\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காந்தர்வக் குரலோன்

tms1_194x260இசையுதிர் காலம் கட்டுரையை எழுதி முடித்து, திருத்திய பின் மேலும் ஒரு இசை நாதம் ஓய்ந்து போனது. தெள்ளத்தெளிவான உச்சரிப்பும், பொருத்தமான பாவமும், உணர்ச்சியையும் ஒரு சேர இணைத்துப் பாடி வந்த திரையிசைச் சிம்மம் – எழிலிசை வேந்தன் டி.எம். செளந்தரராஜன் மறைந்தார்,
தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் – சுருக்கமாக, டி.எம்.எஸ் – 1922ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.எஸ். தனது ஏழாவது வயதிலிருந்து இசை கற்ற டி.எம்.எஸ். இள வயதிலேயே கர்னாடக சங்கீத அரங்கேற்றம் செய்தார். கச்சேரி வருமானம் இல்லாத காலங்களில், மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக் கொடுத்து வந்தார். திரையிசை மீது ஆர்வம் ஏற்பட, சுந்தர்லால் நட்கர்னி எனும் படத்தயாரிப்பாளர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்த டி.எம்.எஸ், மெதுவாகத் தனது ஆசையை வெளியிட, சில இசை அமைப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தப் பட்டார்.

அக்காலங்களில் கோலோச்சி வந்த பாடகர்கள் தியாகராஜ பாகவதர், கிட்டப்பா போன்றோர் நடித்தும் பாடியும் வந்தனர். ஆதலால் அவர்களைப் போலவே உச்சத்ஸ்தாயியில் பாடப் பயிற்சி பெற்றார் டி.எம்.எஸ். 1944ஆம் ஆண்டு, தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதான பின் திரையிசை உலகில் ஒரு பெரிய இடைவெளி உண்டானது.

1946ல் வெளியான கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்தில், எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் சில பாடல்களைப் பாடினார் டி.எம்.எஸ். அப்பாடல்கள் சிறப்பாக அமைந்தும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 1950 களில், அவர் மலைக்கள்ளன் படத்தில், எம்.ஜி.ஆருக்காகப் பின்னணிக் குரல் கொடுத்த “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடல் மிகப் பிரபலமாக, டி.எம்.எஸ்ஸின் திரையிசையாட்சி துவங்கியது.

சிவாஜி கணேசனுக்காக அவர் பாடிய பாடல் தூக்கு தூக்கி படத்தில் ‘ஏறாத மலைதனிலே’. அதுவரை சிவாஜிக்காகக் குரல் கொடுத்து வந்தவர் சிதம்பரம் எஸ். ஜெயராமன். புதுப் பாடகர் தனக்கு பின்னணி கொடுப்பதை விரும்பாத சிவாஜி, ஜெயராமனைப் பாட வைக்குமாறு வற்புறுத்தினார். அவரிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்ட டி.எம்.எஸ்., பின்னர் வந்து பாடலைப் பாடிக் கொடுத்துப் பிடிக்கவில்லையென்றால் மாற்றிக் கொள்ளுங்கள் எனப் போய்விட, பாட்டைக் கேட்ட சிவாஜி இனித் தனக்கு டி.எம்.எஸ் தான் பாட வேண்டும் என முடிவெடுத்தார். அந்த அளவுக்குச் சிவாஜியின் குரலோடு பொருந்துமாறு பாடியிருந்தார் டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரிய நடிகர்களுக்கு அவரவர் குரல்களைப் பிரதி எடுத்தாற் போல் பாடி வந்தவர் டி.எம்.எஸ்.

‘புதிய வானம், புதிய பூமி..’ என எம்.ஜி.ஆருக்காகப் புத்துணர்வுத் துள்ளலில் பாடும் போதும், ‘கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள்’ என சிவாஜிக்காக மென்மையான காதலை வெளிப்படுத்திப் பாடும் போதும் அவரவர் குரலுக்கும், பாவத்துக்கும் ஏற்றவாறு பாடுவதில் வல்லவர் டி.எம்.எஸ்.

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம் பெற்ற ‘என் கேள்விக்கென்ன பதில்’ என்ற பாடலைப் பாட வந்த போது, அவருக்கு இந்தப் பாடலை யாருக்காகப் பாடப் போகிறார் என்று தெரிவிக்கப்படவில்லை. அவர் வந்து பாடிச் சென்ற பின், ஏ.வி.எம். அவர்கள் பாடலைக் கேட்டுவிட்டு, ‘இந்தப் பாட்டுக்கு யார் நடிக்கப் போவது என்று டி.எம்.எஸ்ஸுக்கு சொன்னீர்களா?’ எனக் கேட்க, இயக்குனர் இல்லை என்றதும், ‘டி.எம்.எஸ். சிவாஜியை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரை அழைத்து சிவகுமாருக்காகப் பாடச் சொல்லுங்கள்’ எனச் சொன்னாராம். அப்படி மறுபடியும் பாடிய பாடல் தான் நாம் இப்பொழுது கேட்பது.

அடிமைப்பெண் படத்தின் போது தனது மகளின் திருமண ஏற்பாடுகளில் மூழ்கி இருந்ததால், அப்படத்தின் முக்கியமான பாடலைப் பாட இன்னும் சில நாட்களாகும் என டி.எம்.எஸ். தெரிவித்ததால், எம்.ஜி.ஆர். கோபப்பட்டு, வேறு யாரையாவது பாட வைக்க வேண்டும் என முடிவு செய்து அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் எஸ்.பி.பி. பாடல் ‘ஆயிரம் நிலவே வா’. அதன் பின் எம்.ஜி.ஆர் அவரை நேரில் சென்று சந்தித்துத் தனது படங்களுக்குத் தொடர்ந்து பாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, மீண்டும் அவர் படங்களில் பாடினார் டி.எம்.எஸ்.

அதே போன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்திற்காக ஒரு பாடலை டி.எம்.எஸ் பாட, திருப்தி அடையாத எம்.எஸ்.விஸ்வநாதன், மீண்டும் மீண்டும் திருத்தங்களைச் சொல்ல, எரிச்சலைடைந்த டி.எம்.எஸ். ’இனிச் சுண்டலுக்காகப் பாடினாலும் பாடுவேனே தவிர உன் இசைக்குப் பாட மாட்டேன்’ எனச் சொல்லிச் சென்று விட்டார். வீம்புக்காகச் சண்டை பிடிக்காத எம்.எஸ்.வி. மறுநாள் நேரில் சென்று டி.எம்.எஸ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ‘நீங்கதான் பாடணும். உங்களால முடியும். நீங்க பாடினாதான் அந்தப் பாட்டு சரியா வரும்.. நிக்கும் ‘ என்றார்.

இதைச் சற்றும் எதிர்பாராது நிலைகுலைந்து போனார் டி.எம்.எஸ். உடனே வந்து விஸ்வநாதனின் எதிர்பார்ப்புக்கேற்ப பாடிக்கொடுத்தார். அந்தப் பாடல் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான் அவனே உலகின் எஜமானாம் ..மேரா நாம் அப்துல் ரஹ்மான்..’.

tms2_223x226தொழிலில் மிகவும் பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ‘ பாட்டுக்காக, பதிவுத்தளத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்து பிறகு பாடினாராம். மூச்சிரைக்கும் தாக்கம் கிடைக்க இப்படிச் செய்தவர் அவர்.

உச்சஸ்தாயியில் மட்டுமே பாடக் கூடியவர் எனும் பிம்பத்தை உடைக்க – எம்.எஸ்.வி அவருக்கு ‘யாரந்த நிலவு’ பாடலைக் கொடுத்த போது, டி.எம்.எஸ் தயங்கினாராம். பின்னர்த் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாக மிகவும் மெல்லிய குரலில் அப்பாடலைப் பாடினார். பாட்டை கேட்ட சிவாஜி, இந்தப் பாடலின் ஒளிப்பதிவை மூன்று, நான்கு நாட்கள் தள்ளிப் போட்டு, நிறைய பயிற்சிகளுக்குப் பிறகு வந்து நடித்துக் கொடுத்தாராம். இதே வகையில் பின்னர் அமைந்த பாடல் – ஜாஸ் வகையைச் சேர்ந்த, ’கண் போன போக்கிலே, கால் போகலாமா’, ‘தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே’ போன்றவை.

கெளரவம் படத்தில் ‘பாலூட்டி வளர்த்தக் கிளி’ பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் பாட, சிவாஜியும் நடித்து முடித்த பின் எம்.எஸ்.வி திருப்தியடையாமல் டி.எம்.எஸ்ஸை அழைத்துப் படத்தைப் போட்டுக் காட்டி மறுபடியும் பாடச் செய்தாராம். ‘ட்ராக்’ வசதிகள் இல்லாத அக்காலத்தில் இசை கலைஞர்கள் மீண்டும் வாசிக்க, சிவாஜியின் வாயசைப்புகேற்ப பாடினார் டி.எம்.எஸ்.

நான்கைந்துப் படங்களில் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். அவற்றில் மிகவும் குறிப்பிட வேண்டியது அருணகிரிநாதர். இப்படத்தில் இடம் பெற்ற ‘ முத்தைத் தரு பத்தித் திருநகை’ பாடலை மூச்சு விடாமல் பாடியிருப்பார். தொழில்நுட்பம் வளர்ந்த பின் – பாடியதை வெட்டி, ஒட்டி மூச்சு விடாமல் பாடியது என வியாபாரம் செய்யும் காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்காத, கேட்டிருக்காத பாட்டு இது.
பத்தாயிரம் தமிழ் திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் டி.எம்.எஸ். இதில் இவர் பி.சுசிலாவுடன் சேர்ந்து பாடியவை ஆயிரத்துக்கும் மேல்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். இதன் வழியே வாலியை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

பல மாநில விருதுகளையும், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் டி.எம்.எஸ். இவரின் மற்றவர்களுக்கு வளைந்து கொடுக்காத தன்மை அதிக நண்பர்களைச் சேர்த்துக் கொடுக்கவில்லை. எவரிடமும் வாய்ப்புக் கேட்டோ, உதவி கேட்டோ சென்றவரில்லை டி.எம்.எஸ். பெரிய நடிகர்களின் வளர்ச்சியில் இவரின் சம பங்கு இருந்த போதிலும், எவரும் இவருக்குச் சேர வேண்டிய சிறப்பையோ, மரியாதையோ சேர்க்கவில்லை.
கடந்த சனியன்று, மே 25ம் தேதி, இறந்த டி.எம்.எஸ்ஸுக்கு மரியாதை செலுத்தக் கூடத் தமிழ்த் திரையுலகம் திரளவில்லை.
‘ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ என்பதற்கு ஏற்பத் தமிழ்த் திரையுலகம் உள்ளவரை டி.எம்.எஸ்ஸின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad