\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுரையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

– பொய்யாமொழிப் புலவன்

Abdul_kalam_MN_620x415இந்தக் குறளுக்கு, இன்றைக்கு வாழும் மனிதர்களில் எவரேனும் ஒருவரை உதாரணமாகச் சொல்லலாம் என்றால் இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைவிட பொருத்தமான இன்னொருவர் இருக்க இயலுமோ?

கனிவான உருவம், களையான முகம், கூர்மையான கண்கள், குழந்தைச் சிரிப்பு, நெற்றியில் புரளும் கவனமாக வளைத்து விட்ட வெளிர் முடி, எளிமையும் சிறப்பையும் ஒருங்கே காட்டும் அழகான உடை, 82 அகவை தளர்த்தியிருந்தாலும் கம்பீரம் சற்றும் குறையாத நடை, உண்மையும் நேர்மையும் தந்து விட்ட ஒப்பிலாத ஒளிவட்டம் – இந்தியத் திருநாட்டின் முன்னாளைய அதிபர், அறிவியலறிஞர், பாரத ரத்னா, டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அரங்கத்தில் நுழைந்த நொடி என்னுள் பாய்ந்து மயிர்க்கூச்செறியச் செய்ததை விவரிக்க வார்த்தையில்லை.

கடந்த வியாழக்கிழமை, மே 23ஆம் திகதி, மினசோட்டா இந்தியர் சங்கமும், மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் அதனுடன் கூடிய தமிழ்ப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சி இது. சிகாகோ வந்து, அங்கிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோ செல்லவிருக்கிறார் டாக்டர் கலாம் என்று அறிந்தவுடன் அவரை நம்மூருக்கு அழைத்து வர வேண்டும் என்ற தீவிரமான முயற்சியில் இறங்கி, பல இடையூறுகளுக்கிடையே செய்து முடித்திருந்தனர். பல தன்னார்வத் தொண்டர்கள், இரவு பகலாக உழைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தனர். குழந்தைகளுக்கு மட்டுமே முதலிடம். குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் மட்டுமே உடன்வரலாம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் மீது கலாம் அவர்கள் வைத்திருக்கும் பாசமும், அக்கறையும் நாமனைவரும் அறிந்ததே. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஐயா அவர்களின் அறிவுரைகளையும், உற்சாகப் பேச்சுகளையும் கேட்க வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு முன்வந்தது புரிந்து கொள்ளக் கூடியதே.

மாலை நான்கரை மணியளவில் டாக்டர் கலாமவர்கள் அரங்கத்திற்கு வருவாரென அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது. பெருமளவு பெற்றோரும், குழந்தைகளும் மூன்று மணியளவிலேயே கூடி விட்டிருந்தனர். கிட்டத்தட்ட ஒரு முன்னூறு பேர் மட்டுமே அமருமளவுக்கு இடமுள்ள அரங்கம், அறுநூறு பேர் கூடியிருந்ததாகத் தெரிய வந்தது., குழந்தைகளும், ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே அரங்கத்திலிருக்கலாம், பெற்றோரும் மற்றவரும் மேல்தளத்தில் உள்ள இன்னொரு அரங்கத்தில் அமர்ந்து, தொலைக்காட்சியில் கீழே நடக்கும் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாமென்று அமைப்பாளர்கள் அறிவிப்பு செய்திருந்தனர்.

மழலை நிலை பயிலும் குழந்தைகளிலிருந்து, பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர் வரை அனைத்து வயது குழந்தைகளும் அரங்கத்தில் நிரம்பி வழிந்தனர். மொத்தம் ஐந்து பள்ளிகளிலிருந்து குழந்தைகள் வந்திருந்தனர். தமிழ்ப் பள்ளியிலிருந்து அதிக அளவாக நூற்றி இருபது குழந்தைகள் அரங்கை அலங்கரித்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குழந்தைகள் அனைத்தும் அரங்கில் அமைதியாய்க் காத்துக் கொண்டிருந்தனர். தன்னார்வத் தொண்டர் ஒருவர் குழந்தைகளை நகைச்சுவை விஷயங்கள் பல கூறி உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். தொண்டர்கள் பலரும் வருவதும் போவதுமாய் இருந்தனர். அனைவரின் முகத்திலும் ஒரே எதிர்பார்ப்பு.

