ஃபெட்னா 2019 தமிழ் விழா
ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஜூலை முதல் வாரயிறுதியில் அமெரிக்கச் சுதந்திரத்தின விடுமுறையையொட்டி, அமெரிக்காவின் மாநகர் ஒன்றில் நடைபெறும். இவ்வருடம் இந்த விழா சிகாகோவில் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தாண்டு இதனுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50வது ஆண்டுவிழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
ஜுலை 4ஆம் தேதி வியாழன் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் திருக்குறள் மறை ஓதப்பட்டு, அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டு, மங்கல இசை இசைக்கப்பட்டபின், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பல்வேறு அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் சார்பில் இசை, நடனம் மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டன.ஐயோவா தமிழ்ச் சங்கத்தினர் ஒயிலாட்டமும், கரகாட்டமும் ஆடினர். நியூயார்க் தமிழ்ச்சங்கத்தினர் ‘தமிழும் நாமும்’ என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர். மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர் ‘குரலற்றவர்களின் குரல்’ என்ற கீழ்வெண்மணி சம்பவம் பற்றிய சமூக நாடகத்தை நேரடி இசை மற்றும் பாடல்களுடன் நடத்தினர். அந்த நாடகத்தைப் பாராட்டி நிகழ்வுக்கு வந்திருந்த இந்தியப் பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த சி. மகேந்திரன் அவர்கள் பாராட்டிப் பேசினார். சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆண்டு என்பதால் பொன்பறை என்னும் பறையாட்ட நிகழ்ச்சி முதல் நாள் மாலை நடைபெற்றது.
முதலாம் நாள் இரவு சிறப்பு நிகழ்ச்சிகளாக முரசு குழுவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் சாலமன் பாப்பையா குழுவின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றன. முரசு சிம்பொனியின் இசை நிகழ்ச்சியின் போது நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடையில் இருந்தனர். சங்ககால இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளுக்கு மனதை மயக்கும் இசையை உலகத்தரத்தில் அளித்தனர். ஏராளமான இசை கருவிகளில் இருந்து வெளிவந்த அந்த இசையையும், அழகான குரலில் பாடப்பட்ட பாடல்களும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டன. இந்த நிகழ்ச்சியை இயக்கி உருவாக்கியிருந்த திரு.கன்னிக்ஸ் என்ற கன்னிகேஸ்வரனையும் முரசு குழுவையும் வந்திருந்த அனைத்து விருந்தினர்களும் பாராட்டினர். அடுத்ததாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையாவுடன், பாரதி பாஸ்கரும் , ராஜாவும் கலந்துகொண்டனர். அவர்களுடன் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பேச்சாளர்கள் கலந்துகொண்டு “தமிழருக்குப் பெருமை சேர்ப்பது, அக இலக்கியங்களா அல்லது புற இலக்கியங்களா?” என்ற தலைப்பில் பட்டிமன்றப் பிரமுகர்களுக்கு இணையாகப் பேசினார்கள். இலக்கியத் தலைப்பு என்றாலும் ரொம்பவே ஜனரஞ்சகமாகப் பேச்சாளர்கள் பேசினார்கள்.
அடுத்த நாள் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்றும் நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கே துவங்கிவிட்டன. திருக்குறள் போட்டி, மற்றும் பிற இளையோர் போட்டிகளில் கலந்துக்கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க, பிற அறைகளில் ஆய்வரங்கங்கள் நடைபெற்றன. இந்த விழாவின் கருப்பொருளே, ‘கீழடி நம் தாய்மடி” என்பதால், கீழடி குறித்த உரை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கீழடி குறித்துத் தொடர்ந்து பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும், தமிழக அரசின் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களும் கீழடி குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அரசியலில் எதிர்கருத்துகளைக் கொண்டிருக்கும் இருவருமே அவரவர் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டாலும், அவை தோழமையுடனே கூறப்பட்டன. இந்த நிகழ்வில் ஒரிசாவில் இருந்து நேரடி காணொளி ஒளிபரப்பில் கீழடி ஆய்வில் முன்பு ஈடுபட்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு அவருடைய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
மற்றொரு கருத்தரங்கில் ‘எதிர்கால தலைவர்கள்’ என்ற தலைப்பில் மாணவர்களிடம் மொரிஷியஸ் ஜனாதிபதி திரு. பரமசிவம் வையாபுரி, கனடா நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்தசங்கரி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், தென்ஆப்பிரிக்க நாட்டு நீதிபதி திருமதி. நவநீதம் பிள்ளை ஆகியோர் உரையாடினர். இவர்களிடம் மாணவர்கள் அருமையான பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு இவர்கள் பொறுமையாக, எளிமையாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
அன்றைய தினம் மதிய உணவுக்குப் பிறகு சீர்காழி சிவசிதம்பரத்தின் தமிழிசை, இலக்கிய வினாடி வினா, தமிழ் மரபு நாட்டியம், இங்கிலாந்து நடனக்குழு நாட்டிய நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு உணவுக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க, ஹரிசரண், ராகுல் நம்பியார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பாடகர்கள் பாடினார்கள். நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன்பு, மேடையைத் தயார் செய்ய வேண்டி, பார்வையாளர்களை அரங்கை விட்டு வெளியேறுமாறு சொல்ல, அதனால், சில மணி நேரங்கள் குழப்பம் ஏற்பட்டது. பிறகு, அனைத்தையும் தயார் செய்து நிகழ்ச்சியைத் துவங்க நேரமாகிவிட்டது. பல நல்ல பாடல்களை நன்றாகப் பாடினாலும், சில பாடல்கள் பலர் அறிந்திராத பாடல்களாக அமைந்துவிட, சிலரால் இந்த நிகழ்ச்சியை முழுவதும் ரசிக்க முடியவில்லை. முடிவில் ரவுடி பேபி பாட்டைப்போட்டு முடிக்க, அரங்கம் குத்தாட்டம் போட்டது. நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் யுவன் உரையாடியது மிகக் குறைவே.
