கூகிளை நம்பினோர்
“மடேர் ” என்று தோசைக்கல்லால் கோபமாக அம்மு ரமேஷ் தலையில் அடித்தாள். ரமேஷ் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதில் ஒரு கணம் கவனம் செலுத்தினாள். மறு கணம் அம்மு மீண்டும் “மடேர் ” என்று தோசைக் கல்லால் தலையில் தட்டினாள் . அவள் மனதிற்குள் நடக்கும் அந்த ரணகளத்தைத் தெரியாமல் ரமேஷ், அவன் பாட்டிற்கு பேசியபடி இருந்தான்.
வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சிரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டியபடி, சமையல் அறையைச் சுத்தம் செய்தாள்.
“என்ன நான் சொல்றது ?” இடையில் ரமேஷ் நிறுத்திக் கேட்டான்.
“இது வேறயா ?. ஏதோ நான் சொல்றது கேட்டு அது சரின்னு ஒத்துக்கிடறாப்புலதான் . நான் என்ன சொன்னாலும் அதைக் காதுல வாங்கிறது கூட கிடையாது ” இதைச் சொல்லலாம்னு வாயைத் திறந்தாள் அம்மு. ஆனால் அதற்குள் ரமேஷ் தான் சொல்வது தான் சரி என்பது போல பேசத் துவங்க ,
மீண்டும் அம்மு மனதிற்குள் “டமார்” தோசைக்கல்
அம்மு அப்படித்தான்!!
“என் இப்படி என்றோ, ஐயோ எனக்கு மட்டும் என் இப்படி என்றோ” நொந்து கொள்வதோ அவளுக்குப் பிடிக்காது. எதற்கும் ஒரு சின்னத் தீர்வு சொல்வாள்.
ரூம் போட்டு தான் யோசிப்பாளான்னு தோணற அளவுக்கு ஏதாவது செய்வாள். ஒண்ணுமே செய்யமுடியவில்லை என்றால் இந்தத் தோசைக்கல் தான் தீர்வு. எனக்கு அம்முவைச் சின்ன வயசுலேந்தே தெரியும்.
அதென்ன தோசைக்கல் அம்மு ?
“அது தான் டக்குனு கைல கிடைக்கும். பெரிசா வலிக்காது மண்டைல கொஞ்சமா அடிச்சா நமக்கும் திருப்தி. அவங்களுக்கும் ஒன்னும் ஆகாது. அவங்கள ஒண்ணுமே பண்ண முடியலையேன்னு ஒரு வருத்தம் இருக்காது இல்ல?”
சொல்லிவிட்டுச் சிரித்து விடுவாள். அவள் அப்படி நிஜமாக அடிக்க மாட்டாள்.
அவள் மனதிற்குள் நடக்கும் ஒரு மானசீக அடி அது.
அம்மு அப்படித்தான்!!
அம்முவுடன் நான் பள்ளி, கல்லூரி இரண்டும் படித்தேன். எதற்குமே அலட்டிக்கொள்ள மாட்டாள்.
அவளுடைய சின்னச் சின்ன தீர்வுகள், சிரிப்பு வர வைக்க மட்டுமல்ல, உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும்.
நாங்கள் கல்லூரி படிக்கும் பொழுது ஒரு முறை அப்படித்தான். எங்கள் தெருவிலிருந்த ஒரு வயதான முதியவருக்கு, திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக, அவசர ஊர்தியில் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்பொழுது, வழியில் நெரிசல் காரணமாக நிறைய வண்டிகள் இடமின்றி மறித்து நின்றன .
நானும், அம்முவும் பின்னால் டிவிஎஸ் 50 ல் வந்து கொண்டிருந்தோம். தாத்தாவின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்க, அம்மு திடீரென்று போக்குவரத்து காவலரின் கையிலிருந்த ஒலி பெருக்கியை எடுத்து ஒரு பிரபல நடிகையின் பெயரைச் சொல்லி அவர்தான் அந்த ஊர்தியில் இருக்கிறார் . அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவை என்றும், நெரிசல் கலைந்தால்தான் சீக்கிரமாகச் செல்ல முடியும் என்று தடாலென்று ஒரு அறிவிப்பு செய்தாள். அவ்வளவுதான் !! எல்லா நெரிசலும் ஒதுங்கி வழிவிட, சிலர் ஊர்தியின் ஜன்னல் வழியே கூட எட்டிப் பார்க்க முயற்சி செய்தார்கள். மறுநாள் பேப்பரில் அந்த நடிகையின் உடல் நலம் பற்றி ஒரு செய்தி கூட வந்தது .
தாத்தா உடம்பு சரியான பின் பல ஆண்டுகள் கழித்தும், அம்முவின் அந்தச் செயலை நினைத்தால், மலைப்பும் சிரிப்பும் தான் வரும்.
“நீ பாட்டுக்கு அவ்ளோ பெரிய பொய் சொன்னியே . எப்படி அவ்வளவு தைரியம் வந்தது.”
“தைரியத்துக்கு எதுக்கு காரணம்? பயம் வந்தா தான் காரணம் வேணும். தைரியம் மனசுக்குள்ள தானே இருக்கு”.
“ஆனா அம்மு . நம்ம காரியத்துக்கு அந்த நடிகையின் பெயர் சொல்லறது தப்பு இல்லையா?”
“அட விடு கவி . நம்ம வள்ள்ஸ் சொல்லி இருக்கறத கேட்க வேண்டாமா?”
“அது யாரு வள்ள்ஸ்?”
“அட நம்ம வள்ளுவர்தான் பா. பொய்மையும் வாய்மை இடத்த “
அம்மு எப்பவுமே அப்படித்தான்!!
நான் ஒரு சராசரி பெண். கோபம், அழுகை இதெல்லாம் வெகுவாக வரும் பொழுது, என்னை இழக்கும் பெண். இயலாமை வரும் பொழுதோ ஆத்திரம் கொள்ளும் பெண் .
ஆனால் அம்மு எதுக்குமே அசர மாட்டாள். சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு முடிந்தால் மூளையால் தீர்வு இல்லையேல் தோசைக்கல் தீர்வு.
“கவி இப்போ எல்லாம் Hard work உடன் smart working ம் சேர்த்து செய்யணும். கோபம் வந்து என்ன ஆகப் போகுது விடு.. அது அப்படித்தான் ஆகும் . அவங்க அப்படித்தான் .”. இப்படி சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அடுத்த வேலைக்குச் சென்று விடுவாள்.
இருவருமே பல் மருத்துவருக்குப் படித்தோம்.. அம்மு படிப்பு முடித்த பின் அவள் வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்தனர். அவளும் சிரித்தபடி ஏற்றுக் கொண்டாள்.
நான் மேற்படிப்பு படிக்க வேறு ஊர் வர வேண்டி வர, எங்கள் தொடர்பு கொஞ்சம் விட்டுப்போனது.
அம்முவுடன் அவ்வப்பொழுது மின்னஞ்சல் பரிமாற்றம்.
ரமேஷ் அம்முவின் கணவர். பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாமல் தான் அம்மு திருமணம் செய்தாள் . இருந்தாலும் அவளின் சுபாவம் புரிந்த, அவள் கணவர் நல்லவராக இருக்கவேண்டுமே என்று நான் பலமுறை வேண்டியதுண்டு. திருமண வாழ்க்கையை பற்றி எப்பொழுது கேட்டாலும் “எல்லாமே அருமை” என்று ஒரு பதில் தவிர வேறு ஒன்றும் வராது.
ஒரு மாதிரி நான் மேல் படிப்பு முடித்து ஊருக்குத் திரும்பி வந்தேன் அம்முவும் ஒரு சின்ன டிஸ்பென்சரி வைத்து பல் மருத்துவராகப் பயிற்சி செய்து வருகிறாள் என்று தெரிய வந்தது.
வெகு நாளைக்குப் பிறகு அவள் வீட்டிற்குச் சென்றேன்.
ரமேஷ் அன்போடு வரவேற்றான். வெகு நாளைக்குப் பிறகு அம்முவைப் பார்த்து ஓராயிரம் கதைகள் பேசவேண்டும் போலிருந்தது. ரமேஷ் பேசியபடி இருந்தான்.
“நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவி போல .. ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, உங்கள் பல்லு கூட ஒரே மாதிரி ன்னு சொல்லுங்க கை ரேகை தவிர ” என்று சொல்லி சிரிக்க,
அவருடைய ஜோக் புரிந்து சிரித்தோம்.
“டெக்னிக்கலி ரமேஷ் ரெண்டு மனுஷங்களுக்கு பல்லு ஒரே மாதிரி இருக்காது. கை ரேகை மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் பல்லு கூட unique”
“அட சும்மா கதை விடாதே” என ரமேஷ் அடித்துப் பேச,
எனக்கு ஆச்சர்யமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. ரெண்டு பல் மருத்துவர்களை வைத்துக் கொண்டு கதை விடாதே என்று ரமேஷ், தான் சொல்வதுதான் சரி என்று பேசியது புரியவில்லை.