சுமார் ஐந்தரை மணியளவில் வந்திறங்கினார் அதிபர். சிரித்த முகத்துடன் அனைவரையும் பார்த்துக் கைகூப்பிய வண்ணம் நடந்து வந்து மேடையேறினார். அமைப்பாளர்கள் மேடையில் வைத்திருந்த குத்து விளக்கையேற்ற அழைத்தனர். குத்து விளக்கு பற்ற வைப்பதற்கு ஒரு மெழுகு வர்த்தியை ஏற்பாடு செய்திருக்கலாம், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கேஸ் லைட்டரை (gas lighter) கொடுக்க, டாக்டர் கலாம் அதனை உபயோகப் படுத்தச் சிரமப்படுவது தெளிவாகத் தெரிந்தது. ஒரு வழியாக விளக்கேற்றி முடித்து, தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தார் டாக்டர் கலாம்.
இவர்களுடன் உள்ளூர் மேயர் மற்றும் நகரக் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மேயர் ஜேம்ஸ் ஹாவ்லண்ட் தன் மனைவியுடன் வந்திருந்தார். ஆறடி உயரத்தில், வெள்ளை நிற மீசையும், சிரித்த முகமுமாக வசீகரமாக இருந்தார் மேயர். தன் ஆறடி உயர உருவத்தைக் கூனி குறுக்கி ”மிஸ்டர் ப்ரசிடெண்ட்” என்று அழைத்துக் கலாம் ஐயாவிற்கு அவர் அளித்த மரியாதை அவரைச் சிறந்த பண்பாளராகவும் மரியாதை தெரிந்தவராகவும் உலகுக்கு உணர்த்தியது. மேயர் இரண்டு நிமிடங்கள் பேசிமுடித்து, கலாம் அவர்களை நகரின் கௌரவக் குடிமகன் என்று அறிவித்து, அதற்கான அடையாளமாகப் பொத்தான் ஒன்றைப் பரிசாக அளித்தார். பதிலுக்கு, டாக்டர் கலாமவர்கள் தான் எழுதிய புத்தகமொன்றைப் பரிசாக அளித்தார். பின்னர் இருவரும் இருக்கைகளில் சென்றமர்ந்தபின், மேயர் அவர்கள், கலாம் ஐயா அவர்களிடம் கேட்டு, அந்தப் புத்தகத்தில் அவரின் கையொப்பம் ஒன்றை வாங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் அறிமுகப் படுத்தி வைத்தார். அதன் பின்னர் அமெரிக்க நாட்டிற்கு வணக்கம் செலுத்தும் வண்ணம் அவர்களின் ”ப்ளெட்ஜ் ஆஃப் அலிஜன்ஸ்” (pledge of allegiance) ஓதப் பட்டது. இதற்கு முன்னர்க் குழந்தைகள் எழுந்து நிற்க வேண்டியதில்லை என ஒருங்கிணைப்பாளர் கூறவும், எழுந்து நிற்கவும் என அதனை வாசிக்க வந்த தன்னார்வத் தொண்டர் கூறுவதற்கும் முரண்பாடாக அமைந்தது. ஒத்திகை எதுவும் பார்த்திருக்க மாட்டார்கள் போலும் என்று தோன்றியது. இவர்கள் என்ன கூறினாலும், தன் நாட்டுத் தேசீயப் பாரம்பர்யத்தைக் கட்டி காக்க வேண்டி மேயர் நெஞ்சில் கைவைத்து எழுந்து நின்றதைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, நமது வந்தே மாதரம் மிகவும் அழகாகப் பாடப்பட்டது.

பின்னர், தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் கலாம் அவர்களின் மேல் எழுதப்பட்ட கவிதை ஒன்றை வாசித்தனர். ஒவ்வொரு வரியும் “கலாம்” என முடியும் இந்தக் கவிதையின் முதல் வரியைக் கேட்டதும், கலாம் அவர்கள் துள்ளிக் குதித்து இருக்கையின் முன்னர் வந்தமர்ந்தது பார்ப்பதற்குப் பெருமையாய் இருந்தது. சிறுமிகள் மிக அழகான உச்சரிப்புடன் தெளிவாகப் படித்தனர். இந்த இதழின் “கவிதை” பகுதியில் டாக்டர் அப்துல் கலாம் மீது எழுதப்பட்ட அந்தக் கவிதை பிரசுரமாகி உள்ளது.

ஒரு சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பிறகு, அனைவரின் ஆவலான எதிர்பார்ப்பிற்கும் பதில் சொல்லும் விதமாய், கலாம் அவர்கள் பேசத் தொடங்கினார். “நண்பர்களே..” என்று ஆரம்பித்த அவரின் பேச்சு, முழுக்கக் முழுக்க குழந்தைகளைப் பற்றியதாக மட்டுமே இ்ருந்தது. குழந்தைகளுடன் அவர் தொடர்பு கொண்ட விதம் இதற்கு முன்னெப்பொழுதும் பார்த்து, கேட்டறிந்திராத வண்ணம் இருந்தது. மேடையில் இருந்து கொண்டு, கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களையும் பார்த்து, “தட் ஃபெல்லோ… ப்ளூ ஷர்ட்” என ஒவ்வொரு அடையாளமாகக் கூறி ஒவ்வொருவரையும் பேச வைத்த விதம் மெய் சிலிர்க்க வைத்தது.

“எதிர்காலத்தில் நான் எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ளப் படுவேன்?” என்று தனது பேச்சைத் துவங்கிய ஐயா, அந்தக் கேள்வியிலேயே விவரம் தெரிந்த பல தளிர்களைக் கட்டி போட்டு விட்டாரென்பதில் எந்தவித ஐயமுமில்லை. “குழந்தைகளே, உங்களனைவரையும் பார்க்கையில் எனக்குப் புராதனமான பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது, அந்தப் பாடலை, சற்றுச் சூழ்நிலைக்கேற்ப மாற்றி தருகிறேன் என்று “விங்க்ஸ் டு ஃப்ளை” என்ற ஆங்கிலப் பாடலை வரிவரியாகக் கூறிக் குழந்தைகள் அனைவரையும் தனக்கு பின் மீண்டும் கூறுமாறு பணித்தார். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல் குழந்தைகள் அனைவரும் அந்த வரிகளை அவர் பின் அதே ராகத்துடன் சொல்லத் தொடங்கினர். ஆங்கிலத்தில் அவர் கூறிய அந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ!!

“சக்திகள் பலவுடன் நான் பிறந்தேன்!
நன்மை நம்பிக்கைகளுடன் நான் பிறந்தேன்!
கனவுகள் பலவுடன் நான் பிறந்தேன்!
மேன்மைகள் பலவுடன் நான் பிறந்தேன்!
தன்னம்பிக்கை குணத்துடன் நான் பிறந்தேன்!
இறகுகள் இரண்டுடன் நான் பிறந்தேன்!
தவழ்ந்து செல்லப் பிறந்திலையாகையால்,
தவழ மாட்டேன், சிறகுகள் இருப்பதால்
பறப்பேன், பறப்பேன், பறப்பேன்!!!”

என்று பாடி முடித்து, “படிப்பு என்பது மனிதனுக்குப் பறப்பதற்கான இறகைத் தருகிறது” என்று தொடர்ந்தார். முழுக்க முழுக்க நம்பிக்கையூட்டும் கருத்துகள், பல உதாரணங்களுடன் கூறி முடித்தார். “இங்குக் கூடியிருக்கும் அனைவரும் அக்னிச் சிறகு உள்ளவர்கள். அதன் மூலம் முயன்று, விஞ்ஞானிகளாக, அறிவியல் மேதைகளாக, பொறியியல் வல்லுனர்களாக, மிகச் சிறந்த மருத்துவர்களாக அல்லது தலைவர்களாக வர இயலும்” எனத் தெளிவுடனும், நம்பிக்கையூட்டும் வகையிலும் பேசிமுடித்தார்.

தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பலரையும் மேற்கோளிட்டுக் காட்டினார். தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், ரைட் பிரதர்ஸ், சர். சி. வி. ராமன், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம், மேடம் க்யூரி, சர். ஐசக் நியூட்டன், சந்திரசேகர் சுப்பிரமணியம் மற்றும் அன்னை தெரசா என வரிசையாக ஒவ்வொருவரின் திறமை மற்றும் ஈடுபாடு குறித்து அவர் சொல்லக் கேட்கும்பொழுது நம்மையறியாமல் நமக்கே ஒரு புதிய உத்வேகம் வருவதை உணர முடிந்தது.

”முடியாது” என்று எவரேனும் எதற்காகவேனும் கூறுவாராயின் அவரை விட்டுக் காதத் தூரம் விலகிச் செல் எனக் குழந்தைகளுக்கு அவர் கூறிய அறிவுரை நம்மைப் போன்ற பெரியவருக்கும் பொருந்தும். தனது பள்ளிப் பருவத்தில் கரும்பலகையில் ஒரு பறவையின் இறகுகளை வரைந்து பறக்க இயலும் எனப் போதித்த தனது ஆசான் சிவ சுப்பிரமணிய ஐயரை நினைவு கூர்ந்தார் டாக்டர் கலாம்.

kalam-group-composition_620x643அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவராகத் தான் பதவி வகித்த பொழுது நடந்த சம்பவம் ஒன்றைக் கதைபோல் விவரித்தார். கண்ணிழந்த ஒரு பழங்குடியினத்தைச் சார்ந்த சிறுவன், தான் ஒருநாள் இந்தியத் திருநாட்டின் முதல் கண்ணில்லாத ஜனாதிபதியாக வருவேன் எனத் தெளிவுடனும், தன்னம்பிக்கையுடனும் கூறியதாக நினைவு கூர்ந்த கலாம், அந்தச் சிறுவன் இளைஞனாகி, பல மறுப்பிற்குப் பிறகு எம்.ஐ.டி. (M.I.T) நுழைவுத் தேர்வில் நான்காவது இடத்தில் தேர்ச்சி பெற்றுத் தற்பொழுது அங்குப் படித்து வருவதை நெகிழ்வுடன் கூறி முடித்தார். கேட்ட நமக்கு மயிற்கூச்செறிந்து அது அடங்குவதற்குச் சில மணித்துளிகள் ஆனது. கண்டிப்பாக நம் வாழ்நாளுக்குள் கண்ணில்லாத ஸ்ரீதர் இந்தியக் குடியரசுத் தலைவராக அமர்ந்து விடுவார் என்று தோன்றியது.

இதனுடன், குழந்தைகளுக்குப் பின்வரும் பத்துத் தீர்மானங்களை நிறைவேற்றுமாறு கூறினார், டாக்டர் கலாம்.

1. எனக்காக ஒரு பெரிய இலக்கை வகுத்துக் கொண்டு, அது குறித்துக் கடினமாக உழைப்பேன். சிறிய இலக்காக வைத்துக் கொள்ளுதல் குற்றம்.

2. நான் நேர்மையுடன் பாடுபட்டு வெற்றி பெறுவேன்.

3. நான் என் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் மற்றும் உலகிற்கும் ஒரு நல்ல குடிமகனாகச் செயல் படுவேன்.

4. நான் எப்பொழுதும் இன்னொருவரின் உயிரைக் காக்கச் சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி ஒத்துழைப்பேன்.

5. நான் எல்லா மனிதர்களின் கண்ணியத்தையும் எந்தப் பாகுபாடுமின்றிக் காப்பேன்.

6. நான் எப்பொழுதும் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவேன்.

7. நான் சுத்தமான வீடு மற்றும் பூமி அமைவதற்காக எப்பொழுதும் பாடுபடுவேன்.

8. இந்த நாட்டின் குழந்தைகள் என்ற முறையில், துணிச்சலுடன் பணியாற்றி எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவேன், பிறரின் வெற்றி குறித்து மகிழ்ச்சி அடைவேன்.

9. நான் என்னுடைய நம்பிக்கை அளவுக்கு இளையவன், சந்தேகமளவுக்கு முதியவன். அதனால் நம்பிக்கை எனும் தீபத்தைஎன் நெஞ்சகத்தில் ஏற்றி வைப்பேன்.

10. என் தேசியக் கொடி எனது இதயத்தில் பறக்கிறது, என்னுடைய தேசத்திற்குப் பெருமை சேர்ப்பேன்.

இந்த உறுதி மொழிகளைக் கூறி, குழந்தைகளைத் தன் பின்னே திரும்பச் சொல்ல வைத்துத் தனது உரையை முடித்துக் கொண்டார் டாக்டர் அப்துல் கலாம். இதன் பின்னர்க் கேள்வி பதில் நேரம் தொடங்கியது.

