ஸ்டாரிங் லேக் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி
மினசோட்டாவின் ஈடன் ப்ரெய்ரி (Eden Prairie) நகரத்தில் இருக்கும் ஸ்டாரிங் லேக் (Staring Lake) வெளிப்புற மேடையில், கோடைக்காலங்களில், பொது மக்களுக்காக மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அவ்வாறு இவ்வாண்டு ஜூன் 28ஆம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தென்னிந்திய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் திரு. மாரிமுத்து, திரு. நாகராஜ், திரு. ரங்கராஜ், முனைவர். அருள் செல்வி மற்றும் திரு. ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் மினசோட்டா மாநில தமிழ் மக்களும் இணைந்து நாகசுரம், தவில், பறை, பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள் கொண்டு நாட்டுப்புற இசை கச்சேரி நடத்தினர். இந்த நாட்டுப்புற இசையுடன் பரதம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், கை சிலம்பம், சிலம்பாட்டம், கும்மி, ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளையும் மினசோட்டா மக்கள் முன்பாக நிகழ்த்திக்காட்டினர்.
இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் கண்டு ரசித்து, தமிழ் நாட்டுப்புற இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நாட்டுப்புற இசை கலைஞர்கள், மினசோட்டாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து, உள்ளூர் மக்களுக்குத் தமிழ் நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத் தருகிறார்கள். மினசோட்டா அரசின் கலை வாரியம் இதற்கான நிதி உதவியை, கடந்த மூன்று ஆண்டுகளாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்திற்கு, தமிழ்க் கலைகளை மினசோட்டாவில் வளர்ப்பதின் பொருட்டு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே நீங்கள் காணலாம்.
- சரவணகுமரன்