யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)
யாழ்ப்பாணத்துத் தமிழற்கும் தமிழக ஊர்ப்புறத்தாருக்கும் ஆடிமாதமெனில் கொதிக்கும் வெய்யிலில் இதமான கூழ் வடித்துக் குடிப்பது வழமை. இது மேலும் பனங்கட்டியும், தேங்காய்ச் சொட்டுடன் சேர்த்துச் சுவைப்பதும் பண்டைய கால மரபு.
தேவையானவை
½ lbs மீன்
½ lbs கணவாய்
½ lbs இறால்
½ lbs சிறிய சிங்க இறால்/crawfish
¼ lbs பயிற்றங்காய்
¼ lbs மரவள்ளிக்கிழங்கு
¼ lbs பலாக்கொட்டை
¼ lbs முழக்கீரை/spinach
3 மேசைக்கரண்டி அரிசி
¼ கோப்பை/cup உலர்ந்த பனங்கிழங்கு ஒடியல் மா
10 செத்தல் மிளகாய் உடன்குற்றிய தூள்
1 உள்ளங்கை உருண்டை அளவு பழம் புளி
½ தேக்கரண்டி/teaspoon மஞ்சள் தூள்
2 கோப்பை/cup தண்ணீர்
தேவையான அளவு உப்பு
சமையல் ஆயுத்தம் செய்தல்
மீன், கணவாய், மற்றைய மச்ச உணவுகளைக் கோது உடைத்துக் கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மேலும் பயிற்றங்காயை கைச் சிறுவிரல் அளவில் நொடித்துடைத்துக் கொள்ளவும். மரவள்ளிக் கிழங்கையும் தோலுரித்து சிறிய பாகங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதே போன்று கீரையையும் தண்டு முறித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
பலாக்கொட்டைகளை அரைவாசியாகப் பிழந்து கோது உரிக்கவும். ஒடியல் மாவினை 2 கோப்பை தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைத்து வடித்து எடுக்கவும். இதே போன்று பழம் புளியையும் 2 கோப்பை தண்ணீரில் கலந்து வடித்து சக்கை அகற்றிப் புளிநீர் செய்து கொள்ளவும்.
தயாரிப்பு முறை
ஒரு பெரும்சட்டி அல்லது பானையில் அரைவாசிக்கு நீர் சேகரித்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். மேலும் இந்த ஏதனத்தில் மீன், கணவாய், நண்டு, இறால், அரிசி, பயிற்றங்காய், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்புத் தூவி 45 நிமிடங்களிற்கு வேக விடவும். நன்றாக வெந்து முடித்த பின்னர் அதனுடன் கீரையைச் சேர்க்கவும்.
இன்னும்ஒரு கோப்பையில் ஊறிய ஒடியல்மா, புளி நீர், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்துப் பசையாகக் குழைக்கவும். இந்தக் கூட்டினை வேக வைத்த உணவு, கஞ்சி நீருடன் சுடச்சுடக் கலந்து கொள்ளவும். கூழானது உரிய பதத்திற்கு வந்ததும்அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறலாம்.
கீழ்குறிப்பு
சைவ உணவு உண்போர் வெண்டைக்காய், பூசனி போன்ற காய்கறிகள் சேர்த்தும், மரவள்ளி, வாழைக்காய், பலாக் கொட்டை போன்றவற்றை பொரித்துச் சேர்த்தும் கூழைத் தயார் செய்யலாம்.