\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இண்டிபெண்டன்ஸ்

Filed in கதை, வார வெளியீடு by on August 14, 2019 0 Comments

ன்னா… இவா ரெண்டு பேரும் ஒரே எக்ஸைட்டட்… நாளைக்கு ஜூலை ஃபோர்த் ஃபையர் வொர்க்ஸ் ஷிகாகோவில பாக்கப் போறம்னு…” அடுக்களையில் பிஸி பேளா பாத்திற்குக் காய் நறுக்கிக் கொண்டே பேசத் தொடங்கினாள் லக்‌ஷ்மி.

“ஆமாண்டி, இட் வில் பி டிஃபரண்ட் ஃபார் ஷ்யூர்…. ஐம் அல்ஸோ எக்ஸைட்டட்… ஷிகாகோல ஃபெட்னா ப்ரோக்ராம்ஸ் எல்லாம் பாக்கலாம்… சேம் டே…” லேப் டாப்பிலிருந்து தலையை நிமிர்த்தி, அடுக்களையிருந்த பக்கம் பார்த்து, பதிலளித்தான் கணேஷ்.

“நான் இப்பவே சொல்லிட்டேன்… தமிழ் ப்ரோக்ராம் இருக்குன்னு நேவி பியருக்கெல்லாம் என்ன மட்டும் போகச் சொல்லாதேங்கோ.. அதுவும் கொழந்தேளைக் கூட்டிண்டு… அங்கே எள் போட்டா எள் விழாத கூட்டம்… நீங்களும் வந்தாப் போலாம் இல்லன்னா ஷிகாகோவே வேண்டாம்… சொல்லிட்டேன்.. “ வழக்கம்போல் பொறிந்து தள்ளினாள்.

”சரிடி… சும்மா பொலம்பாத… பாக்கலாம்” என்றவனை இடைமறித்து, “நோ பாக்கலாம் பிஸினஸ், வரேன்னு ப்ராமிஸ் பண்ணுங்கோ.. இல்லாட்டா நீங்க மட்டும் ஷிகாகோ போய் தமிழ் ப்ரோக்ராம்ஸ் எஞ்சாய் பண்ணுங்கோ.. நானும் கொழந்தேளும் வழக்கம் போல ரவுண்ட் லேக்லயே ஃபையர் வொர்க்ஸ் பாத்துக்குறோம்.” அவள் நிறுத்துவதாகத் தெரியவில்லை. இவளிடம் தனது பாச்சா பலிக்காது என்பதை நன்குணர்ந்த கணேஷ், நேவி பியர் ஃபையர் வொர்க்ஸ் பார்க்கிங்க் இன்ஃபர்மேஷன் தேட ஆரம்பித்தான்.

ன்னா… ராத்திரி ஒம்பதரை மணி ஃபையர் வொர்க்ஸ்க்கு மத்தியானம் இரண்டு மணிக்கே போகணும்னு எல்லா வெப் சைட்லயும் போட்ருக்குன்னா….” கூகிளின் உதவியால் இன்ஃபர்மேஷன் தேடிய லக்‌ஷ்மியின் தொணதொணப்பு. “மத்தியானமெல்லாம் போக முடியாது, நான் முடிஞ்ச அளவு தமிழ் ப்ரோக்ராம் பாத்துட்டுத்தான் வர முடியும்… ஒரு செவன், செவன் தர்ட்டி மாதிரி அங்க இருந்தாப் போதும்….” என்று வாயடைக்க எத்தனித்தான். “ரொம்பப் பெரிய சிட்டினா… நிறையக் கூட்டம் வரும்… கொழந்தேள் எல்லாம் கூட்டிண்டு, ரொம்பக் கஷ்டமாயிடும்னா… நம்ப ராம் ஃபேமிலியும் வரேன்னுருக்கா.. அவாளோட கோஆர்டினேட் பண்ணனும்…. கொஞ்சம் சீக்கிரமே போலாம்னா..” அவள் விடுவதாக இல்லை.

“ஏய், நோக்கே தெரியும்… நான் ஷிகாகோ வர்ரதே ஃபெட்னாக்காகத்தான்… முழு நாளும் அதை ஸ்கிப் பண்ண முடியாதுடி… புரிஞ்சிக்கோ…”  என்றவனை “சரி விடுங்கோ, யோஜிக்கலாம்” என்று முடித்தாள். அதாவது, தற்போதைய ரிட்ரீட்… மீண்டும் விஸ்வரூபமெடுத்து வரும் என்று உணர்ந்துதான் இருந்தான் அவன்.

