The extraordinary journey of the fakir
17 ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். துள்ளுவதோ இளமையில் நடிக்க வந்திருந்த தனுஷ், தமிழில் முன்னணி நடிகராக முன்னேறி, நடிப்பிற்காக தேசிய விருது பெற்று, ஹிந்தியில் ஹிட் கொடுத்து, பிறகு ஆங்கிலப் படத்திலும் நடிப்பார் என்று. இதோ, தி எக்ஸ்ட்ராஆர்டினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் (The extraordinary journey of the fakir) என்ற படத்தின் மூலம் தனது அடுத்த மைல்கல்லைக் கடந்து வந்திருக்கிறார். து.இ.யில் ஷெரினுக்கு முத்தம் கொடுத்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர், சர்வதேசப் பாய்ச்சலுடன் இப்படத்தில் அமெரிக்க நடிகை எரினுக்கு முத்தம் கொடுத்து முத்திரை பதித்திருக்கிறார்.
இதே தலைப்பில் 2014இல் வெளிவந்த ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ப்ரெஞ்சு நாவல், வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, விருதுகளும் பெற்ற நாவல். அந்தக் கதை ஒரு ராஜஸ்தானிய இளைஞனின் உலகப் பயணத்தைப் பற்றியது என்பதால், அதைப் படமாக எடுக்க முடிவானபோது, இந்தியாவில் இருந்து தனுஷ் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வட மாநில கதாபாத்திரம் என்றாலும், அதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் முடிவானது, தனுஷின் நடிப்பாற்றலால் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.
படத்தின் நாயகனான அஜா, துணி துவைத்துப் பணி செய்யும் தனது தாயுடனும், ஒரு மாட்டுடனும் ஏழ்மையான வாழ்வை மும்பையின் சேரிப் பகுதியில் வாழ்ந்து வருகிறான். தெருவில் தந்திர வித்தைகள் செய்துக் காட்டிக்கொண்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபட்டு வருபவன், தனது தாயின் மறைவிற்குப் பிறகு, தனது தாயின் ஆசையை நிறைவேற்ற, பாரிஸ் பயணமாகிறான். அங்கு ஐக்கியா பர்னிச்சர் கடையில் ஒரு அலமாரியினுள் தங்க, அந்த அலமாரி லண்டன் எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு, அவனது பயணம் பெல்ஜியம், ரோம், லிபியா என்று பல இடங்களுக்குத் திசைமாறி செல்கிறது. இறுதியில் இந்தியாவிற்குத் திரும்பும் அஜாவின் பயண அனுபவங்களின் தொகுப்பே, இப்படத்தின் திரைக்கதை.
சென்ற வருடமே, இப்படம் ஆங்கிலத்தில் வெளியாகியிருந்தபோதிலும், இந்தியாவில் இப்போது தான் வெளியாகிறது. சென்ற ஆண்டு வெளியானச் சமயத்தில் இப்படம் சில விருதுகளைப் பெற்றிருந்தாலும், படம் வியாபாரத்தில் பெரிய தோல்வியைத்தான் அடைந்திருந்தது. நம்ப முடியாமல் கேள்வி எழுப்பும் காட்சிகள், படத்தில் ஆங்காங்கே தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பதால், படத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது. படத்தின் தோல்விக்கு அது ஒரு காரணம்.
படத்தின் ஆரம்பத்தில் மும்பை சிறுவர் சீர்திருத்தச் சிறையில் மூன்று சிறுவர்களிடம் தனது கதையை ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பிக்கிறார் தனுஷ். ஆங்கிலப் படம் என்பதால் மும்பை சேரி மக்கள், தெரு ரவுடிகள், பாரிஸ் மக்கள், லிபிய அகதிகள் என்று வேறு வழியில்லாமல் அனைவரும் ஆங்கிலம் பேசுவது முதலில் யதார்த்தத்தைத் தகர்த்துவிடுகிறது. பார்த்தவுடன் காதல், சுலபமாகப் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லா பயணம் என்று நம்பகத்தன்மையே இல்லாத படமாக்கம் சலிப்படைய வைக்கிறது.
படம் பார்க்கும் போது தோன்றியது, இந்தக் கதையை நாவலாகப் படிக்கும் போது, நன்றாக இருந்திருக்கும் என்பது தான். புத்தகத்தில் கதை படிக்கும் போது, நாவலாசிரியர் பாதிக் கற்பனையை வாசகனிடம் விட்டுவிடுவார். அப்போது மாய யதார்த்தம் என்பது வாசிக்கும் போது நல்ல சுவாரஸ்யத்தைக்கொடுக்கும். அதுவே, சினிமா எனும் போது, ஒரு தீர்மானம் தேவைப்படுகிறது. ஒன்று, கதையை யதார்த்தம் என்று முழுதாக நம்பி படத்துடன் ஒன்றிவிட வேண்டும், இல்லாவிட்டால் முழுமையான கற்பனைக் கதை என்று தெரிந்து உள்ளே மூழ்கி விட வேண்டும். அப்படியில்லாமல் இப்படம் இரண்டுங்கெட்டான் நிலையை அளித்துவிடுகிறது.
இது தவிர, கதையின் போக்கு எந்த நோக்கமும் இல்லாமல், அம்மாவின் ஆசை, தந்தையின் கடிதம், பாரிஸ் காதல், திருடனிலிருந்து ஆசிரியனாதல் என்று பல திசைகளில் பயணிப்பதால், நம்ம ஸ்டாப் எது என்ற குழப்பமும் வந்து சேர்கிறது. ஆங்கிலப்படத்தில் அவ்வப்போது பாடல்களை மட்டும் ஹிந்தியில் பாட்டு போடும் போது, இது என்ன மொழிப் படம் என்ற குழப்பமும் கூட வந்து சேர்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல் நம்ம தனுஷ் நம்மை எழுந்து போகவிடாமல், படத்தைத் தொடர்ந்து பார்க்க வைக்கிறார். வெளிநாட்டு கலைஞர்களின் நடிப்பிற்கு முன்னால், எந்தக் குறைவும் இல்லாமல், சொல்ல போனால், அவர்களைவிடச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையும், படமும் இன்னும் சிறப்பாக, சினிமாவிற்கு ஏற்ப இருந்திருந்தால், தனுஷிற்கு ஆங்கிலத்திலும் ஒரு வெற்றிப்படம் கிடைத்திருக்கும். அது மிஸ்ஸாகிவிட்டது.
- சரவணகுமரன்