கொலைகாரன்
இந்தப் படத்தை மினசோட்டாவில் ஒரு திரையரங்கில் பார்த்தபோது, திரையரங்கில் இரு வயதான அமெரிக்கர்கள் வந்து உட்கார்ந்தனர். இந்தப் படத்திற்கு எப்படி இவர்கள்? தெரியாமல் வந்து விட்டனரோ? என்றெல்லாம் சந்தேகம் வந்தது. அவர்கள் உட்கார்ந்து ஆர்வமுடன் பார்க்க தொடங்கியதைக் கண்ட பிறகுதான், சரியான படத்திற்குத் தான் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. படம் பார்த்து முடித்த பிறகு, படம் குறித்த அவர்களது கருத்தையறிய முடிந்தது. அவர்களுடைய சுருக்கமான விமர்சனத்தைப் பார்ப்பதற்கு முன்பு, படம் குறித்த நமது பார்வையைப் பார்த்துவிடலாம்.
வெற்றிப்படங்களாகக் கொடுத்து வந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வி படங்களாகக் கொடுக்க, இவர் அடுத்த வெற்றியை எப்போது கொடுப்பார் என்று அவரைப் போலவே நாமும் காத்திருந்தோம். இதோ இப்போது தனது நண்பர் ஆண்ட்ரூ இயக்கத்தில், அர்ஜுனுடன் இணைந்து கொலைகாரன் கொடுத்திருக்கிறார். இது இப்போது அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. “தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ்” என்ற ஜப்பானிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுத்த படம் இது. அதை முதலில் டைட்டிலில் போட்டுவிடுவது, நல்ல விஷயமாகப்பட்டது.
இதே நாவலை வைத்து தான், மலையாளத்தில் த்ரிஷ்யமும், பின்பு அதை ரீமேக் செய்து தமிழில் பாபநாசமும் எடுத்தார்கள். தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளுக்கும் அந்தக் கதை சென்றது. ஆனால், ஏற்கனவே பார்த்த படமாச்சே! என்ற எண்ணத்தை வரவிடாமல், புதியதாகக் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ. இருந்தும், ஒரிஜினல் நாவலைக் குறிப்பிட்டது பாராட்டிற்குரியது.
ஒரு கொலை செய்துவிட்டதாகக் கூறி போலீஸில் சரணடைகிறார் விஜய் ஆண்டனி. புத்திசாலி காவல்துறை அதிகாரியான அர்ஜூன் அங்கு தனது விசாரணையைத் தொடங்குகிறார். விஜய் ஆண்டனி வீட்டிற்கு எதிர் வீட்டில் தனது அம்மாவுடன் வசிக்கும் ஆஷிமா ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள, ஒரு கொலை நடக்கிறது. ஆஷிமா, அவருடைய அம்மா சீதா, விஜய் ஆண்டனி, இவர்கள் மூவரும் போலீஸ் விசாரணைக்குள் வருகிறார்கள். உண்மையில் கொலையைச் செய்தது யார்? எதற்கு? அர்ஜூனால் சரியான கொலையாளியைக் கண்டுப்பிடிக்க முடிந்ததா? என்பதற்கான விடைகள் மீதி படத்தில் உள்ளது. ஸ்பாய்லர் இல்லாமல் இப்படத்திற்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப கஷ்டமப்பா!!
இதே போன்ற படங்களை ஏற்கனவே பார்த்திருந்தாலும், அவற்றின் நினைப்பு வந்து போனாலும், இதில் சில சஸ்பென்ஸ்களை வைத்திருக்கிறார் இயக்குனர். ஏற்கனவே அறிமுகமான கதையை, மீண்டும் ரசிக்க வைக்கும் வண்ணம் எடுக்க முடியும் என்று தைரியமாக நிரூபித்து இருக்கிறார் ஆண்ட்ரூ. பாராட்டுகள். சில நடிகர்கள் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதற்கேற்றாற் போல் நடித்து வெற்றி பெறுவார்கள். விஜய் ஆண்டனியோ, தனக்கு நடிக்க வருவதற்கு ஏற்றாற் போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெறுகிறவர். ஒரு சில காட்சிகள் தவிர்த்து, பெரிய ரியாக்ஷன்கள் ஏதுமின்றி, அவரது பாணியிலேயே நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அதுவே தேவையானதுமாக அமைந்தது, அவருக்கு நல்லதாகப் போய்விட்டது.
இன்னொரு பக்கம், தனது தீர்க்கமான நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் ஆக்ஷன் கிங். சண்டை ஏதும் போடாமல், கண்களிலேயே தனது ஆக்ஷன்களைக் காட்டிவிடுகிறார். அவருக்கு ஏற்றாற் போன்ற கதாபாத்திரங்கள் தொடர்ந்து அவருக்கு அமைவது நல்ல விஷயம். புதுமுக நாயகியான ஆஷிமாவிற்குக் கதையில் பலமான கதாபாத்திரம். அதை அவரால் முடிந்தளவு சிறப்பாகச் செய்திருக்கிறார். சீதா, நாசர் எனத் தெரிந்த பிற முகங்களும் தங்களது பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் பலமும் பலவீனமும் திரைக்கதை எனலாம். முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் திரைக்கதை, பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், கொஞ்சம் குழப்பத்தைத் தரும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. படத்தின் மேக்கிங் நம்மைப் படத்துடன் கட்டிப்போடுகிறது. இசையமைப்பாளர் சைமன் கிங் படத்தின் பின்னணி இசையில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அந்த வயலின் பீட் செம விறுவிறுப்பைப் படத்திற்கு அளிக்கிறது, லைட்டா ஓவர் டோஸ் ஆனாலும். குழப்பத்தைத் தரக்கூடிய வாய்ப்புள்ள திரைக்கதையை, குழப்பமின்றி ரசிகனுக்குக் கடத்த முயன்றிருக்கிறார் எடிட்டர் ரிசார்ட். ஒளிப்பதிவை பட்டாசாக அமைத்திருக்கிறார் முகேஸ்.
ஏற்கனவே பார்த்தது போன்ற கதை என்பது ஒரு குறை. ஆனால், அதைப் புதுசாகக் காட்ட அனைவரும் உழைத்திருக்கிறார்கள். அதே போல், தெளிந்த நீரோடையான திரைக்கதை இல்லையென்பதால், படம் பார்க்கும் சிலர் குழம்பவும் வாய்ப்புள்ளது. பாடல்கள் தனியாகக் கேட்டால் நன்றாக இருந்தாலும், படத்தில் தேவையில்லாமல் வருகின்றன. அதையும் தயவு தாட்சயம் பார்க்காமல் கத்தரித்திருக்கலாம். மற்றபடி, இந்தக் கொலைகாரனை நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.
படம் முடிந்தப்பிறகு, படத்தைப் பார்த்த அந்த இரு அமெரிக்கர்களிடம் படத்தைப் பற்றி விசாரிக்கும் போது, அவர்களுக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது குறித்துத் தெரிந்துக்கொள்ள முடிந்தது. அவர்கள் முதலில் பாராட்டியது, ஒளிப்பதிவைத் தான். சப் டைட்டில் ரொம்பவும் வேகமாக ஓடியதால், அதை முழுவதுமாகத் தொடர முடியவில்லை. இருந்தாலும், கதையைப் புரிந்துக்கொள்ள முடிந்ததாகக் கூறினார்கள். இந்தியப் படங்கள் என்றாலே ஹிந்தி என்ற புரிதலில் இருந்தார்கள். இது தமிழ்ப்படம் என்றும், தமிழ் மொழியின் சிறப்புக் குறித்தும் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன். தமிழ் படைப்பாளிகளே, பார்த்துப் படமெடுங்கள்!! 🙂
- சரவணகுமரன்.