ல்லாம் பேக் பண்ணிட்டியாடி.. ஆறு மணி நேரத்துக்கு மேல ட்ரைவ்…” என்று ஏவிக் கொண்டிருந்தான். “நேக்குத் தெரிஞ்சு வேண்டியதெல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. வேணும்னா நீங்களே வெரிஃபை பண்ணிக்கோங்கோ, நீங்கதான் சூப்பர்வைஸர் ஆச்சே….” வழக்கம் போல அவனது கேள்விக்கணைகளை லாவகமாக அவன்மீதே திருப்பி விட்டாள். இவளிடம் தனது பருப்பு வேகாது என்று புரிந்து கொண்டு, தானே எல்லா சூட்கேஸையும் செக் செய்யத் தொடங்கினான்..

“பாத்தியா… அந்த செஞ்ச் எல்லாம் வச்ச சிப் லாக் பேக் எடுத்து வைக்கல… டோல் பே பண்ண வேணும்…” சொல்லிக் கொண்டே சுவாமி அறைக்குள் சென்று அங்கு எப்பொழுதும் சேர்த்து வைத்திருக்கும் நாணயங்கள் வைக்கப்பட்ட பாக்ஸ் எடுத்து, தேவையான அளவு காயின்களை எடுத்துக் கொண்டான் கணேஷ்.

“பாத் ரும் கீத் ரூம் போறவாளெல்லாம் போய்ட்டு வந்துடுங்கோ..” கொழந்தேளுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டே, மேக்கப் சரி செய்து கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள் லக்‌ஷ்மி. “அப்பா, டோண்ட் ஓப்பன் த கன்வர்ட்டிபிள் டாப்… மை ஹேர் வில் பி ஸ்பாயில்ட்…” தனது நீண்ட கூந்தலின் தொந்தரவுகளைத் தன் மொழியில் புலம்பிக் கொண்டிருந்தாள் மகள் பாரதி. “ஆமான்னா.. நானும் ஃப்ரீ ஹேர் விட்டிண்ட்ருக்கேன்…” என்றாள் லக்‌ஷ்மி. “மூடி வச்சிண்டே கார் ஓட்டிண்டு போறதுக்கு என்னத்துக்கு கன்வர்ட்டிபிள்” ஃபெட்னா ப்ரோக்ராமை முழுவதும் பாக்க இயலாத வெறுப்பை இதில் காட்டிக் கொண்டிருந்தான் கணேஷ். “சரி, சரி என்னவோ பண்ணித் தொலைங்கோ… நான் சொல்லி எதைக் கேட்டிருக்கேள்…” தங்களுடன் ஃபையர் வொர்க்ஸ் பார்க்க வர வேண்டுமென்பது முக்கியமென்றும், அதற்காக இந்தச் சிறிய விஷயத்தை விட்டுக் கொடுக்கலாமென்றும் ஸ்ட்ரேடஜைஸ் செய்து கொண்டிருந்தாள் அவள்.

ல மணி நேரக் கார் பயணத்திற்குப் பின்னர், ஷிகாகோ வந்து சேர்ந்து, ஹோட்டலில் செக்கின் செய்து முடித்திருந்தனர்.  “சரிடி, நாளைக்கு, உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… ஒரு அஞ்சு மணி வரைக்கும் நான் ப்ரோக்ராம் பாக்குறேன், அதுக்கப்புறம் கெளம்பிப் போலாம். அரை மணி நேரத்துல போயிடலாம்” என்றவனிடம் வேண்டா வெறுப்பாய்ச் சரி என்று ஒப்புக் கொண்டாள்.

