மரியாதைச் செலவு
சனிக் கிழமை இரவு 9 மணி… பாரி முனையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம். தோளில் மாட்டிய ஒரு லெதர் பாக் நழுவி விழாமல் நொடிக்கு நூறு முறை சரி செய்து கொண்டு, இடது கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு இரண்டாவதாக ஆர்டர் செய்த முட்டைத் தோசையின் வருகைக்காக கையேந்தி பவனின் முன் நின்று கொண்டிருந்தான் நம் நாயகன் கணேஷ்… சொந்த ஊரில் அவன் பெயர் கணேசன்.…..
முட்டைத் தோசைக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்….. கணேஷ் வீட்டில் படு ஸ்ட்ரிக்ட் வெஜிட்டேரியன்ஸ்.. முட்டை கூட சாப்பிட அனுமதி இல்லை.. ஆனால் கணேஷின் நண்பர்களில் பலர் பறப்பதில் ஏரோப்ளேனையும், மிதப்பதில் கப்பலையும் விட்டு அனைத்தையும் சாப்பிடுபவர்கள்.. மெதுவாக கணேஷும் முட்டை மட்டும் சாப்பிட பழகிக்கொண்டான். நண்பன் மணி சோலையாண்டவர் ஓட்டலிலிருந்து வாங்கி வருவான்.. வீட்டுக்கெதிரிலுள்ள ஊரணியின் ஆலவடியில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக அமர்ந்து கணேசன், பிரகாஷ், மணி, பாலா மற்றும் வைரவன் அனைவரும் இரண்டு முட்டை போட்ட ஆம்லெட்டை பகிர்ந்துண்பர்… கணேசன் தப்பித்தவறி ஒரு நான்-வெஜ் ஓட்டலருகில் நின்றிருந்தானெனில் வீட்டுக்கு விஷயம் விஷம் போல் பரவும்.. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு…
ஹாஃப் யேர்லி எக்ஸாம்ஸ் முடிந்து ஸ்கூல்களுக்கு வெகேஷன் ஸ்டார்ட் ஆகி விட்ட நிலை… டிக்கெட் முன்கூட்டியே புக் செய்யாமல் எப்படியாவது ஒரு டிக்கெட் அட்ஜஸ்ட் செய்யலாமென்ற தைரியத்தில் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டான்…. காரைக்குடி செல்லும் பல பேருந்துகளைச் சுற்றி வந்து, பல நடத்துனர்களிடமும் “பேசி”, கடைசியாக ஒரு “நல்ல” மனிதரைப் பிடித்து, அவர் இருக்கையின் ஒரு பாதியைக் கொடுக்க ஒரு விலை நிர்ணயித்து அவர் சம்மதித்திருந்தார்…… “தம்பி, இன்னும் அரை மணி நேரத்துல வண்டி பொரப்புட்டுரும், இங்கயே காத்திருக்கனும், என்ன…” என்று காசையும் வாங்கிக் கொண்டு ஒரு மிரட்டு மிரட்டி விட்டு, அவர் தம்மடிக்க சென்று விட்டார்…
……..
……..
புதிதாகச் சேர்ந்த வேலை.. பர்மிஷன் போட்டால் என்ன நடக்குமோ என்ற பயம்.. அறுபது வயதை நெருங்கும் கற்கால மனிதர் அந்த மேனேஜர்……. அவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்று ஆஃபீஸ் முடிந்து அனைவரும் சென்ற பின்னரும், அந்த வாரத்தின் வேலைகளையெல்லாம் முடித்த பிறகும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்…. அவர் வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பும் வரை காத்திருந்து, கிளம்பிய மறு நிமிடம் ஆஃபீஸை விட்டு வேளியே ஓடி பஸ் ஸ்டாப்பிற்கு விரைந்தான்…. அவசர அவசரமாய் பேருந்து பிடித்து பாலவாக்கத்திலிருந்து பாரிமுனை படிக்கட்டிலேயே தொங்கிக் கொண்டு வருவதற்குள் தாவு தீர்ந்து, பசி அதிகரித்து விட்டிருந்தது….
