\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்

sangam-eelam-madurai_520x346தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதே வேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) என்றும் பொருள்படும்.

ஈழத்து’ தமிழ் இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாகக் காணப்படுகின்றது. ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் சங்க கால இலக்கியத்தில் வரும் ஒரு புலவர் ஆவார். இப்புலவர் சங்க இலக்கியங்களிலே நான்கு வகைப் பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

குறுந்தொகை 343, அகம் 88 – ஈழத்துப் பூதந்தேவன்
நற்றிணை 366 – ஈழத்துப் பூதந்தேவனார்
குறுந்தொகை 189, 360 – மதுரை ஈழத்துப் பூதந்தேவன்
அகம் 231, 307 – மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்

இவ்வாறு குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை நானூறு ஆகிய நூல்களில் வரும் ஏழு செய்யுள்களில் இருந்து ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்களினை அறியமுடிகின்ற போதிலும் இவர் ஈழத்தவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இந்நூல்களில் இடம்பெறவில்லை. ‘ஈழத்து’ என்ற அடைமொழியை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ஈழநாட்டினராக இருக்கலாம் எனக் கருதுவோரும் உள்ளனர். உண்மையில் இவர் ஈழ நாட்டினர் தானா என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எவையும் உள்ளனவா என்று தேட வேண்டியது அவசியமாகின்றது.

‘ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலும், ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலுமாக அழைக்கப்பட்ட இவர் இலங்கையர்தானா என்பதற்கான ஆதாரங்களினைத் தேடப் பலர் முற்பட்டுள்ளனர். சிலர் ஊகங்களின் அடிப்படையில் சில தரவுகளை முன்வைத்தனர். வேறுசிலர் ‘ஈழம்’ என்ற அடைமொழியின் அடிப்படையில் வரலாற்று ரீதியான ஆதாரங்களைத் தேட முற்பட்டு, இலங்கைக்கு வழங்கிவரும் பெயர்களில் இதுவும் ஒன்றாகையால் இவர் ஈழத்தவரே எனச் சுட்டிக் காட்டினர்.

இவர் ஈழத்தில் இருந்து மதுரையில் சென்று வசித்த காரணத்தினால் காலப்போக்கில் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. “இவர் ஈழ நாட்டில் நின்று மதுரையில் வந்து தங்கிய பூதன் மகன் தேவன் எனப்படுவார்”(3) என்று நற்றிணை நானூறுக்கு தெளிவுரை எழுதிய அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து கூறுகின்ற போது ஏடெழுதுவோருடைய பிழையினால் ‘ஏற்றத்துப் பூதந்தேவனார்’ எனவும் குறிப்புக்கள் காணப்படுவதாகவும் ஒரு சான்றினைத் தருகின்றார்.

மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் குறிஞ்சி, பாலைத் திணைகளுக்கான ஏழு அகப் பாடல்களைப் பாடியிருக்க, பூதந்தேவனார் என்ற புலவர் ஒருவர் மருதத் திணையைச் சிறப்பித்துப் பாடியிருப்பது நோக்கத்தக்கது. குறுந்தொகை 285, நற்றிணை 80 ஆகிய இரு செய்யுள்களும் இவரால் பாடப்பட்டிருக்கின்றன. மருதத் திணையைச் சிறப்பித்துப்பாடி, அகத்திணையிலே களவு நிகழ்ந்திருப்பதைக் கூறுவதாக இவருடைய பாடல்கள் காணப்பட, மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரோ “வாடை வீசும் குளிர் காலத்திலே தலைவியைப் பிரிந்து செல்வோன் மடமையுடையவன்” என்ற பொருள் பட குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியுள்ளார். எனவே பாடல்களைத் திணை அடிப்படையில் நோக்குகின்ற போது இருவரும் வெவ்வேறு புலவர்கள் எனக் கருத இடமுண்டாயினும், மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரும் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவரே எனக் கொள்ளும் நாம் ‘ஈழத்து’ அல்லது ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழி இல்லாத காரணத்தினால் இவரை மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் அல்லர் என இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஈழத்துப் பூதந்தேவனார் கடைச் சங்கப் புலவராக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுவுடையதாக உள்ளது. “பசும்பூட் பாண்டியனை” பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இவர் பாடிய (அகம் 231) பாடல் ஒன்றின் மூலம் இவருடைய காலம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. பசும்பூட் பாண்டியனை பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர் முதலியோரும் பாடியிருக்கின்றனர். எனவே இவர்கள் எல்லோரும் சமகாலத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது. எனினும் பசும்பூட் பாண்டியனின் காலத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்துப் பூதந்தேவனாரின் காலத்தை வரையறை செய்வதென்பதும் கடினமானதே. எது எப்படியாக இருப்பினும் இவர் பசும்பூட் பாண்டியனுக்குப் பிற்பட்டவர் அல்லது சம காலத்தவர் என்பது புலனாகின்றது. அதேபோல் ‘பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் ஆகியோர் சமகாலத்தவர் என்று கூறுவதும் பொருத்தமானதல்ல’(4)

ஈழ நாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத் தக்கது. இதே வேளையில் சங்கப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழ நாட்டைச் சேர்ந்தவர் எனவும் மன்னாரில் முசலி (முரஞ்சி) என்ற கிராமத்தவர்(5) எனவும் ‘ஈழ மண்டலப் புலவர் சரிதம்’ என்ற நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வணிக நிலைத் தொடர்பினை நாம் பட்டிணப்பாலையில் இருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது. நீண்ட காலம் தொட்டு ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் இடையறாத் தொடர்பு இருந்து வருவதனை அவ்வப்போது வரலாற்று, புவியியல் ஆய்வுகள் நிறுவியுள்ளமையினையும் மறந்துவிடக் கூடாது. எனவே நீண்ட காலமாக வணிக, பண்பாட்டு, மொழித் தொடர்புகளினால் பிணைக்கப்பட்ட தமிழகத்துக்கு இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவர் சென்று வாழ்வதென்பது இயலாத ஒன்றல்ல. அவ்வாறே ஈழத்துப் பூதந்தேவனாரும் மதுரையில் சென்று வசித்திருக்க முடியும். நிறுவன ரீதியாக (சங்கம்) புலவர்களை அனுசரித்துப் போற்றிய மதுரையில் இருந்து கொண்டு தனது இலக்கியப் பணியினை மேற்கொண்டிருக்கலாம் எனப் பல தளங்களினூடே இவரைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்க முடிகின்றது. இவ்வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவதே சிறப்பானதாக அமையும்.

அடிக்குறிப்பு

1. பட்டினப்பாலை, வரி, 190-192
2. கழகத் தமிழ் அகராதி, தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம், பக்144
3.நாராயணசாமி ஐயர், நற்றிணை நானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, பக் 62
4.முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், நாவலர் அச்சுக் கூடம், பக் 2
5. மேலது, பக் 2
6.விமல் சுவாமிநாதன், புராதன சிங்கள இலக்கியங்களில் தமிழின் செல்வாக்கு (கட்டுரை)
7. மேலது

– காண்டீபன் இராசையா.

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Sathiamoorthy says:

    மிகவும் அருமையாக அமைந்துள்ளது இக்கட்டுரை.நன்றி காண்டீபன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad