வென்ச்சரஸ் வெகேஷன்
”ஏன்னா… அந்த ரிஸார்ட் பத்தி எல்லாம் படிச்சுப் பாத்தேளா?… இன்னும் ஒரு வாரங்கூட இல்லன்னா ட்ரிப்புக்கு.. தெரியாத நாடு, புரியாத பாஷை… ஏதோ பாத்து புக் பண்ணிட்டேன்.. கொஞ்சம் எல்லாத்தயும் படிச்சு ப்ரிப்பேர் பண்ணி வைங்கோ… ப்ளீஸ்…” சமையலறையில் பால் கேனைக் கையிலெடுத்து, காஃபி போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி.
“சரிடி… பாத்துடலாண்டி.. இன்னும் ஒரு வாரம் இருக்கே..” ஹாலில் உட்கார்ந்து கொண்டு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் அமெரிக்கன் ஃபுட்பால் கேமிற்கான, தனது ஃபாண்டஸி அணிகளை செட்டப் செய்து கொண்டே, பதிலளித்துக் கொண்டிருந்தான் கணேஷ்.
அடுத்த வாரம் குடும்பத்துடன் ஸ்விட்சர்லாந்து ட்ரிப் போகிறார்கள். ஒரு வார காலம் வேலை, மற்றும் தினசரி ரொடீன் லைஃபிலிருந்து விடுதலை. ஃப்ளைட் டிக்கெட் புக் செய்த தினத்திலிருந்து, சிறியவளின் குதூகலத்திற்கு எல்லையே இல்லை. தினம் காலை எழுந்தவுடன் கௌண்ட் டௌன் தொடர்ந்து கொண்டிருந்தது. அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் என்ற கற்பனைகள். பெரியவள் மகிழ்ச்சியிலிருந்தாலும், “ஒய் ஸ்விஸ்… ஒய் நாட் க்ரீஸ்?” என்ற தனது பாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். பெர்ஸி ஜாக்ஸன் புத்தகங்களையும், சினிமாக்களையும் பார்த்து, கிரேக்க நாகரிகத்திலும், நகரங்களிலும் பெருமளவு ஈடுபாடு வரவழைத்துக் கொண்ட பதின்பருவம்…..
கணேஷின் ஈடுபாடு எப்பொழுதும் போல் ஃபுட்பால், ரைட்டிங்க், ரீடிங்க்… ஆஃபீஸ் – என்று அதே வரிசையில் தொடர – ஸ்விட்சர்லாந்த் ரிஸார்ட் பற்றிப் படிப்பதை மறந்தே விட்டான். நாளை ஃப்ளைட், இன்று நினைவுக்கு வந்தவனாக புலம்ப ஆரம்பித்திருந்தான். “நான் அன்னைக்கே தலைல அடிச்சுண்டேன்.. இந்த ஆத்துல என் பேச்ச ஆரு கேக்குறா…” சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது குறைகளை அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி. “சரிடி, சரிடி… எல்லாத்தையும் டௌன்லோட் பண்றேன்… எட்டு மணி நேரத்துக்குமேல ஃப்ளைட்ல டைம் இருக்கே…” விடாமல் ஏதோவொரு ப்ளான் போட்டுக் கொண்டான்.
“ஹௌ மெனி டூ செக் இன்?” கேட்ட வெண்ணிற நளின மங்கையிடம், “செவன்” என்று வழிந்து கொண்டே பதில் சொன்னான் கணேஷ். இவன் வழிகிறான் என்று புரிந்தாலும், ஏதும் புரியாத அப்பாவியாய், ப்ரொஃபஷனல் புன்னகையையும் தொலைத்து விட்டு, ‘யூ ஹேவ் த அலவன்ஸ் ஃபார் ஒன்லி ஃபோர்” என்றாள் அவள். “வாட்…. வி ஆர் ஃபோர் பேஸஞ்சர்ஸ்.. டோண்ட் வி கெட் டூ ஈச்?” என்ற கணேஷை, வந்துட்டானுக ஆட்டிக்கிட்டு என்ற ரீதியில் பார்த்துவிட்டு, அந்த வெள்ளைப் பதுமை “நோ, ஒன் ஈச்” என்றாள். “இதுகூடத் தெரியாம எவ்வளவு பேக் பண்ணியிருக்க பாரு” என்று லக்ஷ்மியை நோக்கிக் கூச்சலிட்டு விட்டு, அந்த வெள்ளைப் பதுமையை நோக்கி மிகவும் கனிவான குரலில், “வாட் டு வி டூ நௌ?” என்றான். “வெல்… இட்ஸ் ஹண்ட்ரெட் அண்ட் டென் டாலர்ஸ் ஃபார் எவ்ரி எக்ஸ்ட்ரா லக்கேஜ்” என்று சற்றும் தயக்கமின்றி பதிலளித்தாள். “ஓ மை காட்… த டோடல் காண்டண்ட் வோண்ட் பி வொர்த் தட் மச்” என்றவனுக்கு பதில் ஏதும் கூறாமல், “வாட்ஸ் த ஃபார்ம் ஆஃப் பேமெண்ட்?” என்றாள்.
“நீதான் டிக்கெட் புக் பண்ணின… இதெல்லாம் கூட பாக்க மாட்டியா?” திட்டிக் கொண்டே செக்யூரிடி லைனில் நின்று கொண்டிருந்தான். சுற்றி நின்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் இவன் கோபத்திலிருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தது. அந்த பப்ளிக் ப்ளேஸில் வேண்டாமென்று அமைதியாக இருந்தாள் லக்ஷ்மி. புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்று தெரிந்தாலும், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இன்னும் தொடர்ந்து திட்டிக் கொண்டேயிருந்தான். ”பேக் பண்ணின் பீத்தல் சமாஜாரத்துக்கு நூத்திப்பத்து டாலர், ஒவ்வொரு சூட் கேஸுக்கும் அழுதிருக்கேன்… பணத்தப்பத்தி ஏதாவது கவலையிருந்தாத்தானே… என்ன மாதிரி கஷ்டப்பட்ட குடும்பத்துல பொறந்திருந்தா பணத்தோட வேல்யூ தெரியும்… ஜமீந்தாரர் பேத்தியாச்சே….” தொடர்ந்து கொண்டிருந்தான். லக்ஷ்மி, “போதும், இவ்வளவுதான் உனக்கு மரியாதை” என்கிற ரீதியில் ஒரு பார்வை பார்க்க, சற்றுக் குறைத்துக் கொள்வது நலமென்று நினைக்கத் தொடங்கினான்.
”ஏன்னா… க்யூவுல நின்னு வெஜிடேரியன் மீல்ஸ் கன்ஃபர்ம் ஆய்டுத்தான்னு கேட்டுக்கோங்கோ ப்ளீஸ்…. அப்டியே சீட்டெல்லாம் பக்கத்துல பக்கத்துலதானான்னு பாத்துடுங்கோ…” இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே கேட்டிற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து விட்டு, தொணதொணத்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி. தான் மட்டும் பயணம் செய்யும்பொழுது ஃப்ளைட் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் மட்டுமே கேட்டிற்கு அருகில் சென்று பழகியிருந்த கணேஷிற்கு, இவ்வளவு முன்னர் வந்து காத்திருப்பது கொடுமையாயிருந்தது. அதிலும் இவளின் தொணதொணப்பு வேறு.. இதிலிருந்து தப்பிப்பதற்கு, க்யூவில் நிற்பதே மேல் என்று முடிவு செய்தான்.
“அப்டி இப்டி பேசி, பக்கத்து பக்கத்து சீட் வாங்கிட்டேண்டி… “ என்று பெருமையடித்துக் கொள்ள, அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாது, “வெஜிடேரியன் மீல்ஸ் கன்ஃபர்ம் ஆய்டுத்தா?” என்று தனது அடுத்த கட்டளையை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள். தொடர்ந்து, “சரி சரி, அந்த ஜ்யூரிச் ரிஸார்ட் பத்திப் படிச்சுடுங்கோ… ஏர்போர்ட்ல இருந்து இந்த ஏழு சூட்கேஸ், ஹேண்ட் லக்கேஜ் எல்லாம் எடுத்துண்டு எப்டி போறதுன்னு பாத்துடுங்கோ” என்றவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டே சேரில் சென்று அமர்ந்தான் கணேஷ்.
”வாட் வுட் யூ லைக் டு ட்ரிங்க்?” மது பானங்களையும், மற்ற குளிர் பானங்களையும் ஒரு தள்ளு வண்டியில் வைத்து நகர்த்திக் கொண்டே வந்த ஏர் ஹோஸ்டஸ் கணேஷிடம் கேட்ட கேள்வி. அளவாய் பூசப்பட்ட மேக்கப், நேர்த்தியாய் வாரப்பட்ட தலை, முழுவதுமாய் மறைக்காமல் தெருவோரக் கடையெனத் திறக்காமல் ஒய்யாரமாய்க் காட்டிக் கொள்வதற்காக அணியப்பட்ட ஆடைகள், பளபளவென்று ஜொலித்த அழகுப்பதுமையைப் பார்த்தவுடன் பக்கத்திலிருந்த லக்ஷ்மியை ஒரு கணம் மறந்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். “சர்… வாட் வுட் யூ லைக் டு ட்ரிங்க்” என்று மறுமுறையும் கேட்டவுடன் இந்த உலகத்திற்குத் திரும்பி வந்த கணேஷ், “ஆங்… ஆம்… வாட் கைண்ட் ஆஃப் ஸ்காட்ச் டு யூ கேரி…” தான் மிகவும் எலீட் என்று காட்டிக் கொள்வதற்காகக் கேட்ட கேள்வி. “வி ஹேவ் டிவார் சர்…” பொலைட்டாக பதிலளித்தவளைத் தொடர்ந்து, “ஐ’ல் கோ ஃபார் தட்…” என்றான் கணேஷ். “ஹௌ வுட் யூ லைக் டு ஹேவ் இட் சர்… ஆன் த ராக்ஸ்? ஆர் க்ளப் சோடா…” என்றவளை இடைமறித்து, “நீட், ப்ளீஸ்…” தன்னை மாச்சோ மேனாகக் காட்டிக் கொள்ளும் முயற்சி. முழுவதையும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி, பொறுக்க முடியாமல், “போறும், போறும்… நம்ம பெரியவளைவிட நாலு வயசு ஜாஸ்தியா இருக்கும் அவ்வளவுதான்.. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோங்கோ…” ஒரே வரியில் கணேஷின் ஈகோ முழுவதையும் தரையில் போட்டுத் தேய்த்தாள் அவள்…
இரண்டு மூன்று முறை ”டிவார் நீட்” வாங்கிக் குடித்துவிட்டு, முழுவதுமாய்த் தூங்கிப் போனவனை உலுக்கி எழுப்பியது கேப்டனின் அறிவிப்பு… விமானம் தரையிறங்கத் தயாராகிறது என்று உணர்ந்து, அவசர அவசரமாய் ரெஸ்ட் ரூம் சென்று வந்தான். அதற்குள் சீட் பெல்ட் அன்னௌன்ஸ்மெண்ட்ஸ், ட்ரே டேபிளை மடித்து வை, சீட்டை நிமிர்த்தி வை, கம்ப்யூட்டரை அணைத்து வை என்று ஒன்று மாற்றி ஒன்று… அப்பொழுதுதான் உணர்ந்தான், ஏர்ப்போர்ட்டிலிருந்து ரிஸார்ட்டுக்குப் போவது எப்படி என்று இன்னும் முடிவு செய்யவில்லையென்று. “சரி, சரி, இறங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனை அர்ச்சனை செய்வதற்கு ஆயத்தமானாள் லக்ஷ்மி. மினியாபோலிஸ் ஏர்ப்போர்ட்டில் வாங்கிய அனைத்தையும் வட்டியும் முதலுமாகக் கொடுத்துத் தீர்க்க வேண்டுமல்லவா!
”தேக் த ஸட்டில்…. கெத் தௌன் அத் த யூதிகான் வால்தெக்.. தேக் எஸ் தென் த்ரெய்ன் அண்ட் கெத் தௌன் அத் யூத்லிபெர்க்” என்ற ஜெர்மன் லேடியிடம் “ஹாங்?… வாட்… குட் யூ ப்ளீஸ் ரிபீட்” என்று நடனமாடிக் கொண்டிருந்தான் கணேஷ். அவன் கொடுத்த ரிஸார்ட் அட்ரஸ் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்துவிட்டு அவள் கொடுத்த டைரக்ஷன்ஸ் அது. பலமுறை அவள் ரிபீட் செய்தும் அவளது ஆக்ஸண்ட் அவனுக்கு விளங்கவில்லை. கடைசியாகப் புரிந்தது, வலது புறம் திரும்பி “ஷட்டில் பஸ்” என்ற சைனிருந்த கதவு வழியே வெளியேறினால் அங்கே வேன்கள் நின்று கொண்டிருக்கும், முதலில் நிற்கும் வேன் டிரைவரிடம் இந்த பேப்பரைக் கொண்டு கொடு, அவர் உன்னை சேருமிடம் சேர்த்து விடுவார் என்பதே. அதையே நம்பிக் கொண்டு குழந்தை குட்டிகளைக் கூட்டிக் கொண்டு, ஏழு பெரிய சூட் கேஸ்களையும், மூன்று சிறிய சூட்கேஸ்களையும் கார்ட்டில் வைத்துத் தள்ளிக் கொண்டு, நடக்கலானான்.
அதே போல் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிய முதல் டிரைவர், மூட்டையும் முடிச்சுமாய் வரும் இவனைக் கழட்டி விட்டுவிட்டு, பின்னால் இருந்த வேனில் அனுப்பி விட்டார். பின்னால் இருந்த டிரைவர் கரிசனத்துடன் சூட்கேஸ்களை லோட் செய்வதற்கு உதவ, அவர் மிகவும் நல்லவர் என்ற எண்ணத்துடன் அவரைப் பின் தொடர ஆரம்பித்தனர் கணேஷ் குடும்பம். அனைத்து சூட்கேஸ்களையும் பின்னால் அடுக்கிய பின்னர், பாஸ்போர்ட் பணம் இருக்கும் சிறிய தோள் பையை மாத்திரம் தன்னுடனேயே வைத்துக் கொண்டே உள்ளே ஏறி அமர்ந்து கொண்டான் கணேஷ். டிரைவர் ஜி.பி.எஸ்ஸில் இவன் கொடுத்த பேப்பரிலிருந்து பார்த்துப் பார்த்து டைப் செய்து கொண்டார். சற்று அருகில் சென்று பார்க்கையில், ஏதோ புரிந்ததுபோல் இருந்தது ஆனால் எதுவும் புரியவில்லை. சற்றுக் கூர்ந்து கவனித்ததும் புரிந்தது ஆங்கில எழுத்துக்களில் ஜெர்மன் லாங்க்வேஜ். அந்த டிரைவருக்கு, “மிஸ்டர்” என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறு ஒரு ஆங்கில வார்த்தையும் தெரியாது என்பது விளங்குகையில் கார் ஒரு ஐந்து கிலோ மீட்டர் தூரம் வந்துவிட்டிருந்தது. ”செத்தாண்டா சேகரு…” சிறியவள் தனது மழலை ததும்பும் அமெரிக்க ஆக்ஸண்ட் தமிழில் சொல்ல, அனைவரும் சற்று நெர்வஸாகச் சிரித்தனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம். சாலையின் இரண்டு பக்கங்களிலும் காணும் காட்சிகள் வெகு வித்தியாசமாக இருந்தது. கடைகளும், தெருக்களும் அனைத்துமே அமெரிக்காவில் காண்பதிலிருந்து வேறுபட்டு இருக்க, வேடிக்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ”நா புக் பண்ன ரிஸார்ட் இந்த மாதிரி ஸிடி ஸைட்ல இல்ல… ரொம்ப அலூஃபா.. திக் ஃபாரஸ்ட்டுக்கு மத்தியில.. நன்னா அமங்க்ஸ்ட் நேச்சர்… சூப்பரா இருந்துது ஃபோட்டோல.. வி ஷுட் பி தேர் சூன்… ஐம் சோ எக்ஸைட்டட்…” தான் செய்த ரிஸர்ச் குறித்து பிராக் செய்யத் தொடங்கியிருந்தாள் லக்ஷ்மி.
மேலுமொரு பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு, வேன் ஒரு இடத்தில் நின்றது. அது ஒரு வீடு போலிருக்க, சுற்றிச் சிறு சிறு கடைகள். ரோட் கீழிருந்து மேல் ஒரு மலை மேல் ஏறுவது போன்ற இடத்தில் நிற்க, டிரைவர் திரும்பி கணேஷைப் பார்த்தார். பார்த்துவிட்டு, வேக வேகமாய் ஏதோ ஜெர்மன் மொழியில் சொல்ல, ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சற்று நேர அபிநயங்களுக்குப் பின்னர், நீங்கள் கேட்டு வந்த இடம் இதுதான் என்கிறார் என்று புரிந்தது. எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அது ரிஸார்ட் இல்லையென்று தெரிகிறது, ஆனால் இந்த ஜெர்மன் மனிதருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. எதையெதையோ ஜாடை காட்டி, கடைசியில் இது இல்லையென்று விளக்கி, அட்ரெஸை மறுபடியும் ஜி.பி.எஸ்ஸில் எண்டர் செய்ய வைத்து, அவரும் எங்கெங்கோ ஓட்டத் தொடங்கினார்.
இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்கள், ஜி.பி.எஸ் சுத்திச் சுத்தி அலைக்கழிக்க, ஜெர்மன் டிரைவருக்கோ கடுங்கோபம். எதையெதையோ அவர் கூற, அவற்றில் விளங்கிய ஒரே வார்த்தை “மிஸ்டர்” மட்டுந்தான். வழியில் அங்கங்கு நிறுத்தி, இரண்டு மூன்று நபர்களிடம் வழி கேட்டாகிவிட்டது. ரிஸார்ட்டுக்காகக் கொடுக்கப் பட்டிருந்த தொலைபேசிக்கு பலமுறை ஃபோன் செய்து பார்த்தாகி விட்டது. ஒரு வழியும் பிறக்கவில்லை. கொண்டு வந்திருந்த அமெரிக்கக் கைபேசிகளில் சிக்னல் கிடைக்கவில்லை, கூகிள் செய்து பார்ப்பதற்கும் வழியில்லை. அந்நிய நாட்டில், குழந்தை குட்டிகளுடன், பத்து சூட்கேஸ்களுடன், ஒரு கோபக்கார ஜெர்மானிய டிரைவரின் பிடியில் ரோடில் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாகச் சுற்றியாகியாயிற்று. ஒரு வழியும் பிறக்கவில்லை. மாலை கவிழ்ந்து சற்று இருட்டும் வரத் தொடங்கியது.
ஜெர்மானிய டிரைவரின் கோபம் அதிகரித்துக் கொண்டே போக, அவர் தனது ஆஃபீஸுக்கு ஃபோன் செய்து ஆங்கிலம் பேசும் ஒருவரைப் பிடித்து, ஃபோனை கணேஷ் கையில் கொடுத்து பேசுமாறு சைகை செய்தார். மறுமுனையில் ஆங்கிலம் பேசிய மனிதர் கூறியதன் சாராம்சம் இதுதான். “நீங்கள் போக வேண்டிய இடத்தின் முகவரி உங்களுக்குத் தெரியவில்லை; மூன்று மணி நேரங்களாகச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்; இதற்குப் பொறுப்பு நீங்கள்தான். பேசிய பணத்தைவிட அதிக நேரமானதற்கான பணத்தையும் கொடுக்க வேண்டும். எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே அவர் இறக்கிவிட்டு வந்து விடுவார்”. கேட்ட கணேஷிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; அதிகப் பணம் கொடுப்பதற்குத் தயார், ஆனால் நடுத்தெருவில் மனைவி குழந்தைகளோடும் பத்துப் பெட்டிகளோடும் எப்படிச் சமாளிப்பது என்று அவரிடம் மன்றாடத் தொடங்கினான்.
அவன் மன்றாடிக் கொண்டிருக்கையில், அவர்களது வேன் ஆளரவம் இல்லாத ஒரு ரெஸிடென்ஷியல் ஏரியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ரோ ஹவுஸ் போல் பல வீடுகள் தெருவில் வரிசையாய் அமைந்திருந்தன. எந்த வீட்டிலும் மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. மொத்தத் தெருவும் கிட்டத்தட்ட மயான அமைதியாய் காணப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்தாறு வீடுகளைத் தாண்டி, ஒரு வீட்டு கராஜ் மட்டும் திறந்திருந்தது. சற்று அருகில் வர, அந்த கராஜில் ஒரு கார் நின்று கொண்டிருப்பதும், அந்தக் காரின் ட்ரங்கிலிருந்து ஒரு வெள்ளை மனிதன் எதையோ எடுப்பதும் தெரிய ஆரம்பித்தது.
தொலைவிலிருந்து பார்க்கையில், அந்த மனிதன் சற்று டீஸண்ட்டாக இருப்பதுபோல் பட்டது கணேஷிற்கு. அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டத் தொடங்கினான் கணேஷ். உள்ளூர் மனிதனாக இருப்பதால், தான் போக வேண்டிய ரிஸார்ட்டுக்கு வழி தெரிந்திருக்குமென்ற நம்பிக்கையில் சற்று தைரியம் வரத்தொடங்கியிருந்தது அவனுக்கு. ஜெர்மானிய டிரைவரிடம் மறுபடியும் சைகை பாஷையில், அந்த வெள்ளையனின் வீட்டிற்கு அருகில் வேனைக் கொண்டு நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான். அவரும் அதைப் புரிந்து கொண்டு, அதுதான் சரியானது என நினைத்து அவனை நோக்கி வண்டியோட்டத் தொடங்கினார்.
ட்ரங்கிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த மனிதன் திரும்பி, தன்னை நோக்கி வரும் வேனை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வேன் அவனை அருகில் நெருங்குகையில், கணேஷுக்கும் ஜெர்மானிய டிரைவருக்கும் புரிய ஆரம்பித்தது. அந்த வெள்ளையன் கையில் வைத்திருந்தது ஒரு நீளமான, கரிய நிறமுடைய மெஷின் கன் …..
- மதுசூதனன்