மினசோட்டா முத்தமிழ் விழா
ஜூலை 20ஆம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளியின் சார்பில் ஹாப்கின்ஸ் ஐசன்ஹவர் சமூகக் கூடத்தில் (Hopkins Eisenhower Community Center) முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், நாயனக் கலைஞர் திரு. மாரிமுத்து, தவில் கலைஞர்கள் திரு. நாகராஜ் மற்றும் திரு. ரங்கராஜ் ஆகியோர் மங்கல இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதன் பின்னர், நாட்டுப்புறப் பாடகர்கள் திரு. ஆனந்தன் மற்றும் முனைவர். அருள்செல்வி ஆகியோரது வரவேற்புப் பாடல் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சீர்காழி சிவசிதம்பரத்தின் தமிழிசை நிகழ்ச்சியில் பாரதியார், பாரதிதாசன், காசி ஆனந்தன் போன்றோர் எழுதிய பல தமிழ்ப்பாடல்கள் அவரால் பாடப்பட்டன. சீர்காழி சிவசிதம்பரத்தின் கணீர் குரலுக்குப் பக்கபலமாக எத்திராஜ் அவர்களின் மிருதங்க இசையும், அபர்ணா அவர்களின் வயலின் இசையும் அமைந்தன. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து வந்திருந்த கலைஞர்களின் நேரடி இசையில் பாடல்கள் பாடப்பட்டு, அவர்களிடம் பயிற்சிபெற்ற இளையோர் மற்றும் பெரியோரின் ஒயிலாட்டம், படுகர் ஆட்டம், கை சிலம்பம், களியல் ஆட்டம், கம்பத்தாட்டம், கும்மி, பரதம், தனித் தவில், நாயனம், பறை ஆகிய நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், வந்திருந்த கலைஞர்கள் அனைவரும் மினசோட்டா மாநில கலை வாரிய (Minnesota State Arts Board) நிர்வாகி திருமதி. ரினா அவர்கள் முன்னிலையில் சிறப்பிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருக்குறள் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு அவர்கள் கூறிய குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டது. மினசோட்டாத் தமிழ்ப் பள்ளியில் கற்று, இருமொழி முத்திரை (Bilingual Seal) பெற்று, தற்சமயம் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த உதவி பெறும் மாணவர்கள், பிற்காலத்தில் தமிழ்ப் பள்ளியில் இணைந்து அடுத்தத் தலைமுறை மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க முன்வருவதை ஊக்குவிக்க இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சரவணகுமரன்.
Tags: Muthamizh Vizha