\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நேர்கொண்ட பார்வை

அமிதாப் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் அஜித்தின் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக இந்த வாரம் வெளியாகியுள்ளது. இது அவருடைய வழக்கமான கமர்ஷியல் மசாலா படம் அல்ல என்பதையறிந்து அஜித்தின் ரசிகக் கண்மணிகள் சென்றால் படம் அவர்களைக் கவரும். ஒரு பெண் “இல்லை என்றால் இல்லை” தான் எனும் ஒரு மிக அடிப்படையான கருத்தை, இக்காலக்கட்டத்தில் பெரும்பாலோருக்கு மீண்டும் நினைவுப்படுத்த அஜித் எண்ணியதின் வெளிப்பாடாக இப்படத்தைக் கருதலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்த எளிய கருத்தே, ஒரு பெரும் முற்போக்குச் சிந்தனையாகப் பார்க்கப்படும் நிலை இருப்பது சோகம் தான்.

மத்தியவர்க்கத்தைச் சார்ந்த மூன்று பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கியிருந்து சென்னையில் வெவ்வேறு வகை வேலை பார்த்துவருகிறார்கள். மேல்தட்டு இளைஞர்களுடன் சகஜமாகப் பழகி வரும் இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று இளைஞர்களுடன் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த மூன்று பெண்களும் அவர்களால் தொந்தரவு கொடுக்கப்பட்டு, காவல் நிலையம், சிறை, நீதிமன்றம் என்று துரத்தப்படுகிறார்கள். இவர்களுக்குத் துணையாக இருந்து வக்கீலாக வரும் அஜித் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துவைத்து அவர்களுக்கு நீதி பெற்று தருவதும், அந்தக் காட்சிகளில் சமூகத்திற்குத் தேவையான சில பாடங்களை நடத்துவதும், ஜனங்களைச் சிந்திக்கத் தூண்டுவதும் தான், இந்த ‘நேர்கொண்ட பார்வை’.

ஒரு மல்டிப்ளெக்ஸ் டைப் படமான இதை ஒரு மாஸ் நடிகர் எடுத்து நடிக்கும் போது, அதில் கூறப்படும் கருத்து பெரும் ஜனத்திரளைச் சென்றடையும். அது ஒரு நல்ல விஷயம் என்றாலும், இன்னொரு பக்கம் ஒரு மாஸ் நடிகரின் படத்தைக் கொண்டாட்டமாக எதிர்பார்த்து வரும் ரசிகக்கூட்டத்தையும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்காக ஒரு நல்ல கருத்தைத் தாங்கி வரும் படத்தை, மசாலா சேர்த்து கொத்து பரோட்டாவாக மாற்றினால் அது தப்பாகப் போய்விடும். இந்த விஷயத்தில் இயக்குனர் வினோத் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். தேவையான அளவுக்கு லைட்டாக மசாலா சேர்த்து, அதாவது ஒரு ஆக்ஷன் காட்சியை மட்டும் இடையில் சேர்த்து அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறார். அடுத்தப் படமும் அஜித்துடன் என்பதால் அஜித் ரசிகர்களுக்கு அந்த ஆக்ஷன் காட்சி ஒரு முன்னோட்டமாக அமைந்து, ஒரு நிம்மதியைக் கொடுத்திருக்கும்.

அஜித் ஃப்ளாஷ்பேக் காட்சியில் வித்யாபாலனுடன் வரும் போது மட்டும் கொஞ்சம் ஜாலியாக வருகிறார். அதைத் தவிர, படம் முழுக்கச் சீரியஸாக வக்கீல் பாரத் சுப்ரமணியமாகவே வருகிறார். அவருடைய குரலும், அந்த டோனும் இந்தப் பாத்திரத்திற்கு ரொம்பவே பொருத்தமாக வந்துள்ளது. அஜித்திற்கு இணையாக, சொல்ல போனால் ஒருபடி மேலாக ஸ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா (நம்ம ஆண்ட்ரியா இல்லை, ஹிந்தியில் நடித்த வேறு மேகாலயா ஆண்ட்ரியா!!) ஆகியோருக்கு நடிக்க வாய்ப்பு. அதில் ஸ்ரத்தா பின்னி பெடலெடுத்திருக்கிறார். விக்ரம் வேதாவில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தவர், இதில் அஜித் பக்கத்தில் சிறு பெண்ணாகத் தெரிவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரங்கராஜ் பாண்டே அஜித்திற்கு எதிராக வழக்காடும் வக்கீலாக இதில் அறிமுகமாகியிருக்கிறார். கைத்தட்டல் பெறும் அளவுக்குப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. சமாளித்துச் சென்றிருக்கிறார்.

பின்னணி இசையில் யுவன் கலக்கியிருக்கிறார். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரத்தாவுடன் இணைந்து படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது யுவன் தான். வெளிப்புறக்காட்சிகளில் நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு கவரும் விதத்தில் அமைந்துள்ளது. கோர்ட் காட்சிகளில் ஒரு தெளிவு. அவ்வளவு தான். இருப்பது ஒரே ஒரு சண்டைக்காட்சிதான் என்பதால் திலிப் சுப்பராயனுடன் சேர்ந்து நிரவ் ஷாவும் வினோத்தும் அசரடித்திருக்கிறார்கள்.

மற்றபடி, அந்த ஆக்ஷன் காட்சியைத் தவிர மொத்த படமும் இயல்பான காட்சிகளால், இயல்பான கதாபாத்திரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இந்த இயல்பான களத்தில் பொதுவான ஆண் மனம் பெண்ணின் மீது சில மதிப்பீடுகளை வைத்துள்ளது. இரவு நேரம் கழித்து வீடு திரும்புவது, சிரித்துப் பேசுவது, பல ஆண் நண்பர்களுடன் பழகுவது ஆகியவை நல்ல குணங்கள் அல்ல, அவ்வாறு இருக்கும் பெண்களைத் தவறாகப் பேசலாம், தவறாக அணுகலாம் என்று நினைக்கும் மனிதர்களுக்குப் பாடம் புகட்டியிருக்கிறது இப்படம். “நோ மீன்ஸ் நோ” என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிய வைத்திருக்கும் இப்படம், பெண்கள் மது அருந்துவதோ, பலருடன் தொடர்பு வைத்திருப்பதோ சகஜம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் இன்னொரு பக்கம் எழுகிறது. எந்தச் சூழலாக இருந்தாலும், எப்படிப்பட்டப் பெண்ணாக இருந்தாலும், அவள் கூறும் ‘நோ’ என்பது அவளது உரிமை என்பதும், அது எவ்வளவு முக்கியம் என்பதும் வலியுறுத்தப்படும் இப்படத்தில், பெண்களின் ‘யெஸ்’கள் குறித்தும் சில பார்வைகளைச் சொல்லியிருக்கலாம். அதை லூஸில் விட்டிருப்பதும் ஆபத்து தான்.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad