்வளவு பயன்படுத்துகிறமோ, அதற்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். வேண்டாம் என்றால் திருப்பிக்கொடுத்து விடலாம். மேலும் அதிகத்திறன் வேண்டும் என்றால், அதிகளவு கணிமை வசதி உடனடியாகக் கிடைக்கும். தேவைக்கேற்ப கணிமையின் அளவு அதுவாகவே கூடும் குறையும் வசதியும் உண்டு. என்னவென்று தெரியாமல் ஆண்டு முழுக்கத் தேவையில்லாமல் கணினி சாதனங்களை நாம் பராமரிக்கத் தேவையில்லை.
மேகக் கணிமையின் பலன் இப்போது புரிந்திருக்கும். ஏற்கனவே, நம்மில் பலர் மேகச் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கியிருப்போம். முன்பு, நாம் எடுக்கும் புகைப்படங்களை நமது கணினியில் சேகரித்து வந்தோம். பிறகு, கணினியில் டிஸ்க் அளவு போதுமானதாக இல்லாமல், தனியாக ஹார்ட் டிஸ்க் வாங்கிச் சேகரித்தோம். இப்போது அதற்கென இருக்கும் இணையத்தளத்தில் சேகரிக்கிறோம். இதுவும் மேகச் சார்ந்த கணிமை சேவை தான்.
இன்று இவ்வகைச் சேவையினை மைக்ரோசாப்ட், கூகிள் என்று பலர் வழங்கினாலும், அமேசான் இத்துறையில் மிக உயரத்தில் இருக்கிறது. பலவகைச் சேவைகளை மேகத்தில் வழங்குகிறது. உலகம் முழுக்க இதற்கென டேட்டாசெண்டர்களை அமைத்து, பல நிறுவனங்களுக்கு இந்தச் சேவையை வழங்கி வருகிறது அமேசான். பல நிறுவனங்கள் அமேசானின் சேவைகளைப் பயன்படுத்தி வருவதால், ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் அமேசானால் இச்சேவையை வழங்க முடிகிறது. ஒரு வருடத்திற்கு ஃப்ரீ டயர் (Free Tier) என்ற பிரிவில் இலவச சேவையைக் கொடுக்கிறது. எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இதில் குறைகள் இல்லாமல் இல்லை. நிறுவனங்களில் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருக்கும். பாதுகாப்பு வசதிகள், நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இருந்தும், அதன் பொறுப்பு அமேசான் மற்றும் பயன்படுத்தும் நிறுவனம் என்று இரண்டுப்பக்கமும் இருக்கும். பொறுப்புணர்ந்து செயல்படாவிட்டால், தகவல் பாதுகாப்புக் கேள்விக்குறியாகலாம். இன்று இதன் கட்டணம் கட்டுக்குள் இருப்பது போல் இருந்தாலும், நாளை என்னவாகும் என்பது அமேசானுக்குத் தான் தெரியும். அமேசான் தரும் பில் மேல் எப்போதும் ஒரு கண் வைக்க வேண்டியிருக்கும்..அவர்களது சர்வீஸ் எப்படி வேலை செய்யும் என்று தெரிந்து உள்ளே இறங்கினால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இணையத்திற்குக் கொண்டு சென்ற நிறுவனத்தின் தகவல் சொத்துக்கள் திரும்ப நிறுவனத்தின் வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமானால், அதற்கான செலவுகள், சவால்கள் போன்றவற்றையும் முதலிலேயே சிந்தித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று மேகக் கணிமை அமேசானுக்கு அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருந்தாலும், அமேசான் தனது ஓட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. மேகத்தைத் தாண்டி தனது பார்வையை விண்வெளிக்குக் கொண்டு சென்றுள்ளது. விண்வெளித்துறையில் எக்கச்சக்க முதலீடு செய்திருக்கும் அமேசான் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சேட்டிலைட்களை அனுப்பி, அதிவேக இணையச் சேவையை வழங்குவதற்குத் திட்டம் வைத்துள்ளது. வருங்காலத்தில் தொழிற்சாலைகளை விண்வெளியில் இருக்கும் பிற கோள்களில் சென்று அமைப்பதை ஜெஃப் தனது கனவாக வைத்துள்ளார். சந்தேகம் வேண்டாம், அமேசான் விண்ணைத் தாண்டி செல்லும்.
- சரவணகுமரன்