தலையங்கம்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
வேறொன்றறியோம் பராபரமே!!
– தாயுமானவர்
“மினசோட்டா வாழ்த் தமிழர்களுக்கும் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து எங்களின் இணைய தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்களின் வணக்கம்.
ஒரு வழியாகப் பனிக்காலம் முடிந்து, மினசோட்டாவில் வசந்தக் காலம் என்றோ கோடைக் காலம் என்றோ அழைக்க இயலாத ஒரு மாதிரியான குழப்பக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். மனிதர்களைப் போலவே புள்ளினங்களும், புல்லினங்களும் குழப்பமடைந்துள்ளன போலத் தெரிகிறது. வழக்கமாக இந்த நாட்களில் கூட்டம் கூட்டமாய்க் காரோடும் சாலைகளைக் குத்தகைக்கு எடுத்ததுபோல் சாவதானமாகக் கடக்கும் வாத்துக் கூட்டங்களை அவ்வளவாகக் காண இயலவில்லை. பச்சை பசேலென்று வளம் கொழிக்கும் தேசம் இதுவென்று பறைசாற்றும் புல்வெளிகள் அங்கும் இங்கும் பழுப்பு நிறம் கலந்து பஞ்சத்தில் அடிபட்டது போல் காட்சியளிக்கின்றன. வழக்கமாய்ப் பச்சை இலைகள் முழுவதுமாய்ப் படர்ந்து அடர்த்தியாய்க் காணப்படும் மரங்களில் பல வேண்டுதலுக்கு முடியிழந்த பக்தன் போல் வெறுமையாய்க் காட்சியளிக்கின்றன.
இந்தக் குழப்பக் காலத்தைக் கடந்து கோடைக் காலம் வருமென்பதில் மிகுந்த நம்பிக்கையுடன், எங்களின் வசந்தக் காலச் சஞ்சிகையை மூடி வைத்து, கோடைக்காலப் பொலிவுடன் புத்தம்புது வடிவில் இதனை வெளியிடுகிறோம். கடந்த மூன்று மாதங்களில் எங்களுக்குப் பல விதங்களில் தங்களின் கருத்துக்களைச் சமர்ப்பித்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இதயபூர்வ நன்றிகள். கருத்துக்களை பகிர்ந்த வாசகர்களின் ரசனைகளைக் கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு மாற்றங்கள் புரிந்துள்ளோம்.
இந்தச் சஞ்சிகையில் குறிப்பாகச் சில புதிய பகுதிகளை ஆரம்பித்துள்ளோம். வாசகர்கள் சிலர் தங்களின் தமிழ் காதலையும், காலம்பல ஆனதால் தமிழ் பேச இயன்ற அளவு படிக்க இயலவில்லையென்ற யதார்த்த நிலையையும் எங்களுக்கு விளக்கியிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்கச் சில படைப்புகளை ஒலி வடிவில் வெளியிட்டுள்ளோம். இது குறித்து வாசகர்களின் கருத்தறிய ஆவலாய் உள்ளோம்.
இலக்கணத் தமிழில் இன்பமுள்ளதென்பதை உணர்ந்த அளவு பாமரப் பேச்சிலும் பற்றுள்ளதென்பதை உணர்ந்த நாங்கள், அதற்கான ஒரு பகுதியையும் தொடங்கியுள்ளோம். சிங்காரச் சென்னையிலே, அனுதினமும் தனது வாழ்க்கை முறையில், உரையாடி, உறவாடும் திருவாளர் பொதுஜனம் பேசும் பேச்சு நடையில், வாழ்க்கையின் முக்கியக் கருத்துகளை, நடப்புகளை இந்த இதழில் கொடுத்திருக்கிறோம். தொடர்ச்சியாய், பொது ஜனங்கள் திருநெல்வேலி, கோயமுத்தூர், மதுரை, காரைக்குடி, யாழ்ப்பாணம், பாலக்காடு மற்றும் பல தமிழ்கூறும் நல் உலகிலிருந்து வந்து பேசுவதைப் பதிவு செய்வதே எங்களின் திட்டம்.
தவிர, கவித்திறனுடனோ எதுகை மோனையுடன் உரை நடையிலோ எழுதும் அன்பர்களுக்குத் தீனியிட “எசப்பாட்டு” என்றொரு பகுதியையும் உருவாக்கியுள்ளோம். தலைப்பிற்குத் தகுந்த சுருக்கமான கவிதையோ, கட்டுரையோ வாசகர்கள் தொடர் பதிலாக எழுதலாம். இது அனைவருக்கும் எழுதும் சந்தர்ப்பத்தைக் கொடுப்பதுடன் ஒரு எண்ண வலையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் இதனைத் தொடங்கியுள்ளோம்.
புதிய பகுதிகளுக்கும் எப்பொழுதும் உள்ள பகுதிகளில் வந்துள்ள புதிய படைப்புகளுக்கும் எப்பொழுதும்போல் தங்களின் ஆதரவையும் கருத்துகளையும் வேண்டுகிறோம்
பனிப்பூக்கள் கணினியில் மலர்ந்து மூன்று மாதக் காலங்கள் உருண்டோடி விட்டன. இந்த மூன்று மாதங்களில் நாங்கள் தந்த படைப்புகளைத் தராசில் வைத்துத் தரம் ஆராய்ந்து சொல்லும் பொறுப்பை வாசகர்களான உங்களின் கையிலேயே விடுகிறோம். உங்களின் மதிப்பீட்டில் உயர்ந்த மதிப்பெண்களுடன் முதலிடம் அடைவோமோ அல்லது சராசரியாகத் தேர்வில் சொற்ப மதிப்பெண்களில் வெற்றி பெறுவோமோ நாமறியோம். ஆனால், தரக்குறைவான, நாலாந்தர படைப்புகள் எதனையும் கொடுக்கவில்லை என்ற மன நிறைவு எங்களிடம் உள்ளது. அதே நிறைவுடன், எதிர் காலத்திலும் இதில் தடம்புரளாமல் இருப்போம் என்று உறுதி கூறிக் கொள்கிறோம்.
புதிய பகுதிகளுடன் ஆசிரியர் குழுவினையும் இந்தச் சஞ்சிகையில் அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நன்றி,
ஆசிரியர் குழு.,