இசையுதிர் மாதம்
ஏப்ரல் மாதம், தமிழ் இசைத்துறை மூன்று பெரும் மேதைகளை இழந்து விட்டது.
பி.பி. ஸ்ரீனிவாஸ்
தோற்றம்: 09/22/1930 மறைவு: 04/14/2013
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் – பெயர் அச்சுறுத்தும் வகையில் அமைந்தாலும் இனிமையான, அமைதியான குரலும், மனமும் கொண்டவர்
பி.பி.எஸ். PBS (P.B.Sreenivos) is the best PBS (Play Back Singer) எனச் சொல்வார் திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ். விசுவநாதன்.
தன் தந்தையின் நண்பர் திரு. சங்கர சாஸ்திரியின் இசையில் மிஸ்டர், சம்பத் இந்தித் திரைப்படத்தில் பாடினார் பி.பி.எஸ். தொடர்ந்து ‘ஜாதகம்’ எனும் தமிழ்ப் படத்தில் பாட வாய்ப்பும் அமைந்தது. முறையான இசைப் பயிற்சி இல்லாததினால் இடைவெளி நேர, சில ஆண்டுகள் கழித்து ஜி. ராமநாதன் இசையில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜெமினி கணேசனுக்காக ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ பாடலைச் சுசிலாவுடன் சேர்ந்து பாடினார். பின் வெளிவந்த ‘அடுத்த வீட்டுப் பெண்’ திரைப்படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’, ‘வனிதா மணியே’ பாடல்களும், ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ‘காற்று வெளியிடை கண்ணம்மா ..’ பாடலும் பி.பி.எஸ்க்கு தமிழ் திரையிசையுலகில் ஒரு சிறந்த அறிமுகமாக அமைந்தன.
ஆந்திரப் பிரதேசம், காக்கிநாடாவில் பிறந்த பி.பி.எஸ்ஸின் தமிழ் உச்சரிப்பும், மென்மையும், அக்காலத்தில் உச்சஸ்தாயியில் பாடி வந்தவர்கள் இடையே அவ்வளவாக எடுபடவில்லை. 1956 களில் தெலுங்குத் திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடினார். கண்டசாலாவின் குரலுக்கு எதிரே இவரது குரல் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
அறுபதுகளின் தொடக்கத்தில் சமூகப் படங்கள் வரத் தொடங்க மெல்லிசை பாடல்கள் பிரபலமடையத் தொடங்கியது. அப்போது தான் பி.பி.எஸ்ஸை ஜெமினி கனேசனுக்காகப் பாட வைத்தனர் மெல்லிசை மன்னர்கள். பின்னர் இவர்களது கூட்டணியில் பல பாடல்கள் இமாலய வெற்றியடையத் துவங்கின. பீம்சிங்கின் இயக்கத்தில் வெளியான ”பா” வரிசைப் படங்களும், ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான பல படங்களும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
எம்.பி. ஸ்ரீனிவாஸ் இசையில் பி.பி.எஸ். பாடிய “தென்னங்கீற்று சோலையிலே” கேட்டவுடன் மனம் லேசாகிப் போவதை உணர்வீர்கள். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் இவர் பாடிய பாடல்கள் பல சாகாவரம் பெற்றவை.
காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு), நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (நெஞ்சில் ஓர் ஆலயம்), விஸ்வநாதன் வேலை வேண்டும் (காதலிக்க நேரமில்லை) பொன் என்பேன் (போலிஸ்காரன் மகள்), ரோஜா மலரே ராஜகுமாரி (வீரத்திருமகன்), மயக்கமா கலக்கமா (சுமைதாங்கி) போன்ற பாடல்கள் மிகக் குறிப்பிடத்தக்கவை. கே.வி. மகாதேவன் இசையிலும் பல பாடல்கள் பாடியுள்ளார் பி..பி.எஸ். அவற்றில் “பார்த்தேன் .. சிரித்தேன் (வீர அபிமன்யு), எந்த ஊர் என்றவனே (காட்டு ரோஜா) போன்றவை மனித இனம் இருக்கும் வரை அழியாதவை.
கன்னடப் படங்களில் நடிகர் ராஜ்குமாருக்கு பல பாடல்களை (ஏறத்தாழ இருநூறு பாடல்கள்) பாடியுள்ளார் பி.பி.எஸ். ராஜ்குமார் “நான் சரீரம் .. பி.பி.எஸ். சாரீரம்” எனத் தனது வெற்றிகளில் அவருக்குப் பங்களித்தார். ஒரு முறை சிங்கப்பூர் சென்றிருந்த பி.பி.எஸ்.திரும்பத் தாமதமானதால், பாடல் ஒலிப்பதிவில் பி.பி.எஸ்ஸுக்கு ‘ட்ராக்’ பாடினார் ராஜ்குமார். இசையமைப்பாளர், பி.பி.எஸ் திரும்பியவுடன் அவரை அழைத்து அப்பாடலைப் பாடச் சொல்ல, ராஜ்குமார் பாடியதைக் கேட்டு வியந்த பி.பி.எஸ். அந்தப் பாடல் ராஜ்குமார் குரலிலேயே வெளியாக வேண்டும் என அடம் பிடிக்க, அப்பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு தனது சொந்தக் குரலிலேயே தன் பாடல்களைப் பாடிவந்தார் ராஜ்குமார்.
தனது தாயார் இறந்த அன்றுகூட அந்த விஷயத்தைத் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தெரிவிக்காமல் பதிவுத்தளத்துக்குச் சென்று பாடலைப் பாடிக் கொடுத்தவர் பி.பி.எஸ். அந்தளவுக்கு அவரிடம் இசை பக்தி நிறைந்திருந்தது.
எண்பதுகளுக்குப் பின்னர் அவரைத் தமிழ்த் திரையுலகமும், இசையுலகமும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாத பி.பி.எஸ். ஹிந்துஸ்தானி, கஜல் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் காட்டத் துவங்கினார். எட்டு மொழிகளில் பாட / பாடல் எழுதத் தெரிந்தவர் பி.பி.எஸ். எட்டு மொழிகளிலும் மிகச் சிறந்த புலமை கொண்ட பி.பி.எஸ். நொடிப்பொழுதில் பாடல் புனையும் திறமை கொண்டவர்.
சட்டைப்பையில் பல வண்ணப் பேனாக்களும், பட்டு அங்கவஸ்த்திரம் அல்லது தலைப்பாகையும் இவரது முத்திரைகள். சென்னை இராதாகிருஷ்ணன் சாலையிலிருந்த வுட்லனண்ட்ஸ் திறந்தவெளி உணவகம் அவரின் மறுவீடு போன்றது. தொடர்ந்து 46 ஆண்டுகள் அங்கு வருவதைப் பழக்கமாகக் கொண்டிருந்த பி.பி.எஸ் ஏப்ரல் 2008ல் அது இடிக்கப்பட்ட பின் பல நாட்கள் வெளியில் செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
எண்ணற்ற பாடல்களைத் தந்த பி.பி.எஸ்ஸுக்கு மக்களும், திரையிசை உலகமும் போதிய மதிப்பையும் கெளரவத்தையும் அளிக்கத் தவறியது. கலைமாமணி பட்டத்தைத் தவிரத் தமிழக அரசும், இந்திய அரசும் அவரைப் பெருமைப் படுத்த வில்லை. சாதனையாளர் விருது வழங்கும் பல ஊடகங்களும் அவரை மறந்து விட்டன. கன்னடத் திரையுலகம் சார்பில் அவருக்கு இசைவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஏப்ரல் பதினாலாம் தேதி பி.பி.எஸ் இறந்து விட்டார்.
MUSIC without M (Melody) makes U (you) sick என்பார் பி.பி.எஸ். அவரை இழந்த இசையுலகும் சுகமிழந்து விட்டது.
தோற்றம் : 1922 மறைவு : 04/17/2013
இசைக் குடும்பத்தில் பிறந்த டி.கே. ராமமூர்த்தி (திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி) தனது பன்னிரெண்டாவது வயதிலேயே சிறந்த இசை ஞானம் பெற்று விளங்கினார்.
இவரது தாத்தா கோவிந்தசாமியும், அப்பா கிருஷ்ணசாமியும் சிறந்த வயலின் கலைஞர்கள். அப்பா அப்போதைய HMV கம்பெனியில் வயலினிஸ்ட்டாக இருந்தார். ராமமூர்த்தியும் அவர்களிடம் வயலின் பயின்று தேர்ச்சி பெற்று விளங்கினார்.
அவரது பதினாலாவது வயதில், HMV யில் பணியாற்றிய C.R. சுப்பராமன், இவரின் வயலின் திறமையைப் பார்த்து வியந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்போது கிடைத்த அறிமுகங்களால் R. சுதர்சனம் அவர்களின் இசைக்குழுவில் வயலின் கலைஞராகச் சேர்ந்தார் ராமமூர்த்தி. பின்னாளில் C.R. சுப்பராமன் திரையிசையில் புகழ் பெற மீண்டும் அவரிடமே சேர்ந்தார்.
அப்போது ராமமூர்த்தியும், T.G. லிங்கப்பாவும் C.R. சுப்பராமன் இசைக் குழுவின் பிரதான வயலின் கலைஞர்கள். இந்நிலையில் 1950ல் அங்கு வந்து சேர்ந்தார் M.S. விஸ்வநாதன். விஸ்வநாதன் ஹார்மோனியம், பியானோ வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் அவருக்குப் பாடகர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் மெட்டுப் போட்டுக் காட்டும் வேலையளிக்கப்பட்டது. பிறகு தன்னை விட மூத்தவரான ராமமூர்த்தியிடம் தனக்கு வாய்ப்பு கிடைக்குமானால் எப்படி அந்தப் பாடலை உருவாக்கியிருப்பேன் என விஸ்வநாதன் வாசித்துக் காட்ட அதில் திருத்தங்கள் செய்வாராம் ராமமூர்த்தி.
இவ்வாறு இவர்கள் போட்ட மெட்டுக்கள் C.R. சுப்பராமன் பெயரில் திரைப்படங்களில் வெளியாகின. C.R. சுப்பராமன் தனது இறுதி நாட்களில் இதை வெளியிட, என்.எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான “பணம்” திரைப்படத்தில் விஸ்வநாதனை இசையமைக்க அணுகினார் ஏ.எல். ஸ்ரீநிவாசன். ராமமூர்த்தியும் தன்னுடன் இணைந்தால் இசையமைப்பதாகச் சொன்ன விஸ்வநாதனை என்.எஸ்.கே. அழைத்து விஸ்வநாதன் – ராமமூர்த்தி கூட்டணியை உருவாக்கினார்.
இருவரும் இணைந்து தமிழ்த் திரையிசையுலகில் ஒரு புரட்சியைப் படைத்தனர். 1953ல் தொடங்கிய இவர்களது இசையாட்சி பல எல்லைகளைக் கடந்து மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது. பாடல்களின் இசைக் கோர்ப்பு பகுதியில் பெரும் பங்காற்றிய ராமமூர்த்தியின் துணையுடன் பல புதுமைகளைப் புகுத்தினார் விஸ்வநாதன். எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களுக்கு வாசிக்கும் வல்லமை பெற்றிருந்தார் ராமமூர்த்தி.
“எங்கே நிம்மதி” (புதிய பறவை), “கண் போன போக்கிலே கால் போகலாமா ”(பணம் படைத்தவன்), “மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்” (பாசமலர்), “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” (பாக்கியசாலி) போன்ற பாடல்களின் இனிமையான வயலின் இசைக்குக் காரணம் ராமமூர்த்தி என்றால் அது மிகையில்லை. 1963ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இருவருக்கும் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
பதிமூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட எழுநூறு படங்களுக்கு இணைந்து இசையமைத்த இவர்களின் சகாப்தம் 1965 ஆம் ஆண்டு “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தோடு முடிவுக்கு வந்தது. திரையுலகின் அரசியலால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிய நேர்ந்தது.பின்னர் ராமமூர்த்தி தனியாகவும் விஸ்வநாதன் தனியாகவும் இசையமைக்கத் துவங்கினர்.
“நான்” திரைப்படத்துக்கு ராமமூர்த்தி உருவாக்கிய “அம்மனோ சாமியோ “, ‘காகித ஓடம் கடலலை மீது “ (மறக்க முடியுமா), “நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது” (தங்கச் சுரங்கம்) போன்ற பாடல்கள் வெற்றி பெற்றன.
மிகக் குறைவான படங்களுக்கே இசையமைத்த ராமமூர்த்தி இசைத்துறையிலிருந்து விலகி இருந்தார். 1995ல் மீண்டும் இருவரும் இணைந்து “எங்கிருந்தோ வந்தான்” என்ற படத்துக்கு இசையமைத்தனர்.
பல இசைக் காவியங்களைப் படைத்த ராமமூர்த்திக்குச் சத்யபாமா பல்கலைக் கழகம் சார்பாகக் கெளரவ டாக்டர் பட்டமும், தமிழக அரசால் கலைமாமணி பட்டமும், மிகச் சமீபத்தில் “திரையிசை சக்கரவர்த்தி” பட்டமும் வழங்கப்பட்டன.
தமிழ்த் திரையிசையுலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவராக விளங்கிய டி.கே. ராமமூர்த்தியின் ஆத்மா அமைதி பெறப் பனிப்பூக்கள் சார்பாக வேண்டுகிறோம்.
தோற்றம் : 09/17/1930 மறைவு: 04/22/2013
திருச்சியிலுள்ள லால்குடியில் பிறந்த ஜெயராமன் தனது தந்தை கோபாலனிடம் வயலின் கற்றுக் கொண்டார். தனது பன்னிரெண்டாவது வயதிலேயே வயலினிசையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். பின்னர் இவர் செம்பை வைத்தியநாத பாகவதர், செம்பை ஸ்ரீநிவாச ஐயர், ஜி.என் பாலசுப்பிரமணியம், பாலமுரளிகிருஷ்ணா, மகராஜபுரம் சந்தானம் போன்ற தலைசிறந்த பாடகர்களுக்குப் பக்க வாத்தியம் வாசித்துள்ளார்.
‘லால்குடி’ பாணி எனத் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி வயலினிசையில் புதுமைகளைப் புகுத்தினார். தனது மாணவர்களுக்கு இசை பயில்விக்கும் போது தானும் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது என அடக்கத்துடன் பேசும் தன்மை கொண்டவர் ஜெயராமன். வயலின் மட்டுமல்லாது பல இசைக்கருவிகளின் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்த ஜெயராமன் சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார்.
தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லாங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீணா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
லண்டன், எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இந்தியா மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா, மணிலா, பெல்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவரது மகன் லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் மகள் லால்குடி விஜயலட்சுமி இருவரும், இவரைப்போலவே சிறந்த வயலின் வாசிப்பாளர்களாக உள்ளனர்.
லால்குடி ஜெயராமனின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு 1972ல் பத்மஸ்ரீ விருதையும், 2001ல் பத்ம பூஷன் விருதையும் வழங்கிக் கௌரவித்தது.
அவர் இசையமைத்த சிருங்காரம் எனும் தமிழ் நாடகப் படத்திற்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். தவிரச் சங்கீத நாடக அகாடமி விருதையும், சில வெளிநாட்டு இசை அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கர்நாடக இசை மட்டுமின்றி மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி, கஜல் போன்ற இசைகளிலும் நாட்டமுடையவர் இவர். பாரதியாரின் படைப்புகளில் அதீத ஆர்வம் காட்டியவர்.
பல இசை மேதைகளுக்குப் பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்த இவர் கடந்த பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்.இவரது இழப்பு கர்நாடக இசைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
– ரவிக்குமார்.
கட்டுரை அருமை. தமிழ்த் திரையிசை மேதைகள் நால்வர் பேசி வைத்துக் கொண்டார்போல் சில தின இடைவெளியில் நிலவுலகு நீத்தது மிகவும் வருந்தத் தக்க விடயம். புதிதாகத் திறமையாளர்கள் வருவது உறுதி என்றாலும், ஒரு சில வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வது இயலாது என்பது நிதர்சனம்.
கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கும் அதே உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்’னில் ஒருமுறை P.B.S அவர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன அருமையான அனுபவம்!! மிகப் பெரிய மேதை, பண்பாளர், படிப்பாளர், பேசிக் கொண்டிருந்த அரை மணிநேரத்தில் எத்தனை எதுகை மோனையுடன் கூடிய கவிதை வடிவ வெளிப்பாடுகள், தொடர்ந்து நகைச்சுவை உணர்வு ததும்பும் வசீகரப் பேச்சு, அசாத்திய ஞாபக சக்தி.. பேசிக் கொண்டே அவரின் எழுத்தும் தொடர்ந்தது. அவரை விட்டு எழுந்து செல்லவோ, அவர் கண்களை விட்டு அங்கே, இங்கே பார்க்கவோ, இமைக்கவோ கூடத் தோன்றவில்லை. அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.. எனது தொலைபேசி எண்ணையும் அவரே கேட்டு வாங்கிக் கொண்டார், என்னைச் சந்தித்த மறு மாதத்தில் அமெரிக்கா வருவதாகத் திட்டமிருந்ததால், என்னைத் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறினார். தொலைபேசி எண்ணைப் பார்த்து அதற்கொரு எண் சோதிடமும் சொன்னார்.
அருமையான அனுபவம். இறந்து விட்டார் என மனம் ஏற்க மறுக்கிறது. அவரின் காந்தக் குரல் உலகில் கடைசித் தமிழர் (கன்னடர், தெலுங்கர் என்றும் சொல்லலாம்) உள்ள அளவும் ஒலித்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.