முந்தைய தினம் நிகழ்ச்சி மிகவும் தாமதமாக முடிந்ததால், சனிக்கிழமை காலையில் நிகழ்ச்சிகள் தாமதமாகத் தொடங்கின. அன்றைய தினத்தில் காலையில் ஒருபக்கம் ஜிடென் (GTEN) எனப்படும் தமிழ் தொழில்முனைவோரின் கருத்தரங்கங்கள், மற்றொரு பக்கம் தமிழ் ஆராய்ச்சி கூட்டங்கள், இன்னொரு பக்கம் கலை நிகழ்ச்சிகள் என எல்லாத் திசையும் மக்கள் செல்வதற்குக் காரணங்கள் இருந்தன. ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கிய இளையோருக்கான தமிழ் தேனீ நிகழ்ச்சியை மக்களுடன் பிற விருந்தினர்களும் ஆர்வத்துடன் கவனித்தனர்.
மாலையில் வெளியேயிருந்த மைதானத்தில் உலகமெங்கும் இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் அணிவகுப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்த இரவு உணவுக்குப் பிறகு, செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய அளவில் இசைக்கருவிகள் இல்லாமல் நடைபெற்ற நிகழ்ச்சி என்றாலும், தங்கள் குரலால் பார்வையாளர்களை ஆட்டம் போட வைத்தனர். இதன் பின்னர், ப்ரேம்ஜி அன் கோவின் ஒரே மக்களின் நட்சத்திர இரவு என்ற ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாஷிகா, அதுல்யா, ஜனனி, அஞ்சனா, அரவிந்த் ஆகாஷ், வைபவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடனம் ஆடினர். இவர்களுடன் சேர்ந்து பயிற்சிப்பெற்ற உள்ளூர் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் நடனமாடினார்கள். நடிகர் ஆரி தொகுத்து வழங்க, அஜய் ராஜ் இயக்கிய இந்த நிகழ்ச்சியின் நடுவில் ப்ரேம்ஜியும், என்.எஸ்.கே. ரம்யாவும் பாடல்களைப் பாடினார்கள். ப்ரவின் அவர்கள் கிட்டார் மீட்டினார். ப்ரேம்ஜியும், ப்ரவினும் அவர்களுடைய வாயினாலேயே இசையமைத்ததைக் காண வித்தியாசமாகவும், நகைப்பாகவும் இருந்தது. திட்டமிடப்பட்டிருந்த இறுதி பாடலுக்கு முன்பே, அரங்கின் ஒரு மின்விளக்கிலிருந்து வெளிவந்த புகையினால், நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.
இறுதி நாளன்று கூட்டம் மிகவும் குறைந்திருந்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வுக்கூட்டங்கள், தொழில் முனைவோர் கூட்டங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. அடுத்தத் தினம் அலுவலகப்பணி என்பதால், பலர் மதியமே தங்கள் ஊருக்குத் திரும்பக் கிளம்பினார்கள். ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துக்கொண்ட, அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய நிகழ்ச்சியென இது வரலாற்றில் பதியப்பட்டது. நான்கு நாட்களும் வந்திருந்த அனைவருக்கும் மதியமும் இரவும் சுவையான உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தட்டு நிறைய குறைந்தது பத்து உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. அனைத்து வேளைகளும் அளவில்லாத வகையில் உணவு வழங்கப்பட்டது.
உணவுக்காகப் பெரிய வரிசை, தாமதமாக முடிந்த நிகழ்ச்சிகள் எனச் சிற்சில குறைபாடுகள் இல்லாமலில்லை. ஆனால், முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய நிகழ்ச்சி என்பதால் அவையெல்லாம் பெரிதாகக் கவனம் பெறவில்லை. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டுடன் இணைந்து நடந்தப்பட்ட தமிழ் விழாவில் பங்கேற்ற மகிழ்ச்சியுடன் மக்கள் வெளியேற, எடுத்துக்கொண்ட நோக்கத்தை அடைந்த திருப்தியுடன் இவ்விழா சிறப்பாக முடிவுற்றது.
- சரவணகுமரன்.
Tags: FETNA, Tamil Conference