உங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி?
ஒரு மனிதனின் படைப்பாற்றலை, சிந்திக்கும் திறனை அளவிட பெருநிறுவனங்கள் கருத்துதிர்ப்பு (Brainstorming) முறையை பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் தமது பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்முறையைக் கடைபிடிக்கிறார்கள் இவர்கள். இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை ஒரு அறையில், மேஜையைச் சுற்றி அமரச் செய்து உரையாடச் செய்வர். தங்களது நிறுவனக் குறிக்கோள், கூட்டு முயற்சியின் (Teamwork) முக்கியத்துவம் போன்ற செய்திகள் தாங்கிய சுவரொட்டிகள் அறைகளில் தென்படக்கூடும். எந்தத் தலைப்பில் பேசுவது என்ற தயக்கம் குழுவினிரைடையே நீண்ட நேரம் தென்பட்டால் அந்தக் குழுவில் தங்கள் நிறுவனத்துக்குகந்த பணியாளர்கள் அங்கில்லை என்ற முடிவுக்கு தேர்வுக்குழு வந்துவிடும் வாய்ப்புண்டு.
இளஞ்குருதியின் உத்வேகத்துடன், புதிய சிந்தனைகளை வரவேற்கத் துடிக்கும் பல நிறுவனங்கள் இவ்வகை நோக்குப் பிழைகள் கொண்டுள்ளனர்.
புத்திசாலிகள் என்று கருதப்படுபவர்
இக்காலங்களில் அமெரிக்காவில் காது, மூக்கு, நாக்குகளில் துளையிட்டு தோடு போட்டவர்கள், உடல் முழுக்க மையிட்டவர்கள் எனப் பலவகைப் புதிய சிந்தனையாளர்கள் தென்படுகின்றனர். கலாச்சாரச் சூழல்களைப் பொறுத்து இவர்களின் அடையாளங்கள் மாறுபடக்கூடும். இவர்கள் பெரும்பாலும் தனித்து செயல்பட விரும்புவார்கள்; கூட்டுப் பணிக்கு இவர்கள் உடன்படுவது அபூர்வம். மற்றவர் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். தமக்கு தோன்றியதை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். நேரக் கட்டுபாடுகளின்றி தங்கள் சுதந்திரப்படி பணியாற்ற முனைபவர்கள் இவர்கள்.
மூளையமைப்பு பொதுவாக வித்தியாசமற்றது
மூளை வளர்ச்சியைப் பொறுத்த மட்டில் சிந்தனையாளர்கள், சிந்தனையற்றவர்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது. எந்தவகை மனித மூளையும் சூழ்நிலையைப் பொறுத்து, தேவைக்கேற்ப சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவல்லவை. ஒரு ஓவியக் கலைஞனின் மூளையும், கணக்குப் பிள்ளையின் மூளையும் பெரிய வேறுபாடுகளின்றி ஒத்துக் காணப்படும்.
சிந்தனை மேம்பாட்டுக் காரணி
நடைமுறை வாழ்க்கையில் சிலர் உத்வீக சிந்தனையில் வல்லவர்களாக இருப்பது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது. அவர்கள் வாழ்வில் மூளைக்கு உரிய உற்சாகத்தை, புதுச்சிந்தனைகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொள்ள வாய்ப்புக்கள் அமைவது ஒரு காரணம். பொதுவாக வெளிக்காரணிகள் மனித புலன் ஐந்தையும் எவ்வாறு பாதிக்கிறதோ, தூண்டுகிறதோ இவை யாவும் மூளையை உந்த வைக்கும் சாதனங்கள்.
எமது மூளை ஒரு இயந்திரம் அல்ல, ஒரு உயிரினம். உயிரினங்கள் தனது சூழலிற்கேற்ப செயல்படும். எனவே கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளி அலைகள், வர்ணஜால நிறங்கள், காது கேட்கும் மதுர இசை, கை,கால், தோல்களின் ஸ்சபரிச அனுபவங்கள், நாற்றம், நறுமணம் நுகரும் மூக்கு, பல்வேறு சுவைகளைச் சுவைக்கும் நாக்கு இவையனைத்தும் மூளைக்குத் தகவல் தருங்கருவிகள்.
கார்மேக நிற சுவர்களின் இயல்பான அமைதியான சூழ்நிலை மனதிற்கும், காதிற்கும் அமைதியாக இரு என்று சமிஞ்சை செய்யும். மேலும் வெளிர் நிறங்கள் சிந்தனைச் செயல்பாடுகளை முடக்கி அமைதியுறச் செய்யும் ஆற்றல் கொண்டவை. பெருநிறுவனங்களின் சுவர்கள் பளிரென முகத்தில் அறையும் நிறங்களைப் பூசியிருப்பது இந்தக் காரணத்தால் தான்.
தனி வாழிவில் நிறுவன உரிமையாளர்களாக இருந்தாலும் சரி, இல்லை ஊழியர்கள் ஆகட்டும் சரி தமது வீட்டு அறைகளிற்குப் பூச்சு அடிக்க நிறம் தெரிவு செய்வதில் பல மணிநேரம் செலவழிப்பர் அதே சமயம் வேலையில் அப்படியெல்லாம் கிடையாது. இதன் பின்னணி சிந்தனை இந்த அறையில் தான் வாழ வேண்டும் என்றால் அதை தனக்குப் பிடித்தவாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே. அதே சமயம் வேலைத்தளம் அது போன்ற இயல்பை உண்டு பண்ண வாய்ப்புக் கிடைப்பதில்லை.
நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் புதிய சிந்தனைகளை உருவாக்க தகுந்த உடல், உள, இட வசதிகளைப் பேணாவிட்டால் என்றும் சலிப்பான சிந்திப்பையே தர வாய்ப்பாகும். சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சில சமயம் தொழிற்படும் இடங்களில் நேரடி வாய்ப்பைத் தரமுடியாது போகலாம். எனவே அப்பேர்ப்பட்ட இடங்களில் நாமே நமக்குத் தேவையான சிறு மாற்றங்களைச் செய்துகொண்டு எமது உத்வீகத்தைப் பேணலாம்.
புதிய சிந்தனைக்கு அத்திவாரம்
தனிப்பட்ட வகையில் நாம் புதிய சிந்தனைகள் தொடர்ந்து வர சில எளிய வழக்கங்களை மேற்கொள்ளலாம்.
அன்பு – தூயவகையில் மற்றவர்க்காக ஒத்தாசை செய்தல்
அவா – ஒரு விடயத்தை செய்து முடிப்பதில் உற்சாகமும், திடமான மனங்கொள்ளல்
புத்துணர்வு – தொடர்ந்து விளையாட்டு,பொழுது போக்கு மற்றும் பலவகையான ஐம்புலன்களையும் அனுபவிக்கும் வகையில் தொழிற்படல்
நடவடிக்கை – சிறிதோ பெரிதோ உலகிற்கு உதவும் வகையில் சிந்தித்து செயற்படுதல்
தைரியம் – தம் மனதிற்கும், உறவுக்கும் உண்மையாக நடந்து கொள்ளுதல்
மேலும் வேலையில் விளையாட்டு, அப்பியாசம்,விளையாட்டில் சிந்திப்பு, சிந்திப்புடன் சிறந்த உணவு, இவற்றுடன் சந்தோசமான, பண்பான சக ஊழியர்கள் நண்பர்கள் உருவாகுதல், இதனால் எளிதில் முடிவு காண முடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வு, ஆராய்ச்சிகள், அன்றாடப் பணிகளில் முடிவெடுத்தல் போன்றவை எளிதடையும். வாழ்க்கை முறை உத்வீக சிந்தனைகளை உண்டு பண்ணும் களஞ்சியமாகும்.
எனவே, புதியச் சிந்தனைகளை உண்டு பண்ணிக் கொள்ள வாய்ப்புக்களை, நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே ஆக்கப்பூர்வ, படைப்பாற்றல் மிக்கச் சிந்தனைகளுக்கு மனதைத் தயார்படுத்தும் பெரும் வழி எனலாம்.
– ஊர்குருவி