மேனேஜரின் மேலிருந்த அபிமானத்திற்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருந்தது. ஒரு பத்து தினங்களுக்கு முன் அதே பாலவாக்கம் பேருந்து நிறுத்தத்தில்..… பிடித்தம் போக கையில் வந்த ஒரு ஆயிரத்து இருநூறு ரூபாய் முதல் மாதச் சம்பளத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வழக்கம்போல வந்த பேருந்தில் தொத்தி ஃபுட் போர்ட் அடிக்க, அடுத்த பஸ் ஸ்டாப்பிற்குள் பணம் முழுதும் காணாமற் போய் விட்டது.. இவனுக்கு 4 வருட இன்ஜினியரிங், பல அப்ளிகேஷன்ஸ், ஒரு மாத கடின உழைப்பு. இன்னொருவனுக்கு ஒரு அரை ப்ளேட் மற்றும் அரை மணி நேர கண்கொத்திப் பாம்பு போன்ற கவனம். யார் புத்திசாலி? துக்கம் சொல்லி மாளவில்லை. கூடவே பயணம் செய்த, மிகக்குறுகிய காலத்துற்குள்ளேயே நல்ல நண்பராகிவிட்டிருந்த மிகச்சிறந்த மனிதர் பாலு மறுதினம் மேலாளரிடம் விஷயத்தை சொல்ல, அவர் கணேஷை ரூமுக்கு அழைத்தார். ஒரு அரை மணி நேர அட்வைஸுடன் இன்னொரு ஆயிரத்தி இருநூறு ரூபாயைக் கொடுக்குமாறு மேனேஜர் கேஷியரிடம் பணித்தார். அட்வைஸ் செய்த அரை மணி முழுக்க அவரை மனதில் திட்டித் தீர்த்த கணேஷிற்கு அந்த கற்கால மனிதரின் கனிவான மனம் கடைசியில் விளங்கிற்று. அன்றிலிருந்து அவர் மேல் ஒரு அளவு கடந்த மரியாதை….
மேன்சன் வாடகை, வாரச்செலவு மற்றும் பேருந்துக்கான கட்டணம் போன்ற செலவுகள் முடிந்து மீதியிருந்தது நூற்றைம்பது ரூபாய். அனுபவம் தந்த பாடத்தில் அதனைப் பத்திரமாக ஒரு ரப்பர் பேண்டில் சுற்றி அவனின் ஃப்ரென்ச்சியின் எலாஸ்டிக்கின் உதவியுடன் சைடில் டைட்டாக வைத்துக் கொண்டிருந்தான். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதனைத் தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டிருந்தான். அன்னபூர்ணா, ராவ் கடை, சிவம் தியேட்டர் செலவுகளுக்கு வேண்டுமே…..
வார்னிங் கொடுத்து விட்டு தம்மடிக்கப் போன நடத்துனர் சீக்கிரமே வந்து வண்டியை எடுத்துவிடுவாரோ என்ற பயத்தில், ”கொஞ்சம் சீக்கிரம்பா”….. கையேந்தி பவனில் தோசை போடும் தன்னை விட 30 வருடம் வயதில் மூத்த “மாஸ்டரை” கணேஷ் துரிதப் படுத்துகிறான்.
சிங்காரச் சென்னையில் அனைவரும் அழைக்கப்படுவது வாப்பா போப்பா…. மொழியில் அனைத்து வயதினற்கும் மரியாதை செலுத்தும் தென் தமிழகத்திலிருந்து வந்த அன்றைய கணேசனுக்கு இந்த “விளி” முறைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்வதற்கு ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. போகப் போக பழகிவிட்டது.. இப்பொழுது அவனும் சென்னை வாசியாகிருந்தான்..
ஆயிற்று, கணேஷ் சென்னைக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்து இருந்தன.. நான்கு வருடங்களுக்கு முன் கிராமத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து, பொறியியல் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தான். நண்பர்கள் சிலருடன் ட்ரிப்ளிகேனில் லாட்ஜ் ஒன்றில் ஜாகை.. செலவைக் கட்டுப்படுத்த சுயம்பாகம்.. பார்த்த அனைத்தும் புதுமை.. நடு லாட்ஜில் நாற்பது பேருக்கு பொதுவாக இருந்த நாற்றமடிக்கும் இரண்டு பாத் ரூம், நாடார் கடையில் பொட்டலத்திற்கு பதிலாகக் கொடுக்கப்படும் கேரி பாக், அறுபது பேர் கொள்ளும் பேருந்தில் நூறு பேர் பயணஞ்செய்யும் காலை நேரம், கூட்ட நெரிசலில் அதிகாலையில் நடுத்தெருவில் லஜ்ஜையெதுவுமின்றி பசுவின் மடியில் பால் கறக்கும் ஆநிறையன்..
கல்லூரிக்குள் நுழைந்தால் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், தைரியமாக காலேஜ் கேம்பஸிற்குள் தம்மடிக்கும் மாணவர்கள், எதற்கும் கவலைப்படாத அசாதரணமான மனிதர்கள்.. கல்லூரிக்கு கை வீசிக்கொண்டு ஒரு நோட் புக் கூட இல்லாமல் வரும் சில மாணவர்கள், பாடம் நடை பெறும்பொழுது நோட்ஸ் எடுக்காத வினோதம்… எல்லாம் பழகுவதற்கு சில காலம் ஆகிப்போனது..… எப்படியோ படித்து அரியர்ஸ் வைத்து, மனப்பாடம் செய்து ஒரு வழியாக பொறியியல் முடித்தாகி விட்டது.. புதன்கிழமை ஹிண்டு பேப்பர் ஆப்பர்ச்சூனிடிஸ் பார்த்து, அப்ளை செய்து, அப்ளை செய்து, கடைசியாய் சற்றுப் பொருத்தமான ஒரு வேலையும் கிடைத்தாகி விட்டது…
வேலை கிடைத்த மறு நிமிடம், தாய் தந்தையிடம் சொல்வதற்கு முன் நண்பர்கள் பிரகாஷ், பாலா, வைரவன் மற்றும் மணி அவர்களுக்கு மட்டும் ஆஃபீஸ் வாசலிலிருந்த STD பூத்திலிருந்து ஃபோன்…. அப்பாய்ண்ட்மெண்ட் லெட்டரிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களும் வாசித்துக் காட்டியாகிவிட்டது.. அது மட்டுமல்ல, கணேஷ் சத்தியம் செய்திருந்தான் நண்பர்கள் நால்வருக்கும்… முதல் மாதச் சம்பளத்தில் ஐந்து நண்பர்களும் சேர்ந்து காரைக்குடி அன்னபூர்ணாவிலொரு நல்ல சாப்பாடு, ராவ் கடைப் பால் மற்றும் சிவம் தியேட்டரில் ஒரு சினிமா… பொதுவாக பிரகாஷ்தான் இவைகளை ஸ்பான்ஸர் செய்வான். பிரகாஷின் தாத்தா ஊரில் பெரும்புள்ளி, இவன் செல்லப்பேரன் அதனால் அவனிடம் காசு புரளும் எப்போதும். பிரகாஷுக்கு இது நன்றிக் கடன் செலுத்தும் நேரம் மட்டுமல்ல, பல முறை அவன் பில்லுக்கு பணம் செலுத்தும் தோரணையைப் பார்த்திருக்கிறான், தானும் ஒரு நாள் அந்தத் தோரணையில் பில் மற்றும் டிப்ஸ் கொடுக்கவேண்டுமென்ற ஆசை…. அவனைப் பொறுத்தவரை அது ஒரு மரியாதைச் செலவு…
அந்த ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த சனிக் கிழமை ஊருக்குக் கிளம்பி வருதாக STD செய்து நண்பர்களுக்குச் செவ்வாய்க் கிழமை மேனேஜரிடமிருந்து இரண்டாவது முறை சம்பளம் வாங்கியவுடனேயே சொல்லி விட்டிருந்தான் கணேஷ்…
…..
……
தூரத்தில் இலவசமான இரவுச் சாப்பாடு முடித்து, ஒரு பீடி பிடித்து முடித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் வண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். கணேஷ் அவசர அவசரமாக கை கழுவி விட்டு, அங்கிருந்த அலுமினியத்தொட்டி ஒன்றில் கயிற்றில் கட்டிப் போடப்பட்டிருந்த அலுமினிய டம்ளரை எடுத்து ஒரு வாய் நீர் குடித்துக் கொண்டே கல்லாவிலிருந்தவரை அவசரப்படுத்தி சில்லரை வாங்கிக்கொண்டான். தோளிலிருந்த லெதர் பேக்கை பிடித்துக் கொண்டே பேருந்து நோக்கி ஓடத்தொடங்கினான்.. ஓடும் வேகத்தில் காலில் போட்டிருந்த பழைய செருப்பின் காதறுந்தது.. ”இது வேற எளவு” என்று புலம்பிக் கொண்டே ஒரு செருப்பு மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தான்….
ஒரு வழியாகப் பேருந்தை அடைந்தான். ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்துக் கருகிலே நின்று கொண்டு பல் குத்திக் கொண்டே விழுப்புரம் நிறுத்தத்தில் வழக்கமாகப் பார்க்கும் லட்சுமி குறித்துப் பேசத்தொடங்கியிருந்தனர். கணேஷுக்கு அலுமினிய டம்ளரில் பருகிய தண்ணீர் அடிவயிற்றில் முட்டிக் கொண்டு அறிவிப்பு செய்யலாயிற்று…. நடத்துனரைப் பார்த்து ”அண்ணே… அண்ணே…” என்று இவன் அழைக்க, அவர் இவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை… சில அழைப்புகளுக்குப் பிறகு அவனிடம் திரும்பி ஒரு பதரைப் பார்ப்பது போல் பார்த்தார் நடத்துனர்.
“ஒண்ணுக்குப் போய்ட்டு வர டைம் இருக்காண்ணே?”
”சரியான சாவுக்கிராக்கிய்யா நீ…. கடைசி நேரத்தில ஒண்ணுக்கு, ரெண்டுக்குன்னுகிட்டு… சீக்கிரம், சீக்கிரம்…”…
இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தன் அரைஞாண் கயிற்றிலிருந்த (அருணாக் கயிறு) ஊக்கு ஒன்றை எடுத்து காது கிழிந்த செறுப்பை நடக்குமளவுக்குச் சரி செய்திருந்தான்… நடத்துனரின் அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், பேருந்து நிலையத்தின் இன்னொரு கோடியிலிருந்த பொதுக் கழிவறை நோக்கி ஒடத் தொடங்கினான்.. இவனைப் போன்ற பேருந்துக்குச் செல்லும் அவசரத்திலோ, இல்லை 25 காசு கொடுப்பதற்கு மனதோ, வசதியோ இல்லாத காரணத்தாலோ, சில திருவாளர் பொது ஜனங்கள் சுலாப் கழிப்பிடத்திற்கு சுலபமாகச் செல்ல இயலாமல் வழியெல்லாம் நறுமணம் கமழ வைத்திருந்தனர்… உள் வாங்கிய மூச்சை பல நொடிகளுக்கு வெளிவிடாமல் அடைத்துக் கொண்டு கடமையை முடித்து காற்று வேகத்தில் வெளிவந்தான் கணேஷ்….
இப்பொழுது ஓட்டுனர் வண்டியிலமர்ந்து இன்ஜினை ஆன் செய்து உறுமிக்கொண்டிருந்தார்… கணேஷுக்குத் திரும்பவும் ஒரு ஓட்டம்.. “எவ்ளோ நேரம்பா”… ஏதோ கொலைக் குற்றம் செய்தவனைப் பார்ப்பதுபோல் படியேறி வரும் கணேஷைப் பார்த்து ஓட்டுனர் சீறினார். அவருக்கு பதிலேதும் சொல்லாமல் தனக்காக நடத்துனர் “விற்ற” இருக்கையை நோக்கி நடந்தான். நடத்துனர் “சிட்டியத் தாண்டுர வரைக்கும் பின்னால போய் எங்கனாச்சும் குந்திக்க, தாம்பரத்துக்கு அப்பால கூப்பிடுறேன்” கணேஷ் இதனை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு சீட்டாக நகர்ந்து கடைசியிலுள்ள பென்ச் ரோவில் ஏற்கனவே அமர்ந்துள்ள 6 பேருக்கு மத்தியில், தனது 10% உடலைப் பொருத்திக் “குந்தி”க் கொண்டான்… ஒவ்வொரு சிட்டி லிமிட் தாண்டும் பொழுதும் 10% குந்தல்தானென்று அப்போது அவனுக்கு விளங்கியிருக்க நியாயமில்லை…
தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை… ஒவ்வொரு “சிட்டி” யைக் கடக்கும் பொழுதும் பேருந்துக்கு முன்னும் பின்னும் மாறி மாறி உட்கார்ந்து கொண்டு ஒரு வழியாக பயணத்தை முடித்து, தன் கிராமத்தின் பஸ் ஸ்டாண்டை அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கண்டு பிடித்து இறங்கி விட்டான் கணேஷ். ஷோல்டர் பேக்கை முதுகுக்குப் பின் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினான். உடம்பு வலி, தூக்கமின்மை, காதறுந்த செருப்பு, காலை நேரக் குளிர் ஆகியவற்றின் தாக்கம். அங்கொன்றும் இங்கொன்றுமாக திறந்திருந்த சில டீக்கடைகளில் தெரிந்த பெரிசுகளை மரியாதையுடன் நலம் விசாரித்துக் கொண்டே நடந்து வீடு சேர்ந்தான்..
வாசல் தெளித்துக் கொண்டிருந்த அம்மா, வாடா கணேசா என்று பாசத்துடன் ஓடி வந்தார்… நல்லா இருக்கியாப்பா? பிரயாணமெல்லாம் சொகமா இருந்துச்சா? என்று வினவ, நல்லாருந்துச்சும்மா என்று பொய் சொல்லி விட்டு, நீ எப்டிம்மா இருக்க, பதிலை எதிர்பார்க்காமல் கேள்வி கேட்டுக்கொண்டே, அம்மா கையில் ஷோல்டர் பேக்கை கொடுத்து விட்டு உள்ளே சென்றான்….
உடைகளைக் களைந்து, லுங்கிக்குள் மாறிக்கொண்டே ”பங்காளிங்க வந்தாங்களாம்மா”….. பங்காளிங்க என்றால் அந்த நால்வரென்று அம்மாவுக்குத் தெரியும்… ”பதினோரு மணிக்கு வரேன்னு சொன்னானுங்கடா.. எங்க போரதாயிருந்தாலும், சாப்ட்டுப் போயிரு, சொல்லிட்டேன். அம்மா இட்லிக்கு ஊரப்போட்ருக்கேண்டா.. உனக்குப் புடிச்ச வெங்காய சாம்பாரு, தக்காளிச்சட்னி…”
”அம்மா, நாங்க காரக்குடிக்கி போரோம்மா, ராத்ரியாயிரும் வர்ரதுக்கு அங்கயே சாப்டுக்குறோம்.”.
”ஏண்டா.. மெட்ராஸுல தினத்துக்கும் ஓட்டல்லயோ இல்ல சொந்த சமயலையோ சாப்டிரியேடா, அம்மா கைல இட்லிடா… ”
”பரவால்லம்மா.. ”
அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல், அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் தம்பியின் அருகில் பனை ஓலைப் பாயை தரையில் போட்டு படுத்துக்கொள்ளச் சென்றான்..
”அம்மா ஒரு பத்தரைக்கு எளுப்பி விட்ரு, பங்காளிங்க வர்ரதுக்குள்ள குளிச்சி ரெடியாகனும்…”…. பதிலுக்குக் காத்திராமல் அம்மா எழுப்பி விடுவாளென்ற நம்பிக்கையில் உறங்கிப்போனான்…
ஒம்பதரை மணி… பதறியடித்து அம்மா கணேசனைத் தட்டி எழுப்புகிறாள்… முனகிக் கொண்டே எழுந்த கணேசன் சுவற்றின் மூலையில் வருஷக்கணக்காக தொங்கும் பளபளப்பிழந்த பெண்டுலம் ஆடும் கடிகாரத்தில் மணி 9.30 எனக் காட்டுவதைப் பார்க்கிறான்.. அம்மா, ஒம்பதரைதாம்மா ஆகுது, சொல்லிக்கொண்டே திரும்பி முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு தூக்கத்தைத் தொடர எத்தனித்தான் கணேசன்….
கணேசா, கணேசா…. அம்மாவின் குரலில் இருந்த அழுகை பாதித் தூக்கத்திலிருந்த கணேசனுக்குத் தெளிவாகக் கேட்டது… பதற்றத்துடன் எழுந்தான்… என்னாச்சும்மா? அம்மாவின் முகம் பார்க்க, அம்மாவின் அழுகை பன்மடங்கு அதிகரித்தது…. அழுகைக்கு நடுவே அம்மா என்னவோ சொல்கிறாள், கணேசனுக்குப் புரியவில்லை….
”என்னம்மா சொல்ற, என்னாச்சு….”
முந்தானையில் கண்ணீரையும் மூக்கையும் சுத்தம் செய்து கொண்டே, “சோலா போய்ட்டாளாண்டா….”
சோலா…. என்ன உறவென்று அறிமுகப்படுத்துவது?
அம்மா அப்பாவை கல்யாணம் முடித்து, ஆட்கள் புடை சூழ செல்வந்தர் வில்லேஜ் கர்ணமான தாத்தா வீட்டிலிருந்து வெளியேறி ஒரு ஆசிரியரின் மனைவியாக யாருமேயில்லாத வீட்டிற்கு தனிக்குடித்தனம் வந்த நேரம். வீட்டு வேலைக்காக பக்கத்து வீட்டு மாமி சிபாரிசில் வேலைக்குச் சேர்ந்த அம்மையார். அம்மாவைவிட ஒரு இருபது வயது பெரியவள்.
ஆனால் வேலைக்காரி என்று எப்படிக் கூறுவது?
அனைவருக்கும் கணேசனான அவனோ, சோலாவுக்கு மட்டும் “கணேசரு”
கணேசரின் சிறு வயதில் மலஜலம் சுத்தம் செய்வதில் தொடங்கி, குளிப்பாட்டி, தலை சீவி, உடை அணிவித்து, சாப்பாடூட்டி, கை பிடித்து நடத்திச் சென்று பள்ளிக்கு விட்டு வந்து, மாலையில் பள்ளியிலிருந்து அழைத்து வந்து, முகம் கழுவி, உடை மாற்றி, சிற்றுண்டி வழங்கி….. பட்டியலின் நீளம் மிக அதிகம்…
நடந்து செல்கையில், குளிப்பாட்டுகையில், மற்றும் நேரங்கிடைக்கியிலெல்லாம் பல கதைகள்.. மதுரை வீரன் தொடங்கி, சின்ன மலை தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் வரை வட்டாரம் சுற்றிய தலைவர்களின் கதைகளை செவிவழிச் செய்தியாக அவள் கேட்டறிந்தவற்றை நீதி போதனையாய்க் கூறுவாள். தசரதனின் இறப்பை நூறாவது முறையாகக் கேட்கையிலும் கண்ணீர் விடுவான் கணேசன்.
சிறுவயதில் கைப் பிடித்து அனைத்துக் கோயில் திருவிழாக்களுக்கும் அழைத்துச் செல்வாள். மிட்டாயில் செய்த கைக் கடிகாரம், 5 பைசா பஞ்சு மிட்டாய், பலூன் என அவளின் சக்திக்கெட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுப்பாள். பொங்கல் மற்றும் தீபாவளி வரும்பொழுது அவள் இவர்களுக்கு அளிக்கும் பரிசு; நான்கு வீடு சென்று மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து சம்பாதித்த காசைத் தன் சுருக்குப் பையில் கை விட்டுத்துளாவி….. கணேசனுக்கு 25 காசு அவன் தம்பிக்கு 50 காசு என வாரி வழங்குவாள்.. தம்பிக்கு அதிகம் வயது குறைவென்பதாலோ, பாசமதிகமென்பதாலோ…..
அம்மாவின் கல்யாணம் முடிந்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன.. சோலாவின் பணி நேற்று வரை தொடர்ந்துள்ளது.. சோலா, அம்மாவுக்கு ஒரு அம்மா போலத்தான்; சுக துக்கங்கள், பிள்ளைப் பிறப்புக்கள், பள்ளிப் படிப்பு, வீட்டு வேலை, வரவு செலவு விபரங்கள், வறுமைக் கொடுமைகள்… சோலாவுக்குத் தெரியாததில்லை, அவள் உதவி செய்ய முயற்சிக்காததில்லை – கணேசனின் என்ஜினியரிங் படிப்பில் வரும் சந்தேகங்கள் தவிர….
20 வயது கணேசன் தேம்பித் தேம்பி அழுகிறான், பின்னாளின் தன்னுடைய இழப்பிற்கு இவ்வளவு அழுவானா என்று அம்மா சந்தேகம் கொள்ளுமளவுக்கு….
”கணேசா, போய் ஒரு புடவை வாங்கிட்டு வந்துருடா.. சோலாவுக்கு கடசி மரியாத….. நாம பண்ணனும்…” மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அழுகையின் மத்தியிலே அம்மாவின் ஆணை…
தன் கிராமத்திலுள்ள ஒரே ஜவுளிக் கடை ஹமீதியா ஜவுளிக்கடை…… ”அண்ணே அந்த கண்டாங்கிச் சீல என்ன வெல?”… ”150 ரூபா தம்பி”.. அன்னபூர்ணா, ராவ் கடை, சிவம் தியேட்டர் எதுவுமில்லை அவன் நினைவி்ல்.
அம்மாவும் கணேசனும் சோலாவின் குடிசையில்…. ”கோவில் சாமி உலா வர்ர தெருவு, பொணத்த ரொம்ப நேரம் வெச்சிருக்கக் கூடாதுப்பா”, ஊர்ப் பெரியவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.. தான் குழந்தையில் எட்டி உதைத்ததை பாசத்துடன் உள்வாங்கிய உருவம் குறுகி மூன்றடியாய்ப் பனை ஓலைப் பாடை மேல் படுத்திருந்தது பார்க்கத் துணிவில்லாத கணேசன் அம்மாவை அணைத்துக் கொண்டு நின்றிருந்தான். அடக்க முடியாத அழுகை…..
சடங்குகளனைத்தும் துரிதமாக நடந்து கொண்டிருக்க, ”கோடிச்சீல யாருப்பா போடுரா” பெரியவரொருவர் கேட்டுக்கொண்டிருக்க, எங்கோயிருந்து ஒரு குரல் – ”கணேசன் சீல வாங்கியாந்திருக்காம்பா.. அவனத்தான் கெளவி பேரம்மாதிரி பாத்துக்குச்சே”.
நடுங்கும் கைகளுடன் தனக்கு சிறு வயதில் உடை மாற்றிய சோலாவிற்கு கணேசன் தனது முதல் சம்பளத்தில் வாங்கிய சேலையைப் போர்த்துகிறான்…
மரியாதைச் செலவு. உண்மையான அர்த்தம் கணேசனுக்கு விளங்கியது….
– மது வெங்கடராஜன்