ஐந்து மணி என்பது, அப்படி இப்படி என்று ஆறு மணி வரை இழுத்து விட்டான். அதற்கப்புறம் கிளம்பலாம் என்றால், அனைத்துத் தமிழ்ச் சங்க நண்பர்களும் ஒவ்வொருவராய், இவ்வளவு சீக்கிரமே கிளம்புறீங்களா என்று வயிற்றெறிச்சலைக் கொட்டிக் கொண்டனர். அவர்களிடமெல்லாம், பொறுமையாய் ஏதோவொரு பொய்யைச் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குள் மணி ஆறரை ஆகி விட்டது. காரில் அமர்ந்து ஷிகாகோ அகண்ட நெடுஞ்சாலைகளில் ஓட்டிக் கொண்டிருந்தான். பேய்க் கூட்டம் ரோடில். அனைவரும் ஃபையர் வொர்க்ஸ் பார்ப்பதற்குச் சென்று கொண்டிருந்தனர் போலும். தான் பார்க்காமல் விட்டு விட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளே மனதில் ஓடிக் கொண்டிருக்க, ரோடில் ஓரிரு முறை பக்கத்து லேனில் வரும் வாகனங்களைப் பார்க்காமல் லேன் மாற முயற்சிக்க, போகும் வரும் வண்டிகளெல்லாம் ஹார்ன் அடித்து அவனை எச்சரித்துக் கொண்டே சென்றனர். “ஏன்னா… பாத்து, பாத்து… கொஞ்சம் அந்த சாலமன் பாப்பையாவை மறந்துட்டு ரோடைப்பாத்துக் கார் ஓட்டுங்கோ.. அந்தப் பட்டிமன்றத்தைத் தான் விடாம டி.வி.ல பாத்துண்டே இருக்கேளே… அப்புறம் என்ன புதுசா…” கோபமும் பயமும் கலந்த அறிவுரை.

ஒருவழியாக, ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த பார்க்கிங்க் லாட்டுக்குள் புகுந்து, காரை நிறுத்தும் பொழுது ஏழரை மணி. இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் நடந்து சென்று நேவி பியர் பார்க்குக்குள் போக வேண்டும். “லேட்டாயிடுத்துன்னா… ஏழரை மணிக்குள்ள பார்க்கை மூடிடுவாளாம்… போக முடியுமான்னு தெரியலை..” தனது பதைப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தாள். “எல்லாம் போலாண்டி… உள்ளே போகாட்டாலும், வெளியிலிருந்தே அதே ஃபையர் வொர்க்ஸ்தாண்டீ…” எரிச்சலுடன் பதிலுரைத்துக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக, சுற்றி நடந்து வரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கும் தமிழ் தெரியாதது நல்லதாகப் போனது. இவர்களின் சம்பாஷணையைப் புரிந்து கொள்ள இயலாதது, இவர்கள் தொடர்ந்து சண்டை போடுவதற்கு வசதியாக அமைந்தது.

ஒரு வழியாக பார்க்குக்குள் புகுந்து, ஜனத் திரளுக்கு மத்தியில் ஏதோவொரு இடம் பிடித்து, ராமின் குடும்பத்தையும் கண்டு பிடித்து, செட்டில் ஆவதற்குள் ஒன்பது மணி ஆகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் ஃபையர் வொர்க்ஸ் தொடங்க இருக்கிறது. இரு குடும்பக் குழந்தைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து, மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டே வருடா வருடம் நடைபெறும் அந்தப் பட்டாசுத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நெருங்க நெருங்க, அனைவருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது. காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் டின்னருக்கான திட்டமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. முடிவாக, அதே பார்க்கின் உள்ளே இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் ஒன்றில் டின்னர் முடிப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த நிமிடத்தில், வான வேடிக்கைகள் தொடங்கின.

வருடா வருடம் ஜூலை நான்காம் தேதி, அமெரிக்க சுதந்திர நாளைக் கொண்டாடுவதற்காகப் பல இடங்களில், கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடக்கும் அந்த வான வேடிக்கை தொடங்கியது. பல வருடங்களாகப் பார்த்து, அதே போல இருந்தாலும், கூடியிருந்த அனைவரும் “வாஆஆஆஆவ்” என்று வாயைப் பிளந்தனர். அது போல வாயைப் பிளக்க அங்கே கூடியிருந்தவர்களின் எண்ணிக்கை எழுபத்தி ஐந்தாயிரமாம், ராட்சத டிஜிட்டல் டிஸ்ப்ளே காட்டிக் கொண்டிருந்தது.

வெரி நார்மல்…. நம்ம ரவுண்ட் லேக் ஃபையர் வொர்க்ஸே எவ்வளவோ பெட்டர்…” லக்‌ஷ்மி உண்மையைச் சொல்லிக் கொண்டிருந்தாள். “ஆமா, இதுக்குத் தான் நானும் சாலமன் பாப்பையாவை விட்டுட்டு வந்திருக்கேன்” வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல் மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான் கணேஷ். “சரி, சரி, வேகமா நடக்கலாம்… எல்லாரையும் க்ராஸ் பண்ணி, பாட் பெல்லி க்யூவில போய் நிக்கலாம்” எல்லாச் சமயங்களிலும் அடுத்தது என்ன என்று சிந்திக்கும் ராம் அனைவரையும் லீட் செய்து சென்று கொண்டிருந்தான். ஒரு வழியாக ஃபாஸ்ட் ஃபுட்டை அடைந்து, நீண்ட வால் போன்ற க்யூவின் இறுதியைப் பிடித்து அனைவரும் நின்று கொண்டனர். க்யூவில் நின்று கொண்டிருக்கும்பொழுது, என்ன ஆர்டர் செய்யலாம் என்று ஒரு மாநாடு போட்டுக் கொண்டிருந்தனர். குழந்தைகள் ;கௌஸ் அண்ட் புல்ஸ்’ விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் என்ன வாங்குவது என்று முடிவு செய்து, ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. ராமின் மனைவி தன் மகளை அழைத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றிருந்தாள். க்யூ முழுவதும் கரைந்து, இன்னும் ஒரு குடும்பம் ஆர்டர் செய்து முடித்தால், அடுத்தது இவர்கள்தான் என்ற நிலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

திடீரென, “ஊஊஊஊஊஊஊஊஊ:” என அலறிக் கொண்டு, வெளிக் கதவு நோக்கி நடந்து கொண்டிருந்த நூற்றுக் கணக்கான மக்கள் திரும்பி, இவர்கள் இருந்த திசை நோக்கி ஓடி வர ஆரம்பித்தனர். க்யூவில் நின்று கொண்டு என்ன சத்தம் என்று பார்க்க, ஓடி வந்தவர்களின் வேகமும், சத்தமும் அதிகரித்துக் கொண்டே போனது…  ஓடி வந்த கூட்டம் பெருகிக் கொண்டே போனது.. எவரும் நிற்பதாகத் தெரியவில்லை, தொடர்ந்து மக்கட்திரள் வெள்ளமென வந்து கொண்டே இருக்கே, சத்தமும் பயமும் பல மடங்கு அதிகரிக்க, எவருக்கும் என்ன நடக்கிறதென்று புரியவில்லை. க்யூவின் தன் முறை அடுத்து வந்ததை இவர்களும் கவனிக்கவில்லை, கடைகளில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. அனைவரும் கவனித்தது, சுற்றி இருந்த கடைகளெல்லாம் அவச அவசரமாக ஷட்டர் போட, அனைவருக்கும் ஏதோவொரு பெரிய அசம்பாவிதம் நடக்கவிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவது கண்கூடாகத் தெரிய, “வாட்ஸ் கோயிங்க் ஆன்… வாட்ஸ் கோயிங்க் ஆன்” எனக் கூவத் தொடங்கினான் கணேஷ்… “கன் ஷாட், கன் ஷாட்….” ஓடி வந்த பலரில், சிலர் உரக்கக் கத்தினர். பெண்கள் பெரும்பாலும் அழுது கொண்டே ஓடி வர, குழந்தைகள் மலங்க மலங்க விழித்துக் கொண்டு ஓட, பெரும்பாலான ஆண்கள் காதுகளில் ஃபோனை வைத்துக் கொண்டே யாரையோ தேடிக் கொண்டிருந்தனர்.

அனைத்தும் தொடர்ந்து கொண்டே இருக்க, சில மணித்துளிகள் பிடித்தன நிலைமையின் தீவிரம் விளங்க. என்ன நடக்கிறதென்பது விளங்கவில்லை, ஆனால் அங்கிருப்பது புத்திசாலித் தனமல்ல என்பது மட்டும் விளங்க, சுற்றி முற்றிப் பார்த்து அனைவரும் இருக்கிறார்களா என்று சரி செய்து கொண்டான் கணேஷ். மூன்றடி தூரத்தில், எட்டு வயது மகள் நின்று கொண்டு செய்வதறியாது பயம் கலந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஓடிவந்த கூட்டம் அவளை நெருங்குவதைப் பார்த்த கணேஷ், அவசர அவசரமாய் அவளைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே அவளைப் பிடித்திழுக்கப் பார்த்தான். அப்பொழுது மறுதிசையிலிருந்து ஓடி வந்த இன்னும் சிலர் அவனைப் பிடித்துக் கீழே தள்ளிக் கொண்டே தொடர்ந்து ஓடினர். வேரற்ற மரமெனச் சரிந்த அவனைச் சுற்றி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஓடத் தொடங்கினர். ஓடியவர்களின் கால்களுக்கு மத்தியில் மகளின் கலங்கிய முகம் மட்டும் பார்த்துக் கொண்டே தரையிலிருந்து எழ முயற்சித்தவன் மீண்டும் தள்ளப்பட்டான். இந்த முறை, அவனுக்கு அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரும்பு மீடியன் அவன் மேல் விழுந்தது… அதனை நகர்த்துவதற்குள் இன்னொரு மீடியன் அவன் காலில் விழ, அது ஏற்படுத்திய காயமும் அதன் வலியும் உடனடியாக விளங்கத் தொடங்கியது… ஆனாலும், பலங்கொண்ட மட்டும் முயற்சித்து, எழுந்து தன் மகளை நோக்கி முன்னேறினான்.

கீழே விழுந்த அப்பாவை, உயிர் போகும் பயத்துடன் பார்த்துக் கொண்டே செய்வதறியாது நின்றிருந்தனர் குழந்தைகள் இருவரும். ஒருவழியாக, அவர்களைப் பற்றிக் கொண்டு, மற்றவர்களையும் உரத்த குரலில் ஓடுங்கள் ஓடுங்கள் என்று சொல்லிக் கொண்டே பக்கத்திலிருந்து கதவு வழியாக கார் பார்க்கிங்க்குள் நுழைந்தான் கணேஷ். வந்திருந்த எட்டுப் பேரில், அறுவர் ஒன்றாகப் பார்க்கிங்க் நுழைய, அப்பொழுதுதான் உரைத்தது இன்னுமிருவர் ரெஸ்ட் ரூம் சென்றுள்ளனர் என்று. ‘மரண பயம்’ என்றால் என்ன என்பது, மூளையில் செல்களில் முதல் முறையாக நுழைந்த அனுபவம். உடன் இருப்பவர்கள் பத்திரமாக உள்ளனரா என்பது புரியாத நிலையிலிருந்தால் வரும் பயம் என்னவென்பதை அனுபவித்தால் தான் உணர இயலும்.

பதைபதைப்புத் தொடர, பயத்துடன் ஓடிவரும் மனிதர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஓடி வருபவர்களின் பயம் கலந்த ஓலமும் அதிகரித்துக் கொண்டே போனது. பார்க்கிங்க் லாட்டில் கார்கள் வெளிவரத் தொடங்க, ஆயிரணக்கணக்கான மக்கள் குறுக்கும் நெடுக்கும் கூக்குரலிட்டுக் கொண்டே ஓட, கார்களால் எங்கும் நகர முடியாமல் ஒரு டெட்லாக் சிச்சுவேஷன். திரும்ப உள்ளே ஓடி நுழைந்து, ரெஸ்ட் ரூம் சென்றவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டிய கட்டாயமானாலும், எதிர்த் திசையில் ஒரு இஞ்ச் கூட நகர முடியாத சூழல்.

ஓடுகின்ற கூட்டத்தோடு ஓடித் தப்பித்துக் கொள்ள நினைப்பது ஒன்றே இயற்கையாக வரும் உணர்வு என்றாலும், அவர்கள் வெளியில் வரும் வரை அங்குவிட்டு அகல்வதில்லை என்ற முடிவுக்கு வந்தவர்களாக அங்கே நிற்கத் தொடங்கினர். வெளியே வரும் ஒவ்வொரு தலைகளும் கருங்கூந்தலா என எதிர்பார்ப்புடன் பார்க்கத் தொடங்கியது. இவர்களனைவரின் வயிற்றில் பால் வார்க்கும் வகையில், அவர்களிருவரும் வெளியே வந்தனர்.

எல்லோரும் ஒன்றாகிவிட்ட பிறகு, கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, எந்தப் பக்கம் நகர்வது என்று திணறிக் கொண்டிருந்தனர். ஜனத் திரள் ஓடி வருவதும், ஓலமிடுவதும் சிறிது, சிறிதாகக் குறையத் தொடங்கியது. காவல் துறை முழுவதுமாய் முன்பகுதியைச் சூழ்ந்து கொண்டதாகவும், நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும் கூட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக செய்தி வரத் தொடங்கியது சற்று பயத்தைக் குறைப்பதாக அமைந்தது. அதுவரை இரு குழந்தைகளையும் இருக அணைத்துப் பிடித்திருந்த கைகள், சற்றும் தளரவில்லை. சிறியவளின் மார்பை வளைத்த கைகளில், அவளின் இதயத் துடிப்பின் வேகத்தைத் துல்லியமாக உணர முடிந்தது. அழுது கொண்டே அவள் கேட்ட கேள்வி, “ஒய்… ஒய்… வாட் டு தே வாண்ட்?!”…

அந்தத் துயர நிலையிலும் கணேஷின் மனதில், “தெரியலயேம்மா…” என்று நாயகன் கமல் பாணியில் பதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

வெ. மதுசூதனன்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad