பனிப்பூக்கள் Bouquet – ஆண்டாண்டு கால எதிர்பார்ப்புகள்
காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வரும் அத்திவரதர், இந்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து வருகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் காண முடியும் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்பெஷல் தரிசனம், விஐபி பாஸ் என ஊர் கோலாகலமாகிவிட்டது. சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால், பலர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுவரை சில உயிர்கள் இந்தக் கூட்டத்தில் சிக்கித் தவறியிருக்கின்றன. இன்னும் சில நாட்களே வெளியே இருப்பார் என்பதால், கூட்டம் தற்சமயம் இன்னமும் அதிகமாகி வருகிறது. சிலர் அவர் வெளியேயே இருக்கட்டும் என்கிறார்கள். இருந்தால் மவுசு குறையக்கூடும். திரும்பத் தண்ணீருக்குள் சென்றால், 2059 இல் வெளியே வரும்போது அப்போதுள்ள அதிகாரிகள் மறக்காமலிருக்க, ‘2019இல் கற்ற பாடங்கள்’ என ஒரு குறிப்பு இப்பொழுதே எழுதி வைத்துக்கொள்வது அவசியம்.
—
காஷ்மீரில் 65 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சட்டவிதி 370யை சென்ற வாரம் இந்திய அரசு நீக்கியது, பலத்த பரபரப்பை இந்தியாவெங்கும் எழுப்பியது. எதிர்கட்சிகள் இது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று ஆட்சேபிக்க, இது காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான நல்ல மாற்றம் என்று ஆளும்கட்சி ஆதரிக்க, காஷ்மீரின் பெரும்பான்மையான மக்களின் எண்ணம் என்னவென்று இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற போகிறார் என்றதும் மக்களுக்குக் கிலியாகிவிட்டது. அப்படி ட்யூன் பண்ணி வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் நன்றே!!
—
கவனமில்லாத ஓட்டுனர்களால் தங்களின் நெருங்கிய சொந்தங்களை இழந்தவர்களால் கடந்த 20 ஆண்டுகளாகக் கோரிக்கையாக எழுப்பப்பட்டு வந்த ஹாண்ட்ஸ்-ஃப்ரீ செல்போன் சட்டம் (Hands-free cellphone bill) ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மினசோட்டாவில் அமலுக்கு வந்தது. கார் ஓட்டும் போது, கையில் ஃபோன் வைத்திருப்பதைப் போலீஸ் பார்த்தால், முதல் முறை $50 அபராதமும், அடுத்த முறை $275 அபராதமும் விதிக்கப்படும். ஃபோனைத் தொடாமல் ப்ளூடூத் மூலமோ அல்லது குரல் மூலமோ ஃபோனைப் பயன்படுத்தலாம். நல்ல சட்டம் தான். ஏற்கனவே 17 மாகாணங்களில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. எந்த ஊர் சென்றாலும், கார் ஓட்டும் போது ஃபோன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது தான். இந்த விஷயத்தில் நான் ஆச்சரியமாகப் பார்ப்பது மோட்டார் பைக் ஓட்டுனர்களுக்கான சட்டம் தான். 18 வயதுக்குட்பட்டோருக்கு தான் ஹெல்மெட் அவசியம். பெரியவர்கள் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டலாம். ஆனால், கண் கண்ணாடி அவசியம். ஹெல்மெட் கட்டாயமில்லாததற்கு என்ன காரணமோ? அதைக் கட்டாயப்படுத்தலாம்.
—
இந்தியாவின் ஸ்டார் பக்ஸ் என்று சொல்லப்படும் கஃபே காபி டேயின் (Cafe Coffee Day) தலைவர் சித்தார்த் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம், இந்திய வணிக உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முன்னர், அவர் தனது நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் வெளியுலகில் அவர் மீது பச்சாதாபம் உண்டாக்கியது. ஒரு பக்கம், பணப்பிரச்சினை என்று சில தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடி விடுகிறார்கள். இன்னொரு பக்கம், இம்மாதிரி சில தொழிலதிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். மோசடி குற்றச்சாட்டுடன் லண்டன் சென்று விட்ட விஜய் மல்லையா இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, “பாருங்கள், தொழிலதிபர்களின் நிலையை” என்று இந்திய அரசாங்கம் மீதும், வங்கிகள் மீதும் புகார் வாசித்துள்ளார். காபி டே நிறுவனத்திற்குக் கடனை விடச் சொத்துகள் அதிகம் உள்ளன என்கிறார்கள். இருந்தாலும், நெருக்கடி தாளாமல் தற்கொலை எனும் முடிவை எடுத்துவிட்டார் சித்தார்த். 26 வருட வரலாற்றைக்கொண்ட நிறுவனம், மிக முக்கியமான ஒரு தருணத்தில் தற்போது உள்ளது. அது இப்பிரச்சினையிலிருந்து மீண்டு மீண்டும் வருமா என்று பார்க்கலாம்.
—
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ‘சாஹோ’ (Saaho) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆங்கிலப் படம் போல எடுக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி படத்தின் போது வெளியிடப்பட்டது. படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்து வெளியாகும் படம் இதுதான். தொடர்ந்து பெரும் பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர் இப்போது இவர்தான். இந்தப் படத்தில் நம்மூர் அருண் விஜய் இருக்கிறார். இசை கிப்ரான். படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டாண்டுகளுக்கு மேலாகத் தயாரிப்பில் இருந்து தற்போது வெளியாகும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்கிறதா என்பது இம்மாத இறுதியில் தெரிந்துவிடும்.
- சரவணகுமரன்