எங்கள் கண்முன்னே கூகுளை எடுத்துத் தட்டி, நாங்கள் சொல்வதைச் சரி பார்க்க. எனக்கு ரொம்ப கோபமாக வந்தது. ரெண்டு டாக்டர்ஸ் சொல்றதவிட கூகுள் என்ன சரியாகச் சொல்லும்.
ஆனால் ரமேஷ் நாங்கள் சொல்வதைச் சரி பார்த்த பின், நீங்க சொல்வது சரி தான் என்று சொல்லி ஒப்புக் கொள்ளாமல், சின்னத் தலை அசைப்புடன் வேறு விஷயம் பேசத் தொடங்கிய பொழுது, எனக்குள் இருந்த பெண்ணியம் பெரும் கோபம் கொண்டது. அது என்ன ? தவறு என்று ஒப்புக் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு ஈகோ?
சுறுசுறுவென்று வந்த கோபத்தை என் முகம் காட்டியது போல , என் நெருங்கிய தோழி அல்லவா ?
அம்மு புரிந்து கொண்டாள்.
“நான் உள்ளே போய் சாப்பிட எடுத்து வரேன் ரமேஷ். நீயும் வா கவி. பேசிட்டு இருப்போம்” என்று சொல்லி என்னை உள்ளே அழைத்துச் சென்றாள்.
ரமேஷின் ஆணாதிக்க குணம் தான் மனம் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அம்மு சந்தோஷமாக இருக்கிறாளா என்ற பயம் வந்தது.
“அம்மு நல்லா இருக்கியா?”
“நல்ல இருக்கேன் கவி .. நீ எப்படி இருக்கே ? படிப்பு எப்படி முடிஞ்சுது?”
என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேச, எனக்கு மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. நான் மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்க , கடகடவென்று சிரித்தாள்.
“அட அவர் ஒரு தினுசு. இந்த மாதிரி ஆளுங்களுக்கு பேர் “கூகுளை நம்பினோர்”. எது யார் சொன்னாலும் திருப்பிப் போய் கூகுளை செக் பண்ணுவாங்க. “
“அது உனக்குத் தப்பா தெரியல ? உள்ளத்தைப் புண்படுத்தலை ?”
“கல்யாணம் ஆனா புதுசுல கொஞ்சம் கோவம் வந்தது . அப்புறம் நான் ஒரு ஐடியா யோசிச்சேன்.”
“என்ன உன் தோசைக்கல் தீர்வா?”
“ஹா ஹா தோசைக்கல் இல்லை. முன்னாடி ஏதாவது மருத்துவம் சம்பந்தமான ஒரு கருத்து சொன்னா, அதைச் சரி பார்க்கும் பொழுது , இவரை என்ன பண்ணலாம்னு யோசிச்சு நான் என்ன பண்ணேன் தெரியுமா ? நானே ஒரு ‘பிளாக்’ (Blog) எழுத ஆரம்பிச்சேன். நிறைய விஷயங்கள் ரமேஷ் பார்த்து சொல்றது அந்த ‘பிளாக்’ல தான் . என்னோட ‘பிளாக்’ தான்னு அவருக்குத் தெரியாது . இப்போ கூட பல்லை பத்தி அதில தான் பாத்திருப்பார். அவர் அந்த ‘ப்ளாகை’ அடிக்கடிப் பாக்கறார்னு கண்டுபிடிச்சப் பொழுது எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனா ஒன்னு என்ன தெரியுமா ?அவருக்குப் பதில் சொல்லறதுக்குதான் அதைச் செய்ய ஆரம்பிச்சேன். ஆனால் அது எனக்கு நிறைய அனுபவங்களும், அறிவுப் பகிரும் ஒரு இடமாக இருந்தது . எனக்கும் நிறைய அறிவு வளர்ந்தது. கூகுளை நம்பினோர்க்கு அப்படி தான் டிரீட்மென்ட் குடுக்கணும்” சிரித்தபடி சொல்ல.
நான் மலைப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ரமேஷ் இடையில் வந்து ஏதோ பேசியபடி இருந்தான். தனக்குத் தான் தெரியும் என்பது போல அவன் பேசுவதைக் கண்டு, இன்னொரு பக்கம் அம்மு முகம் சிரித்தபடி இருக்க.
மனசுக்குள் தோசைக்கல் ஓங்கியது தெரிந்தது.
– லட்சுமி சுப்பு
வித்யாசமாகவும், விசித்திரமாகவும் யோசிக்கும் பெண். கதாநாயகி மட்டும் அல்ல கதாசிரியரும் கூட. பாராட்டுக்கள் லக்ஷ்மி. இன்றைய பெண்களுக்கு இந்த கதை ஒரு புதிய யுக்தியை (how to handle the situation, without simply getting angry for everything) கொடுத்து இருக்கிறது. பிரமாதம்