முன்னரே தயார் செய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றைக் கேட்கப்போகும் குழந்தைகளின் பெயர்களையும் தாங்கிய பல காகிதங்களைக் கையிலேந்தி, ஒலிப் பெருக்கி முன் சென்று அறிவுப்புச் செய்யத் தாயாரான பெண்மணியை நோக்கி, யாரும் எதிர்பாரா வண்ணம், “தயார் செய்த கேள்வி எதுவும் வேண்டாம், நானே குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்” என நேரடியாக இறங்கினார் கலாம். வேண்டாம் என்று அவருக்கு உதவி செய்வதாக நினைத்த பெண்மணியை நாசூக்காக அமரச் செய்து, குழந்தைகளுடன் கைகோர்த்துச் செல்லத் தயாரானார் அந்த மேதை.கூட்டத்தின் பல முனைகளையும் நோக்கி, “தட் ஃபெல்லோ, புளூ ஷர்ட்”, “தட் கர்ல், பிங்க் ஸ்கர்ட்” எனப் பல அடையாளங்களையும் கூறிக் குழந்தைகளை எழுப்பி அவர்களின் கேள்விகளுக்கு அயராமல் பதிலளித்துக் கொண்டிருந்தார் உலகமே வியந்த விஞ்ஞானி. ஒரு சிறுவன் “ஐ ஹேவ் டூ கொஸ்டின்ஸ்” என்று ஆரம்பிக்க, அதே சிறுவனின் தொனியில் தானும் குழந்தையாய் மாறி “நோ, நோ, ஒன்லி ஒன் கொஸ்டின் அலவ்ட்” என்று அவர் கூறியதைக் கேட்க அவ்வளவு ருசிகரமாக இருந்தது.

“அறிவியலை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுமாறு செய்யக் குழந்தைகளான நாங்கள் என்ன செய்ய வேண்டும்” – என்று ஒரு சிறுமி நறுக்கு தெறித்தாற்போல் தமிழில் வினவ, அரங்கமே அதிர்ந்தது. தன் தாய்மொழியை அயல் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஆறு வயது கூட நிரம்பியிராத சிறுமியிடமிருந்து வருவது குறித்துப் புளகாங்கிதமடைந்த நம் முன்னாள் குடியரசுத் தலைவர், திருக்குறளை மேற்கோள் காட்டித் தமிழில் விடை சொல்ல எத்தனிக்க, யாரோவொருவர், எங்களுக்கும் புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் எனக் கேட்க, கலாம் விடையை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பித்தார்.

தேனில் தோய்த்தெடுத்த தெவிட்டாத கனியொன்றை, நாவில் எச்சில் ஊறக் கடித்தெடுக்க வாயருகில் எடுத்துச் செல்கையில் யாரோ ஒருவர் பழத்தைத் தட்டிவிட்டதைப் போன்ற உணர்வு. ஆனால், நண்பரின் உணர்வையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. நாம் தமிழில் கேட்க வேண்டுமென நினைக்க, அவர் ஐயா பேச்சு புரிய வேண்டுமென நினைத்ததும் புரிந்து கொள்ளக் கூடிய உணர்வே.

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்தபின் விழா இனிதே முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மினசோட்டா இந்தியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “பேன்க்வேட் டின்னர்” (banquet dinner) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டாக்டர் கலாம் புறப்பட்டார். குழந்தைகளும், பெரியவர்களும் பொறுமையாக ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வெளியேற விழா மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.
இன்பத் தேன் வந்து காதுகளில் பாய்ந்த அந்த ஒரு மணி நேரம் வாழ்வின் மிகச் சிறந்த நேரமாக இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

– வெ. மதுசூதனன்.

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. வெங்கி சோமசுந்தரம் says:

    திரு மதுசூதனன் அவர்களுக்கு:
    ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் முனைவர் கலாம் அவர்களின் விழாவில் நானும் பார்வையாளராக இருந்தேன். ஐயா கலாம் அவர்களை பார்த்த, கேட்ட தாக்கம் என்னுள் வெகு நாட்களுக்கு குறையவில்லை.

    தங்கள் எழுத்தினால் கலாம் ஐய்யாவின் வருகையை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். இந்தத் தொகுப்பை சேமித்து வைத்து என்றேனும் ஊக்கம் தேவைப்பட்டால் ஒரு முறை படித்துக் கொள்வேன்.

    மிக்க நன்றி,
    வெங்கி

    • மது வெங்கடராஜன் says:

      நேரமெடுத்துப் படித்தமைக்கும், நெஞ்சாரப் பாராட்டியமைக்கும் நன்றி வெங்கி. நீங்கள் கூறியது மிகவும் சரியே. டாக்டர். கலாம் அவர்களைப் பற்றிப் படிப்பது மிகவும் உற்சாகமூட்டும் விடயம் என்பது புரிந்து கொள்ளக் கூடியது. அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தத் தொகுப்பு எவருக்கேனும் பயனுள்ளதாக இருக்குமாயின் அதன் முழுப் பெருமையும் கலாம் அவர்களை மட்டுமே சாரும்.

      நன்றி பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad