முட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா?
தற்பொழுது பெரும்பாலானோர் நகரங்களில் வாழ்ந்து, பேரங்காடிகளிலும், மளிகைக்கடையிலும் முட்டை, பால், பழம் வாங்குவதால் சமயங்களில் உணவு எங்கிருந்து வருகிறது, எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி அதிகம் கவனிப்பதில்லை. இக்காலங்களில், உயிர்க் கருவற்ற, ஆடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத முட்டைகள்தான் பெரும்பாலும் கடைகளில் கிடைக்கின்றன.
இவை கருவற்றவை என்றாலும், உயிரியல் இரசாயனப்படி நிச்சயம் விலங்கு இனத்தையே சாரும்.
அடிப்படையில், முட்டையிடும். கோழிகள் விலங்கு இனத்தைச் சார்ந்தவை எனவே முட்டை விலங்கைச் சார்ந்தது என்று ஊகித்துக் கொள்ளலாம். ஆயினும் கடையில் வாங்கும் முட்டைகள் பெரும்பாலும் கோழிப்பண்ணைக் கூடுகளில் வாழும் கோழிகளில் இருந்து பெறப்பட்டவை. இந்த முட்டைகள் சேவல் மூலம் சினைப்படுத்தப்படாமல், தனது உடற்ச்சத்தால், தான் தோன்றியாக முட்டையிடும் கோழிகளிலிருந்து பெறப்படுகின்றன.
இவ்வகை முட்டைகள் புதிய கோழியைத் தராது எனவே இவை தாவத்திரத்திற்கு சமம் என்று கருதுவோரும் உண்டு. தாவர புரதம், விலங்குப் புரதங்கள் ஆகியவை உடலில் ஜீரணிப்பதில் வித்தியாசங்கள் உண்டு. விலங்கு உணவை, தாவர உணவு என்று சொல்லி உண்பது யதார்த்ததிற்கு அப்பாற்பட்டது என்பது எனது தனிப்பட்ட கருத்து .
சைவம், அசைவம் எனும் கோட்பாடுகள் மனிதர் தமக்குள் உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான்; ஆயினும் இயற்கையில் இந்த உணவுகளில் சில வித்தியாசங்கள் உண்டு.
முட்டைகளை பற்றி சிறிது ஆய்ந்து பார்ப்போம்.
முட்டையின் இரசாயன அமைவு
பூமியில் வாழும் எல்லா ஜீவன்களிலும் நான்கு வகை பிரதான மூலகங்கள் காணப்படும். அவையாவன மாச்சத்து (carbohydrates), புரதம் (proteins), கொழுப்பு (Lipids) மற்றும் உட்கரு அமிலங்கள் (Nuclec acids).
இந்த நான்கு மூலகங்களும் பலவாறு கட்டப்படும் போது தான் உலகில் வாழும் பல்வேறு உயிரினங்களும் உருவாகின்றன. இவற்றில் புரதங்கள் அமினோ அமிலங்கள் கொண்டு அமைகின்றன. அமினோ அமிலங்களின் வித்தியாசமான கட்டுமானங்கள் பல வித்தியாசமான புரதங்களை உருவாக்குகின்றன். இதே போல் கொழுப்புக்கள், மற்றும் உட்கரு அமிலங்கள் – உட்கரு மூலம் (Nuclitieds) எனப்படும் உயிரியல் இரசாயனத்தால் உருவாக்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட மூலகங்கள் இயற்கையில் காணப்படும் அமீபா, நாடாப்புழு போன்ற எளிய உயிரினங்களில் இருந்து பாரிய திமிங்கிலம், ஆல மரம் போன்ற விருட்சங்கள் வரை மிகவும் ஆழமான, சிக்கலான மூலக வடிவமைப்புக்கள் கொண்டு அமைவுறும். எனவே நாம் பொதுவாகப் பார்த்தால் இந்த உயிரியல் இராசயன கட்டமைப்பு தாவரவியல், விலங்கியல், மற்றும் இடை நடு உருவகங்களையும் அமைக்கின்றன எனலாம்.
