பனிப்பூக்கள் Bouquet – தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல்
கடந்த வாரம் இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, வாக்குப்பதிவு சாதனங்கள் அங்குமிங்கும் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. எதிர்கட்சிகள் ஆளும்கட்சியின் மீது குற்றச்சாட்டியது. அதன் பிறகு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, அந்த எதிர்கட்சிகள் அமைதியாகிவிட்டன. ரிசல்ட் அவர்களை அமைதியாக்கிவிட்டது. வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்றால், அவர்களது வெற்றியும் கேள்விக்குரியதாகிவிடுமே!
—
வாக்கு எண்ணிக்கையின் போது ரிபப்ளிக் டிவி அர்னாப், அவசரத்தில் ஒரு வார்த்தையை வேகமாகச் சொல்லப்போக, அவரை நாடே வாரு வாரென்று வாரிவிட்டது. பஞ்சாப்பில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட சன்னி தியோலை மீடியாவுக்கேயான அவசரத்தில் சன்னி லியோன் என்று வாய் தவறி, ‘சன்னி லியோன் முன்னணியில் இருக்கிறார்’ என்று வழக்கம்போல் கத்தினார். பின்பு, திருத்திக்கொண்டு சன்னி தியோல் என்றார். உடனே அந்த க்ளிப் வைரல் ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்தில் சன்னி லியோனும் ட்விட்டரில் “எவ்வளவு வாக்கில் முன்னணி?” என்று கேட்டு நக்கல் செய்தார். சன்னி லியோன் ப்ராண்ட் அம்பாசிடராக இருக்கும் ஒரு நிறுவனம், “மதிப்பிற்குரிய அர்னாப், அவர் எங்கள் நினைவிலும் எப்போதும் இருக்கிறார்” என்று கலாய்த்து விளம்பரம் விட்டது.
—
தேர்தல் முடிவுகளைச் சார்ந்து பல புள்ளிவிபரங்கள் வெளியானது. அவை எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதில் ஒரு புள்ளிவிபரத்தகவலில் இந்தியாவிலிருக்கும் மாநிலங்களைக் கல்வியறிவு சதவிகிதத்தில் வரிசைப்படுத்தி, அதில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் எங்கும் பிஜேபி ஒரு சீட் கூடப் பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, அறிவுள்ளவன் பிஜேபிக்கு ஓட்டுப் போடமாட்டான் என்பது தான் அந்தப் புள்ளிவிபரம் சொல்ல வந்த விஷயம். கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாநிலங்களின் கல்வியறிவு வரிசையானது, முழுக்கச் சரியானது அல்ல. இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டியே, அட்ஜஸ்ட் செய்து கொடுக்கப்பட்ட புள்ளிவிபரம் என்று புரிந்தது. ஆனால், அதைக் காணும் யாரும் அதை ஆராயப் போவதில்லை. அப்படியே நம்புவார்கள், பகிருவார்கள். பிஜேபி தான் போட்டோஷாப்பில் வல்லுனர்கள் என்றால், எல்லாப் பக்கமும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
—
அதிமுகச் சார்பில் ஓபிஎஸ்ஸின் மகன் ஒபிஆர் மட்டும் தான் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஜெயித்தவர். தேர்தல் முடிவுக்கு முன்பே எம்பி என்று போட்டு கல்வெட்டு ரெடி செய்துவிட்டதால், ஜெயித்துத்தானே ஆக வேண்டும்? அவருக்கு அதிகமாகப் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அமமுக தங்கத்தமிழ்செல்வன் மூன்றாவது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது. முடிவைக் கேட்டு நாட்டில் நேர்மைக்கு மதிப்பில்லை, காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சுட்டாங்க என்று புலம்பினார். அதை இவர் சொன்னது தான் காமெடி. இதுக்கு மேல இன்னொரு காமெடி இருக்குது. அவர் எப்படித் தோற்றார் என்று ஒரு ஆய்வு செய்தார்களாம். விஷயம் என்னவென்றால், அவர் இதுவரை அதிமுகவில் இருந்ததால், அவர் பிரச்சாரம் செய்யப்போன கிராமங்களில் நிறையப் பேர் அவர் இன்னமும் அதிமுகவில் தான் இருக்கிறார் என்று நினைத்து இரட்டை இலையையே அமுக்கிவிட்டார்களாம். கொண்டுப்போன பரிசுப்பெட்டிகளை எல்லாம் வெறும் பரிசுப்பெட்டிகள் மட்டுமே என்று நினைத்துவிட்டார்களோ!
—
தேர்தல் முடிந்தது. வாக்கு எண்ணிக்கையும் முடிந்தது.முடிவும் சொல்லியாச்சு. இனி அந்த ஓட்டுப்பதிவு சாதனங்களை என்ன செய்வார்கள்? அடுத்த 45 நாட்களுக்கு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பிருந்த அதே பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள். இந்த 45 நாட்களில் எந்த வேட்பாளராவது மறுவாக்குப்பதிவுக்கு விண்ணப்பித்தால், பரிசீலனை செய்யப்பட்டு, தேவையெனில் மறுவாக்குப்பதிவுக்கு அந்தச் சாதனங்கள் மீண்டும் தயாராகும். 45 நாட்களுக்குப் பிறகு மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை. அப்போது அச்சாதனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் அழிக்கப்பட்டு, அடுத்தத் தேர்தலுக்குத் தயாராகும். ஆட்சி கவிழ்ந்தால் திரும்பப் பயன்படும். இல்லாவிட்டால், 5 வருடங்களுக்குப் பிறகு தான் தூசி தட்டப்படும். வோட்டிங் மெஷின் க்ளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு ஏற்ற சரியான யூஸ்கேஸ். நியாயமாரே, ஒரு சர்வீஸ் ரெடி பண்ணுங்க!!
- சரவணகுமரன்