பனிப்பூக்கள் Bouquet – பிரச்சினை பலவிதம்
மத்திய அரசு, ஹிந்தி குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது கொடுக்கும் போதெல்லாம், தமிழகத்தில் எதிர்க்குரல்கள் எழும்பும். முன்பு, அரசியல்வாதிகள் மட்டும் தான் குரல் கொடுப்பார்கள். சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பிறகு, இப்போது வலைவாசிகளின் குரல் அரசியல்வாதிகளின் குரலை மீறிவிட்டது எனலாம். இனி, அரசியல்வாதிகள் எதிர்ப்பு எழுப்பாவிட்டாலும், மக்கள் குரல் தவறாமல் எழும்பும் என நம்பலாம். அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இது குறித்து மூன்று ட்வீட்களை ஊமைக்குத்தாகப் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
—
செல்வராகவனுடைய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வெளிவந்த போது சரியாகப் போகவில்லை. படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கழித்து அவருடைய ரசிகர்கள் சிலாகித்தார்கள். ரீ-ரிலீஸ், இரண்டாம் பாகம் என்றெல்லாம் பேச்சுகள் வந்துக்கொண்டிருந்தன. அதனால், சூர்யாவுடன் இணைந்து அவர் எடுத்த என்.ஜி.கே.வுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள், தலை குழம்பி வந்தார்கள். செல்வராகவனிடம் கேட்டால், படத்தில் பல லேயர்கள், பல குறியீடுகள், மறைந்திருக்கும் பல ரகசியங்கள் இருக்கின்றன, பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இனி அவருடைய ரசிகர்கள் பத்து வருடங்கள் கழித்து வந்து அது அப்படி, இது இப்படி என்று சொல்லுவார்களே என்று நினைக்கும் போதுதான் நமக்கு கெதக்கென்று இருக்கிறது.
—
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மழையால் பல மேட்ச்கள் கேன்சல் ஆகிவிட்டன. அதிக அளவு மேட்ச்களை கேன்சல் செய்து, இந்த உலகக் கோப்பையில் வானிலை சாதனை செய்துவிட்டது. மேட்ச் ரிசல்ட் எப்படி இருக்குமோ’ன்னு ரசிகர்கள் பதட்டமடைவது போய், இன்றாவது மேட்ச் நடக்குமா’ன்னு பதட்டத்துடன் காத்துக்கிடப்பது, இந்த உலகக் கோப்பை நிகழ்வின் வழக்கமாகிவிட்டது. இதனால் உலகக் கோப்பைக்கான பரபரப்பே குறைந்துவிட்டது எனலாம். ரசிகர்களது மனநிலை இப்படியிருக்க, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், நிறுவனங்களுக்கு வேறு கவலை. அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த விளம்பரங்கள், எதிர்பார்த்திருந்த வருமானங்கள் எல்லாம் அடிவாங்குகிறதே என்று. தரையில் கவர் விரிப்பது, ஸ்டேடியத்தின் மேலே மூடுவது என்றெல்லாம் இப்போது யோசனைகள் வருகின்றன. பார்ப்போம், இனி வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று.
—
இங்கிலாந்தில் மழை பெய்வது பிரச்சினை என்றால், தமிழ் நாட்டில் மழை இல்லாமல் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. உண்மையில், இப்போது மழை இல்லையென்றோ, குறைவு என்றோ சொல்ல முடியாதாம். முன்பு வருவதைவிட, இப்போது மழை அதிகமாகத்தான் பெய்கிறதாம். ஆனால், அதைச் சேமிக்காமல் விட்டுவிட்டு, இப்போது தண்ணீர் இல்லாமல் வாடுகிறது ஊர். தண்ணீர் பயன்பாடு குறித்து எப்பொழுதுமே பேசுவார்கள். ஆனால், செயல்திட்டங்கள் குறைவே. இப்போது பிரச்சினை வீரியமடைந்திருக்கிறது. அரசும், மக்களும் இனியாவது தண்ணீர் பிரச்சினையின் தீவிரம் புரிந்து, சேமிப்பு, பயன்பாட்டில் கவனம் கொள்வார்களா என்று பார்ப்போம். ஊரில் நீர் நிலைகளைப் பெருக்கியவரின் புகழ் தான், மற்ற எவரையும் விட ஓங்கி நிலைக்கும் என்று நாம் சொல்லவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட புறநானூறுவில் புலவர் குடபுலவியனார் சொல்லியிருக்கிறார்.
—
பழைய இலக்கியங்கள், வரலாறு போன்றவை பழையவற்றை அறிந்துக்கொள்ள மட்டுமில்லாமல், இப்போதைய வாழ்வைச் சிறப்பிக்கவும் உதவும். கடந்த சில நாட்களாக, இராஜ ராஜ சோழன் குறித்த பேச்சு அதிகமாகி உள்ளது. ஒரு விழாவில் இராஜ ராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி, அது குறித்துப் பலரும் தற்சமயம் பேசத் தொடங்கிவிட்டார்கள். யார் நிலத்தை யாருக்கு கொடுத்தார்கள் என்று ஆரம்பித்தவர்கள், தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளையே டேமேஜ் செய்யத்தொடங்கிவிட்டார்கள். ஒருவரின் புகழை மட்டும் பேசுவதில்லை வரலாறு. உண்மை நிலை என்ன என்று கூறுவதும் தேவை தான். அதே சமயம், இது வெறும் சர்ச்சைகளின் எழுச்சியாக மட்டும் இருப்பதில் என்ன பயன்? அது ஆக்கப்பூர்வமாக ஏதேனும் தீர்வைக் கொடுக்கப்போகிறதா என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது. நம் கண்களுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. மூடிக்கொண்டு (வாயை) அவரவர் வேலையை மட்டும் பார்க்கலாம்.
- சரவணகுமரன்.