இந்த வகையில் பார்த்தால், புரதங்கள் உயிரியல் இரசாயனத்தில் பிரதான கட்டுமான மூலகங்களே ஆகும். புரதங்களை ஆக்கும் அமினோ அமிலங்களில் தாவரப் புரதங்களில் காணப்படுபவை மற்றும் விலங்குப் புரதங்களில் காணப்படுபவை என்ற வேறுபாடுகளும் உண்டு.
முட்டைப் புரதங்கள்
முட்டையானது கருவுற்றதா, இல்லையா என்பதை மூன்று வகையான உள்ளுருவக விதங்களைக் கொண்டு அறியலாம். இந்த முட்டைப் புரதங்களை முட்டைக் கோது, வெண்கரு, மஞ்சள் கரு என மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம் .
முட்டையின் உள்பகுதி மஞ்சள் கரு சார்ந்த புரதங்கைளக் கொண்டிருக்கும். மஞ்சள் கருவானது விலங்குப் புரதங்கள் (phosvitin, livetin) போன்றவற்றைக் கொண்டு அமைந்தது.
அடுத்ததாக முட்டையின் வெண்கரு பிரதான மாக நான்கு வகைப் புரதங் களைக் கொண்டு அமைந்தது. (ovotranferin. ovoglobulin, cystain,ovidin) இவை விலங்குத் தசைகளில் காணப்படும் புரதங்களைக் கொண்டு அமைந்தவை.
இறுதியாக முட்டைக்கோது படிப்படியாக புரத, சுண்ணாம்புச் சுவர்கள் அமைக்கப்பட்ட பகுதியாகும். அதில் காணப்படும் அடுக்குகள் கோதாவை (ostiopontin) எனப்படும் புரதமாகும். இந்தப்புரதம் முட்டைக் கோதுப் புரதம் பல்லிலும், எலும்பிலும் காணப்படும். இந்தப் புரதமானது கோழியின் கருவறையில் சுரக்கப்பட்டு, சுண்ணாம்பு மூலகத்துடன் வலுவான முட்டையின் கோதை அமைக்கும்
மேலுள்ள ஆதாரங்கள் யாவும், முட்டை கருவுற்றதா, இல்லையா என்பதை சர்ச்சையின்றி நிரூபிக்கிறது.
தாவர போசனம் மாத்திரம் உண்பவர் குறிப்பிட்ட சில விலங்குப் புரதங்களைப் பெற முடியாதிருப்பர். சிலர் முற்று முழுதாக தாவர போசணிகள் அல்லர். இவர்கள் பால், நெய் போன்ற விலங்குப் புரதங்களை உட்கொள்ளுவர். எனினும் முட்டையை அகற்றி வைத்து அது மாத்திரம் விலங்கு என்பர். இன்னும் சிலர் காளான்கள் விலங்குப் புரதம், மாசு உள்ளது என்றெல்லாம் சித்தப் பிரமை கொள்வர்.
எனினும் பெரும்பான்மை மக்கள் தமது வாழ்நாளில் உடலைக் கட்டியெழுப்ப, பராமரிக்கத் தேவையான புரதங்களை உட்கொள்வது அவசியம். ஆயினும் ஒரு சிலர் கருவில்லாத முட்டை தாவரம் போன்றது; எனவே இது சைவம்; அதனால் நம்மைப் போன்ற தாவர உணவாளர்கள் இதனை உண்ணலாம் என்பது முற்று முழுதாகத் தவறான அபிப்பிராயமேயாகும்.
சைவம், அசைவம் சாப்பிடுவது அவரவர் சித்தம். எனினும் நாம் சாப்பிடுவதை அறிந்து உட்கொள்ளலும் நலமே.
– யோகி