ஹாங்காங்கில் என்ன நடக்கிறது?
அண்மைக் காலங்களில், தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று, உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்து வருகிறது ஹாங்காங். சீனாவுக்கு கிழக்காக கவ்லூன் மற்றும் பல புதுப் பிரதேசங்களையும், லண்டாவ், ஹாங்காங் உட்பட பல தீவுகளையும் உள்ளடக்கிய பகுதி ஹாங்காங். இன்றைய தேதியில் சீனக் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தாலும், ‘ஒரு தேசம் இரண்டு முறைமைகள்’ (One country ; two systems) என்று சற்று வித்தியாசமான உடன்பாட்டைக் கொண்டது ஹாங்காங் மீதான சீன ஆளுமை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல், உலக நிலப்பகுதிகள் பலவற்றைத் தனது குடையின் கீழ் கொண்டுவந்து தங்களது வியாபாரத் தளங்களாகப் பாவித்து வந்த பிரித்தானிய பேரரசு, கிழக்கிந்திய பகுதிகளில் காலூன்றிய பிறகு அடுத்த இலக்காக சீனாவை நோக்கி நகரத் தொடங்கியது. சீனத் தேயிலை, பீங்கான் பொருட்கள் மீது தீராத மோகம் கொண்ட பிரித்தானியர்கள் அவற்றை ஏகத்துக்கும் இறக்குமதி செய்தனர். குறிப்பாகத் தேயிலைக்கு ஈடாக வெள்ளி உட்பட எதையும் தரத் தயாராகயிருந்தார்கள் அவர்கள். ஒரு கட்டத்தில் தேயிலைக்காக அவர்கள் கொடுத்து வந்த வெள்ளி நாணயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. வெள்ளிக் காசுகளுக்குப் பதிலாக ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுத்த பண்டமாற்று பொருள் அபின் வகையான ‘ஓபியம்’ எனப்படும் போதை தரும் வலி நீக்கும் மருந்து. அன்றைய இந்தியாவின் வங்கப்பகுதிகளில் (இன்றைய வங்காளதேசம்) இச்செடிகளை வளர்த்து சீனாவில் விற்கத் துவங்கினர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர். தொடக்கத்தில் வலி நிவாரண குணங்களுக்காக ‘ஓபியம்’ பயன்படுத்தத் துவங்கிய சீனர்கள் காலப்போக்கில் அதன் போதைக்கு அடிமையாகிப் போயினர். மெதுவே இதை உணர்ந்த சீன மன்னர்கள் ஓபியம் இறக்குமதியாவதைத் தடுக்க முயன்றனர். அன்றாடம் கப்பல்களில் வந்திறங்கிய ஓபியத்தை தீயிட்டு எரித்தனர். தேயிலை வியாபாரிகள், ஓபியத்தை, பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தத் தடை விதித்தனர். இறக்குமதிகளை கட்டுக்குள் வைக்க பல துறைமுகங்களை மூடி, அனைத்து இறக்குமதிகளும் ‘காண்டான்’ (Canton) துறைமுகம் வழியாக மட்டுமே நடைபெறுமாறு செய்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு தேயிலை தடைப்பட்டதுடன், ஏகப்பட்ட பொருளிழப்பும் உண்டானதால் வணிகப் பற்றாக்குறை (Trade deficit) ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட தூதரக பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துவிட, சீற்றமடைந்த பிரித்தானியர்கள், சீனா மீது போர் தொடுத்தனர். 1839ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் நடைபெற்ற ‘முதலாம் ஓபியம் போர்’ (First Opium War) முடிவில் சீனாவின் துறைமுகப் பகுதிகள் பலவும் ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்கின. தங்களது படைத்தளங்களை ஹாங்காங் தீவுகளில் அமைத்துக்கொண்டு அதிக வலிமையுடன், நான்கிங் நோக்கி முன்னேறி வந்த பிரித்தானியப் படைகளை முறியடிக்க முடியாமல் சீன அரசு போர் நிறுத்தம் கோரியது. போரை நிறுத்த வேண்டுமெனில் தாங்கள் அதுவரையில் கைப்பற்றியிருந்த நிலப்பகுதிகள் தங்களுக்கே சொந்தமென பிரித்தானியர்கள் கேட்டபொழுது, அந்தப் பகுதிகளை 99 ஆண்டுகள் விலையில்லா குத்தகைக்கு தர ஒப்புக்கொண்டனர் சீனர்கள்.
1842 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் கையெழுத்திடப்பட்ட ‘நான்கிங் ஒப்பந்தம்’ (Treaty of Nanking / Nanjing) ஹாங்காங்கை பிரித்தானிய காலனிகளின் கீழ் கொணர்ந்தது. 1898 ஆம் ஆண்டு ‘இரண்டாம் பெய்ஜிங் மாநாடு’ (Second Convention of Beijing) மூலம் மேலும் சில பகுதிகளில் தங்களது ஆதிக்கத்தை வளர்த்துக்கொண்டு மேலும் 99 வருடங்களுக்கு குத்தகையைப் புதுப்பித்துக் கொண்டது பிரிட்டன்.
முக்கியத் துறைமுகங்களைக் கொண்டிருந்த ஹாங்காங், ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கீழ் கல்வி, போக்குவரத்து, தொழிற்துறை வளர்ச்சியடைந்து, ஜனநாயகச் சுதந்திரம் பெற்று, பன்முக கலாச்சாரங்கள் கொண்ட பகுதியாக உருவானது. ஹாங்காங் ஜனத்தொகையில் பெரும்பாலும் சீனர்கள் இருந்தாலும், இவர்கள் தங்களை ‘ஹாங்காங்கர்’ என்றே அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். ஆங்கிலேயர்களின் ஜனத்தொகையும் இங்கு கணிசமான அளவிலுள்ளது.
குத்தகைக் காலம் முடிவதற்கு முன்பே சீனாவும், பிரித்தானிய அரசும் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தின, சீனாவின் கம்யூனிச அரசாங்கம், ஹாங்காங் முழுதையும் சீனாவுக்குத் திரும்பத் தரவேண்டும் என்று உறுதியாக நின்றது. இதன்படி 1984 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் பிரதமரான மார்கரெட் தாட்சரும், சீன அதிபரான ஸாவ் சியாங்கும் சீன பிரிட்டிஷ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சம் தான் ‘ஒரு நாடு ; இரு முறைமைகள்’ கொள்கை. இதன்படி ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங் குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத் தன்மையையும் பாதுகாத்து சுயாட்சியை அனுபவிக்கும். வெளிநாட்டு உறவு, மற்றும் பாதுகாப்பு துறைகளை மட்டுமே சீன அரசாங்கம் நிர்வகிக்கும்.
சீனர்களுக்கு கிடைக்காத ஜனநாயக, கருத்து, பேச்சு சுதந்திர உரிமைகள் பலவற்றையும் ஹாங்காங் மக்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கென தனி நாணயம், சட்ட, அரசியலமைப்புகள் உள்ளன. இப்படி பல உரிமைகள் இருந்தாலும், ஹாங்காங்கின் தலைவரை நியமிக்கும் பொறுப்பை மட்டுமே சீனா பெற்றுள்ளது. மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக முறைப்படியல்லாது சீன அரசாங்கத்துக் குழுவினர் பரிந்துரைக்கும் ஒருவரே ஹாங்காங்கின் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுவார். இப்படி இன்று இந்தப் பொறுப்பில் இருப்பவர் கேரி லாம். (Carrie Lam).
கடந்த சில வருடங்களாக ஹாங்காங்கின் இந்த சுயாட்சி அதிகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த சீன அரசியல் கட்சிகள் ஹாங்காங் முழுதையும் சீன அரசியல் சட்ட அமைப்புக்குள் கொண்டு வரவேண்டும் என முனைந்துவருகின்றன. மெதுமெதுவே சில சட்ட மசோதாக்கள் மூலம் சுயாட்சி அதிகாரத்தை முடக்கும் முயற்சிகளும் அரங்கேறின.
குறிப்பாக இரு பகுதியில் நிலவிய வேறுபட்ட சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை வெறுத்தவர்களும், சீனப் பகுதிகளில் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிலரும் ஹாங்காங் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். இவர்களைத் திரும்பவும் தங்கள் நாட்டு சட்ட கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வர எத்தனித்த சீன அரசாங்கம், இந்தாண்டின் துவக்கத்தில், தப்பியோடிய குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்களை ஹாங்காங்கிலிருந்து வெளியேற்றும் சட்டத் திருத்தத்தை கேரி லாம் மூலம் அறிவித்தனர்.
இவ்வித திருத்தங்கள் மூலம் 2047 வரை தங்களுக்கிருக்கும் சுயாட்சி உரிமையை அபகரிக்க சீன அரசாங்கம் முயல்வதைக் கண்டித்து ஜூலை மாதம் சிறிய அளவில் உருவான கிளர்ச்சி, பெரும் போராட்டமாக வெடித்தது. லட்சக்கணக்கானோர் அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொதுவிடங்களில் தங்கி, தொடர்ந்து போராடி வந்தனர். மென்மேலும் மக்கள் ஒன்றுகூட போராட்டம் வலுபெற்று ஹாங்காங்கின் பெரிய விமானத்தளங்களைச் செயலிழக்கச் செய்த பின்னர், ஹாங்காங்கின் சிறப்புச் செயலதிகாரியான கேரி லாம் இந்த மசோதாவை, தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். எனினும் இந்த மசோதா முழுமையாக விலக்கப்படவேண்டுமென்றும், ஹாங்காங்கின் சுயாட்சியை மதிக்காத கேரி லாம் பதவி விலகவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
சமீபக் காலங்களில் பொருளாதார ரீதியாக சீனாவுடன் மாற்றுக்கருத்து கொண்டுள்ள அமெரிக்க அதிபரான டானல்ட் ட்ரம்ப் உட்பட பல தலைவர்களும் ‘சீன அரசாங்கம் ஹாங்காங் மீதான ஆதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்’ என்ற கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ இது போன்று ‘ஒரு நாடு ; இரு முறைகள்’ என்ற அடிப்படையில் தான் ஜம்மு காஷ்மீர் இருந்து வந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த ‘இரு முறைகள்’ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு முழுமையாக இந்திய அரசியலமைப்புக்குள் ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளாக உருவெடுத்துள்ளன.
பொதுவாக, மாற்றங்கள் நேர்கையில் உடனடியாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்புவது சகஜம். இதன் சாதக பாதகங்களை வருங்கால வரலாறு தான் நிர்ணயிக்கும் என்றாலும், இன்றையச் சூழலில் இவ்வகை மாற்றங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
– ரவிக்குமார் –