\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பனிப்பூக்கள் Bouquet – சில எதிர்பார்ப்புகள்

லக்ஷன் முடிந்து கமல் ‘பொதுசேவை’க்கு பழையபடி திரும்ப வந்து விட்டதால், விஜய் டிவியில் பிக் பாஸ் 3வது சீசன் தொடங்கிவிட்டார்கள். தெரிந்த முகங்களான 80ஸ் கிட்ஸ்களுக்கு செய்தி வாசித்த பாத்திமா பாபு, 90ஸ் கிட்ஸ்களுக்கு படமெடுத்த இயக்குனர் சேரன், 2K கிட்ஸ் பார்த்து ரசித்த ஷெரின் ஆகியோர் இருந்தாலும், இன்றைய யூத்ஸ் அதிகம் பேசுவது இலங்கைச் செய்தி வாசிப்பாளர் லஸ்லியாவைப் பற்றித்தான். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நீச்சல்குளத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். இந்தத் தண்ணியில்லாத காலத்தில் இவர்கள் நீச்சல்குளத்தில் குளித்துக் கூத்தடிப்பதைப் பார்த்தால், மக்கள் காண்டாவார்கள் என்பதால் நீச்சல்குளத்தில் இதுவரை தண்ணீர் ஊற்றாமல் வைத்திருக்கிறார்கள். பார்ப்போம், சென்னையின் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து பிக் பாஸ் நீச்சல்குளத்தில் தண்ணீர் வருகிறதா என்று.

———

கால் பந்தாட்டத்தில் இருப்பது போல், இந்திய கிரிக்கெட் அணிக்கும் வெளிநாடுகளில் அணிந்து விளையாடுவதற்கான மாற்று சீருடையை, இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்தச் சீருடையில் ஆரஞ்ச் வண்ணம் பெரும்பான்மையாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரஞ்ச்சா இல்லை காவியா என்று ஒரு பக்கம் அரசியல்ரீதியான எதிர்வினை வர தொடங்கியது என்றால் இன்னொரு பக்கம் இதை ஹார்லிக்ஸ் பாட்டிலுடனும், போர்ன்விடா பாட்டிலுடனும், பெட்ரோல் நிலைய ஊழியர் உடையுடனும், ஸ்விக்கி உணவு வினியோகிக்கும் நிறுவன ஊழியர் உடையுடனும் ஒப்பிட்டு காமெடி செய்யத் தொடங்கிவிட்டனர் இணையத்தள வலைவாசிகள். உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிப்பெற்று வந்த இந்திய அணி, இந்தச் சீருடை அணிந்து விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்துவிட்டது. பார்க்கலாம், இந்தச் சீருடை தொடர்கிறதா, அல்லது மாறுகிறதா என்று.

—-

வியாபாரத்தில் விற்பனையைப் பெருக்க உதவும் பல டெக்னிக்குகளில் ஒன்று, சில நாட்களில் சிறப்புத் தள்ளுபடி அளிப்பது. ஆடி சிறப்புத் தள்ளுபடி என்று நம்மூரில் கொடுப்பது போல், இன்றைய இணைய வர்த்தகச் சூழலில் ப்ரைம் டே, பிக் பில்லியன் டே என்று பல பெயர்களில் தள்ளுபடி நாட்களை உருவாக்கியிருக்கிறார்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள். அமேசானின் ப்ரைம் டே விற்பனை இந்தாண்டு ஜுலை 15 ஆம் தேதியும், 16 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய விற்பனையை அமேசான் செய்து வருகிறது. 2015இல் அமேசான் தொடங்கி 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு முதல் ப்ரைம் தினத்தை அறிவித்தனர். அதன் பின்னர், வருடா வருடம் ஜூலை மாதத்தில் ப்ரைம் டே விற்பனையை நடத்தி வருகிறது இந்நிறுவனம். கடந்த ஆண்டு விற்பனையில் முன்னணி வகித்தது, ஸ்மார்ட் ஹோம் கருவிகள் என்றது அமேசான். இந்தாண்டும் அத்தகைய கருவிகளுக்கே வாடிக்கையாளர்களிடம் மிகுந்த ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம், இந்தாண்டின் விற்பனை எப்படி இருக்கப் போகிறது என்று.

—–

மெரிக்காவில் ஆண்டுத்தோறும் ஜூலை முதல் வாரத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா நடைபெறும். இவ்வாண்டு அந்த விழா ஜூலை 4இல் இருந்து 7 வரை சிகாகோ மாநகரில் நடைபெறவுள்ளது. கூடவே, பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெறுகிறது. இதுவரை, மலேசியா, இந்தியா, இலங்கை, பிரான்ஸ், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றுவந்த இந்த மாநாடு முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுவரை செய்துவந்தது போல், இம்முறையும் தமிழக அரசு நிதியுதவி அளிக்க முன்வந்தது. ஆனால், விழா அமெரிக்காவில் நடப்பதால், இந்த நிதியை அனுப்ப மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. மத்திய அரசோ, இன்னமும் இதற்கான அனுமதியைக் கொடுக்காமல் இருக்கிறது. பார்க்கலாம், தமிழக அரசின் நிதியுதவி அமெரிக்கா வந்து சேருமா என்று.

—-

ந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இரண்டு நாடுகளும் பதிலுக்குப் பதில் விதிக்கும் வரிகளாகும். போன வருஷம், அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அதிகமாக வரியை உயர்த்தியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்தியா சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த வரி விதிப்பை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று சவுண்டு விட்டார். அமெரிக்காவுக்குச் சீனாவுடனும் இது போன்ற வணிக மோதல்கள் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் இது குறித்து இந்த நாடுகளின் தலைவர்கள் பேசி முடித்தாலும், வரி விதிப்பை ரத்துச் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரி விதிப்புகள் ரத்து செய்யப்படுமா, குறைக்கப்படுமா அல்லது மேலும் உயர்த்துப்படுமா என்பது இந்த நாடுகளின் வெளியுறவு கொள்கையைப் பொறுத்து அமைய உள்ளது. பார்க்கலாம், எவ்வித முன்னேற்றங்கள் இவ்விடங்களில் ஏற்படும் என்று.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad